பண்டிகைகள் ஆரம்பமாயின!

தியானம்: 2025 நவம்பர் 15 சனி | வேதவாசிப்பு: 2 நாளாகமம் 30:1-9,15-27

YouTube video

எருசலேமில் மகாசந்தோஷம் உண்டாயிருந்தது; …சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள் முதற் கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை (2நாளா.; 30:26).

ஒரு மகிழ்ச்சியான குடும்பம் உருவாகும்போது மிக்க மகிழ்ச்சியும் உண்டாயிருக்கும். ஆனால் அந்தக் குடும்பம் உடையுமானால் அந்த வேதனை சொல்லி முடியாது. அந்தக் குடும்பம் மீண்டும் மனதார ஒன்றிணையுமானால் அதனால் உண்டாகும் மகிழ்ச்சி முந்தியதிலும் அதிகமானதாவே இருக்கும் என்பதை மறுக்கமுடியாது.

இதுதான் அன்று எசேக்கியா ராஜாவின் காலத்தில் யூதாவிலும் நடந்தது. ஆலயக்கதவுகள் மூடப்பட்டு, ஆலயம் அசுத்தப்படுத்தப்பட்டு, ஆராதனைகள் நிறுத்தப்பட்டு, பண்டிகைகள் மறக்கப்பட்டிருந்த காலம் அது. யாவையும் எசேக்கியா புதுப்பித்து, கர்த்தரை மகிழ்வித்தார். அடுத்தபடியாக பண்டிகைகளை ஆசரிக்கும்படி ராஜா ஒரு கட்டளை பிறப்பித்தார். இஸ்ரவேலுக்கு மிக முக்கியமானது எகிப்திலிருந்து அவர்கள் மீட்கப்பட்ட பஸ்கா பண்டிகை. இதை நினைவுபடுத்தும்படி வருடந்தோறும் பண்டிகையினை ஆசரிக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டிருந்தார். அப்படியே ஆசரித்து வந்தாலும் இடையிலே இந்தப் பண்டிகை மாத்திரமல்ல, ஆலயமும் பண்டிகைகளும் இஸ்ரவேலினால் புறக்கணிக்கப்பட்டிருந்தன. இப்போது ஏறத்தாழ 200 ஆண்டுகளின் பின்னர் எசேக்கியாவின் தூண்டுதலினால் பஸ்கா ஆசரிப்பின் ஆயத்தங்கள் ஆரம்பமாயின. மக்கள் எழும்பி, அந்நிய பலிபீடங்களை அகற்றி, பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள். ஆசாரியர்கள் மக்களை எழுப்பி செய்யவேண்டிய செயலை, மக்களே செய்ததால், ஆசாரியரும் லேவியரும் வெட்கிப்போகுமளவுக்கு மக்கள் மிகுந்த சந்தோஷத்துடனே பஸ்கா ஆசரிப்பை ஆரம்பித்தார்கள். தங்கள் இனம் விடுவிக்கப்பட்ட அந்த சந்தோஷத்தை நினைத்து கொண்டாடினார்கள். இந்த ஆரவாரம் பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது என்று வாசிக்கிறோம். ஆம், கர்த்தர் மகிழ்ந்திருந்தார்.

பாவத்திலிருந்து விடுதலையும், ஆவிக்குள்ளே மறுபடியும் பிறப்பதுவும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியம். அடுத்தது, சத்துருவின் உறவு அறுந்து, பரிசுத்த தேவனுடனான உறவுக்குள் வந்த எவனும், தான் விடுதலையடைந்து இப்போது தேவஉறவுக்குள் இருப்பதை ஒரு கணமேனும் மறந்து போனால், மறுபடியும் சத்துருவின் ஆக்கிரமிப்பு அவனைத் திண்டாடவைக்காது என்று சொல்லமுடியாது. 200 வருடங்களுக்குப் பிற்பாடு யூத சமூகம் தாம் விடுதலையடைந்ததை உணர்ந்து தேவனைக் கொண்டாடி, கர்த்தருடனான உறவைப் புதுப்பித்தபோது அவர்களுக்குள் இருந்த மகிழ்ச்சி ஆரவாரத்தை நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். முதலாவது நாம் மீட்கப்பட்டவர்களா? அப்படியானால், தினம் தினம், விநாடிக்கு விநாடி நம்மை மீட்ட இரட்சகரை, மீட்கப்பட்ட நாட்களை நினைந்து தேவனைக் கொண்டாட வேண்டாமா?

ஜெபம்: மீட்பின் ஆண்டவரே, உளையான சேற்றிலிருந்து எங்களைத் தூக்கியெடுத்து உம் பிள்ளையாய் எங்களை மாற்றினீரே, உம்மையேத் துதிப்பேன். ஆமென்.