குவியல்கள்

தியானம்: 2025 நவம்பர் 16 ஞாயிறு | வேதவாசிப்பு: 2 நாளாகமம் 31:1,4-12

YouTube video

இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக்கொண்டு வரத் தொடங்கினது முதல் நாங்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது (2நாளா. 31:10).

இன்று, ஊழியப்பணியில் பணத்தேவைகளைச் சந்திக்க நிகழ்ச்சிகள் நடத்துவதும், ஆலயத்தில் உறைகள் கொடுப்பதும், தனிப்பட்ட கோரிக்கை விடுப்பதும் என்று பலமுயற்சிகள் எடுக்கப்படுகின்றன. மோசே வாசஸ்தலத்தை அமைத்தபோது மக்கள் எகிப்திலிருந்து கொண்டு வந்திருந்த பொன் வெள்ளியை அள்ளிக் கொடுத்தார்கள். தாவீது தேவனுடைய ஆலயப்பணிக்காக தானும் சேகரித்து, மனப்பூர்வமாய் கொடுக்கிறவர்கள் கொடுக்கும்படிக்கு அழைப்பு விடுத்தபோது, போதும் போதும் என்று மக்கள் கொடுத்ததுமன்றி, கொடுத்ததற்காக சந்தோஷப்பட்டார்கள் என்றும் வாசிக்கிறோம் (1நாளா.29:9). கர்த்தருக்கென்று அள்ளிக் கொடுக்கும் இந்த மனப்பான்மை இன்று எங்கே?

எசேக்கியாவின் நாட்களிலும், ஆலய சுத்திகரிப்பு முடிந்து, பண்டிகைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, தேசம் சுத்திகரிக்கப்பட்ட பின்னர், கர்த்தருடைய கட்டளைப்படி முதற்பலன்களையும் தசமபாகங்களையும் கொடுப்பதற்கு எசேக்கியா மக்களை ஆயத்தம் பண்ணினார். அந்த சம்பவம் பற்றி, “தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தம் பண்ணப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டு வந்து குவியலாக வைத்தார்கள்” என்று வாசிக்கிறோம். ஐந்து மாதங்களாக குவியல்கள் குவிக்கப்பட்டன. கற்பனை பண்ணமுடிகிறதா? கர்த்தரது ஆலயத்திற்கென்று கொடுக்கத் தொடங்கியது முதல் அவர்களும் திருப்தியாகப் புசித்து, மிச்சமும் இருந்தது. “கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றார்கள்.” இவையெல்லாவற்றிலும் அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருந்தார்கள்.

இன்று ஊழியப்பணிக்காக ஏன் தடுமாற்றம்? 1990 ஆண்டில் ஓமன் நாட்டில் சபை ஒன்றுகூடுகையில் தேவனுக்குக் கொடுப்பதைக் குறித்து ஒரு சிறிய செய்தி கொடுக்கப்பட்டது. பின்னர் கற்றதைச் செயற்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டபோது, சேர்க்கப்பட்ட பணத்தாள்கள், பொன், நகைகள் யாவையும் மேடையில் குவியலாகக் குவித்ததை நானே கண்டேன். பணிக்கு மாத்திரமல்ல, கர்த்தருடைய நாமத்தினிமித்தம் கொடுப்பதால் உண்டாகும் பேரின்பத்தை, கொடுத்தால்தான் அனுபவிக்க முடியும். இன்றைய பொருளாதார நெருக்கடிகளும், உயர்ந்துவிட்ட வாழ்க்கைச் செலவும் நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறது. என்றாலும், நமக்காகத் தம்மையே கொடுத்த கர்த்தருக்காக நாம் எதைச் செய்தாலும் அவர் நம்மை ஒருபோதும் கைவிடவே மாட்டார். இந்த விசுவாசம் நம் ஒவ்வொருவரிடமும் இருக்குமானால் இன்றைய நிலை நிச்சயம் மாறுமல்லவா! கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும் (லூக்.6:38).

ஜெபம்: ஆண்டவரே, உம்முடைய ஊழியங்களுக்கென்றும், தேவநாமத்தில் தேவையிலுள்ளவர்களின் தேவைகளைச் சந்திப்பதற்கும் தாராளமாக கொடுப்பதற்கு எங்கள் கரங்களைப் பெலப்படுத்தும். ஆமென்.