சோதனைகள் வரும்!

தியானம்: 2025 நவம்பர் 17 திங்கள் | வேதவாசிப்பு: 2இராஜா.18:5-7,13; 2நாளா.32:20-21

YouTube video

அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணை நின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே (2 நாளாக. 32:8).

கர்த்தரை அதிகமாக தேடத் தேட சோதனைகளும் அதிகரிக்கிறது என்று பலர் சொல்வதுண்டு. உண்மைதான், சோதிக்கப்படாத எந்தவொரு காரியமும் உறுதிப்படுத்தப்பட முடியாது. அதேசமயம், “உலகத்தில் இருப்பவனிலும் நம்மிலிருக்கிறவர் பெரியவர்” என்று சொல்லி ஜெபிக்கக் கற்றிருக்கிற நாம், மெய்யாகவே நமது யுத்தங்களை நடத்த வல்லவரை சார்ந்திருக்கிறோமா? சார்ந்திருப்போமானால் சோதனைகளில் இடறிப்போக முடியாதல்லவா!

எசேக்கியா ராஜாவைக் குறித்து சொல்லப்பட்டிருக்கின்ற சில விஷயங்களை மற்ற ராஜாக்களின் வாழ்வில் பார்ப்பது அரிது. ஒன்று, வேறெந்த ராஜாக்களைப் பார்க்கிலும் கர்த்தர்பேரில் இவன் வைத்திருந்த நம்பிக்கை ஒப்பற்றதாக இருந்தது. அடுத்தது, இவன் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல், அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டான். மேலும், கர்த்தருக்கு முன்பாக, மனுஷரின் புகழை பெற்றுக்கொள்ள அல்ல, நன்மையும் உண்மையுமானதை முழு இருதயத்தோடும் செய்தான். இதன் பலன், கர்த்தர் எசேக்கியாவுடன் இருந்தார். இன்று நாம் அடிக்கடி தள்ளாடுவது ஏன்? நாம் கர்த்தரோடு இருந்தால் கர்த்தரும் நம்மோடு இருப்பாரே! ஆகவே, இன்று நமது கஷ்ட சூழ்நிலைக்கு கர்த்தர் அல்ல, நாமே காரணர் என்பதை உணர்ந்து, கர்த்தரோடு மாத்திரம் இருக்கும்படி மனந்திரும்புவோமாக.

இப்படியாக, நாம் கர்த்தரோடும், கர்த்தர் நம்மோடும் இருந்தால் உலக வாழ்வு உல்லாசமாக மாறிவிடும் என்று எண்ணக்கூடாது. நமக்கு நிச்சயம் சோதனைகள் வரும். அது வந்தால்தான் நமது சார்ந்திருத்தல் உண்மையானதா என்பது தெரியவரும். எசேக்கியாவுக்கும் இப்படி ஒரு சோதனை வந்தது. அசீரியா ராஜா இஸ்ரவேலை சிறைப்பிடித்த பின்னர், யூதா பக்கம் திரும்பினான். முதலில் சற்று தடுமாறிய எசேக்கியா, பின்னர் தானும் திடன்கொண்டு’, அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். “நமக்குத் துணைநின்று நம்மோடிருந்து நம்முடைய யுத்தங்களை நடத்துவது நாம் அல்ல, நம்முடைய தேவனாகிய கர்த்தர்” என்று சொல்லி மக்களையும் திடப்படுத்தித் தேற்றினான். நாம் கர்த்தரை விசுவாசிக்கிறோம், அவரையே நம்பியிருக்கிறோம்; இதில் சந்தேகமில்லை. ஆனால் கஷ்டங்கள் நெருக்கடிகள், முக்கியமாக பலதரப்பட்ட வியாதிகள், மரண உபாதைகள் நெருங்கி வரும்போது நமது நம்பிக்கை தளர்ச்சியடைவது ஏன்? நமது குடும்பத்தைத் திடப்படுத்த நாம் தடுமாறுவதும் ஏன்? கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால், நாம் தள்ளாடி பிற அனுகூலங்களை நாடி ஓடுவதும் ஏன்?

ஜெபம்: நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று வாக்குபண்ணின ஆண்டவரே, எங்களது நம்பிக்கை சோதிக்கப்படும்போது பின்வாங்கிப் போகாமல் நிலைத்து நிற்க எங்களைத் திடப்படுத்தும் ஆமென்.