மரண நாள்

தியானம்: 2025 நவம்பர் 19 புதன் | வேதவாசிப்பு: 2இராஜாக்கள் 20:1-11

YouTube video

நீர் உமது வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் (2இராஜாக்கள் 20:1).

“மரணம்” இந்நாளில் அல்லது இந்த நாட்களில் நிகழும் என்று நமக்கு அறிவிக்கப்பட்டால் நாம் என்ன செய்வோம்? தேவனை சந்திக்கும்படி அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோமா? அல்லது அழுது புலம்புவோமா? கடுமையான வியாதியால் அவஸ்தைப்படுகிறவர்கள் சாவு வராதா என்று ஏங்குவதுண்டு. அது, அந்த அவஸ்தையிலிருந்து விடுதலை வேண்டும் என்பதற்காகவேதான் அநேகமாக இருக்குமே தவிர, சாவை சந்திப்பதற்காக அல்ல. எனினும் மரண விளிம்பில் தேவனைச் சந்திக்கும் மகிழ்ச்சியுடன் ஜீவன் பிரிகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கர்த்தருடைய பெரிதான கிருபையால் பல வெற்றிகளைக் கண்ட எசேக்கியாவுக்கு வியாதி வந்தது; மாத்திரமல்ல, அது மரணத்துக்கு ஏதுவாயிருந்தது. சிலநேரங்களில் வைத்தியர்கள் கைவிட்ட நிலை சிலருக்கு இன்றும் ஏற்படுவதுண்டு அல்லவா! இங்கே ஏசாயா தீர்க்கன் எசேக்கியாவிடத்தில் வந்து, அவருடைய மரணம் நெருங்கிவிட்டது என்றும், வீட்டுக் காரியங்களை ஒழுங்கு செய்யும்படிக்கு கர்த்தர் அறிவிப்பதாக கூறினார். கர்த்தர் கூறினால் கூறியதுதான். “அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி…” எசேக்கியாவைக்குறித்த இக்குறிப்பை நாம் யாவரும் அறிவோம். தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, அதாவது யாரும் தன் முகத்தைப் பார்க்க அவன் விரும்பவுமில்லை, எவரையும் அவனும் பார்க்க விரும்பவில்லை. எசேக்கியா கர்த்தரை நோக்கி இரக்கத்திற்காக மன்றாடியபோது, கர்த்தரும் இரங்கி, “உன் கண்ணீரைக் கண்டேன்” என்கிறார். அவனுடைய நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன் என்கிறார். இதற்கு அடையாளமாக மூன்றாம் நாளிலே ஆலயத்திற்குப் போவாய் என்கிறார். எசேக்கியாவும் அடையாளம் கேட்டான். அதுவும் உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால் பின்னர் நடந்தவற்றைப் பார்க்கும்போது, கர்த்தர் அனுமதித்த மரண நாளை ஏற்றால் நலமோ என்று எண்ணத் தோன்றுகிறது. யூதாவின் வரலாற்றிலே ஏறத்தாழ 100 ஆண்டுகளில் (கி.மு.732-640) எசேக்கியா ராஜாதான் கர்த்தருக்கு உண்மையாயிருந்தான். அவனுடைய உண்மைத்துவம் மாற்றங்களை கொண்டு வந்தது. கர்த்தரும் அதை மதித்து அவனது விண்ணப்பத்தைக் கேட்டு சுகம் கொடுத்து, ஆயுசு நாட்களையும் கூட்டிக்கொடுத்தார். ஆனால் இந்த உண்மைத்துவம் இறுதிவரைக்கும் இருக்கவேண்டும். விசுவாசத்துடன் கூடிய ஜெபம் வல்லமை மிக்கது; ஆனால் அந்த விசுவாசம் உண்மைத்துவத்துடன் கூடி இருக்கவேண்டும். கர்த்தர் நமக்குச் செய்த எதனையும் நாம் மறக்கக்கூடாது. பாவிகளாய் துரோகிகளாயிருந்த நம்மை அவர் தூக்கி எடுத்தாரே, இதை மறக்கிறவன் நிச்சயம் தவறிப்போவான். எசேக்கியா எங்கே தவறினான்?

ஜெபம்: ஆண்டவரே, எங்களது ஜெபம் விசுவாசத்துடனும், உண்மைத்துவத்துடனும் இருப்பதற்கு தூயஆவியானவர் எங்களுக்கு உதவி செய்ய ஜெபிக்கிறோம். ஆமென்.