முன் அறிவிக்கப்பட்டவன்
தியானம்: 2025 நவம்பர் 22 சனி | வேதவாசிப்பு: 1இராஜாக்கள் 13:1-5

இதோ தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான் (1இராஜாக்கள் 13:2).
நாம் பிறப்பதற்கு முன்னரே நமது பெயர்கள் கர்த்தரால் அறியப்பட்டிருந்தன என்றால் எவ்வளவு ஆச்சரியம்! உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே (எபே.1:4); அதாவது, உலகம் தோன்றுவதற்கு முன்னரேயே தேவனுடைய இருதயத்தில் நாம் இருந்திருக்கிறோம், நமது பெயர் அறியப்பட்டிருந்தது என்பது சத்தியம்.
சாலொமோனின் பாவத்தாலும், மகன் செய்த தவறாலும் இரண்டாகிய இஸ்ரவேலின் வடராஜ்யத்தை யெரொபெயாமும், தென் ராஜ்யமாகிய யூதாவை ரெகொபெயாமும் அரசாண்டார்கள். தேவாலயம் எருசலேமில் இருந்ததால், மக்கள் பலிகளைச் செலுத்த எருசலேமுக்குப் போவார்கள், அதனால் மனம் மாறக்கூடும் என்று எண்ணிய யெரொபெயாம், பொன்னினால் இரு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, உங்களை எகிப்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, முன் செய்த பாவத்திற்கு மக்களை திருப்பி, ஒன்றைப் பெத்தேலிலும் ஒன்றைத் தாணிலும் வைத்து, பலிபீடங்களை உருவாக்கி பலிசெலுத்தி, தான் நினைத்தபடியே யாவையும் செய்தான். முதலாவது, அவன் இதைச் செய்ததே பாவம்; அடுத்து ராஜா தூபங்காட்ட முடியாது; இவனோ தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நின்றான். அப்போது, தேவனுடைய மனுஷன் ஒருவன் யூதாவிலிருந்து பெத்லகேமுக்கு வந்து, “பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒருவன் பிறப்பான்” என்று கூறி, இந்தப் பலிபீடத்தின்மீது தூபங் காட்டுகிறவர்களை அவன் பலியிடுவான் என்றும் அறிவித்து, அதற்கான அடையாளத்தையும் தெரிவித்து, அதுவும் அப்படியே ஆகி, ராஜாவின் கையும் முடங்கிவிட்டது. அதற்காக யெரொபெயாமோ, அவனுக்குப் பின்வந்த ராஜாக்களோ இதைக் கருத்தில்கொண்டு மனந்திரும்பினார்களா? இல்லையே!
“உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே” (ஏசா.40:26). மேலும், “அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்” (சங்.147:4). யோசியா ராஜா பிறப்பதற்கு 300 வருடங்களுக்கு முன்னரே பெயர் முதற்கொண்டு கர்த்தர் அறிவித்தபடி யோசியா பிறந்தானென்றால், இன்று ஆண்டவருடைய இரத்தத்தால் மீட்கப்பட்ட நமது பெயர்களை, நாம் பிறக்கவேண்டிய காலங்களை கர்த்தர் அறியாதிருந்திருப்பாரா? இந்த ஆண்டவரை நாம் துக்கப்படுத்தலாமா? நம்மை முன்னறிந்து முன்குறித்த ஆண்டவருக்கு நாம் உண்மையாக இருப்போமாக.
ஜெபம்: நல்ல ஆண்டவரே, உலகம் தோற்றத்துக்கு முன்னமே எங்கள் பெயர் அறியப்பட்டிருந்தது, தேவனுடைய இருதயத்தில் இருந்திருக்கிறோம் என்பதை எங்களுக்குத் தெளிவுபடுத்தினீரே. இந்த பாக்கியத்திற்காக ஸ்தோத்திரம். ஆமென்.