கலக்கம் ஏன்?
தியானம்: 2025 டிசம்பர் 4 வியாழன் | வேதவாசிப்பு: மீகா 5:2; மத்தேயு 2:1-8

ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடு கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள் (மத்தேயு 2:3).
வியாதியோ, வேறு பல காரியங்களோ நம்மை அடிக்கடி கலங்கடிக்கத்தான் செய்யும். கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்ற தைரியம் இருந்தாலும் அவ்வப்போது நாம் கலங்கத்தான் செய்கிறோம். ஏன் இந்தக் கலக்கம்? மனதில் சமாதானம் இல்லை என்றால்தான் கலக்கம் வருகிறது. இன்று நாம் சமாதானத்தை இழந்து நிற்கிறோமா? சமாதான காரணர் கிறிஸ்து என்பதை விசுவாசித்திருந்தும் நமக்குள் அந்த சமாதானம் தடுமாறுவது ஏன்?
யூதேயா தேசத்தில், பெத்லகேமிலே ஒரு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறப்பது சாதாரண விஷயம். ஆனால் இக் குழந்தையைக் காணும்படிக்கு அதைத் தேடி பரந்த உலகின் பல இடங்களிலுமிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்தது அக்குழந்தையை முக்கியத்துவப்படுத்திவிட்டது. மாத்திரமல்ல, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே என்று சாஸ்திரிகள் கேட்கிறார்கள். இக் கேள்வியினால் ஏரோது ராஜா கலங்கியதில் ஆச்சரியம் இல்லை! அவன் அறியாமலே ஒரு ராஜா பிறப்பதா? அதற்காக எருசலேம் நகரத்தார் மாத்திரமல்ல, பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர்கூட கலங்கினார்கள். இவர்கள் ஏன் கலங்கவேண்டும்? கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார்? அவர் யார்? என்பதெல்லாவற்றையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். மீகா தீர்க்கதரிசி திட்டவட்டமாக உரைத்த தீர்க்கதரிசன வார்த்தைகளை பிசகாமல் அவர்கள் ஏரோதுவிடம் ஒப்புவித்தார்கள். இப்படியிருக்க இவர்களுக்கு ஏன் கலக்கம்? “இவரே சமாதான காரணர்” என்று மீகா தீர்க்கமாக உரைத்திருக்க, அந்தக் காரணரின் பிறப்பால் இவர்கள் கலக்கமடைந்தது ஏன்? ஆம், இவர்களுடைய அறிவுக்கு எட்டியதை, இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இன்று நமது கலக்கம் எப்படிப்பட்டது? இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதில் தீவிரம் காட்டுகின்ற நாம், ஒன்று, இன்னமும் “சமாதான காரணரை” ஒருதரமேனும் அறியாமலேயே தினமும் மாண்டுகொண்டிருக்கும் ஏராளமான மக்களைக் குறித்துக் கலக்கமடையாமல், நமது சொந்தக் காரியங்களைக் குறித்தும், கொண்டாட்டங்களைக் குறித்தும் கலங்குவது என்ன? அடுத்தது, “மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்” (லூக்.17:26-30) என்றும், “அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின் மேல் வருகிறதைக் காண்பார்கள்” (லூக்.21:7-27) என்றும் கர்த்தரே தமது இரண்டாவது வருகையைக் குறித்து ஆணித்தரமாகக் கூறியிருக்க, இதற்காக தீவிரமாக உழைப்பதை விட்டுவிட்டவர்களாக நாளை மாறிப்போகும் வீண் காரியங்களைக் குறித்துக் கலக்கமடைவது ஏன்? அவரது இரண்டாம் வருகையைக் குறித்து சிந்திப்போம்.
ஜெபம்: அன்பின் பிதாவே, இன்னமும் ஒருமுறைகூட சுவிசேஷத்தைக் கேள்விப் பட்டிராத மக்களைக் குறித்த ஆத்தும பாரத்தை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.