இவரே சதாகாலமும் நமது தேவன்!
தியானம்: 2025 டிசம்பர் 7 ஞாயிறு | வேதவாசிப்பு: ஏசாயா 57:1-19

உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான் … நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன் (ஏசாயா 57:15).
மனிதனுடைய பெருமையைக் குறித்தும் இச்சையைக் குறித்தும் ஏசாயா 57:1-13ல் கடிந்துகொண்ட கர்த்தர், 14ம் வசனத்திலிருந்து, எவன் ஒருவன் தன்னைத் தாழ்த்தி மனம்வருந்தி மனந்திரும்புகிறானோ, அவனுடன் தாம் எப்படி இடைப்படுகிறார் என்பதை தெளிவுபடுத்துகிறார். பெருமையும் கீழ்ப்படியாமையும் தேவனுக்கு அருவருப்பானவைகள். கர்த்தரின் கட்டளையை மீறி, அவருக்குக் கீழ்ப்படியாமல், சாத்தானின் வஞ்சகத்தில் அகப்பட்ட மனிதனுக்குள், இந்தச் சாத்தான், தனக்குள் இருந்த பெருமையைத்தான் புகுத்தியிருந்தான். இந்தப் பெருமையை, கீழ்ப்படியாமையை ஒழித்து, மனிதனை மீட்கும்படிக்கே தேவன் மனிதனானார்.
நமது தேவன் யார்? அவர் நித்தியவாசி, தொடக்கமும் முடிவும் இல்லாதவர். அவர் என்றென்றும் அரசாளும் தேவன். அவருடைய நாமம் ‘பரிசுத்தம்’. அதாவது பரிசுத்தம் என்றால் அது தேவனாகிய கர்த்தரே. அன்பு, நீதி, பரிசுத்தம் இம் மூன்றையும் நம்மால் பிரித்துப்பார்க்க முடியாது. மேலும், அவர் மகத்துவமானவர், அவருடைய மாட்சி அறிவுக்கு எட்டாதது, அவர் உன்னதமானவர், மகா பெரியவர், நிகரற்றவர் என்று இவரே தம்மைக் குறித்துச் சாட்சி சொல்லுகிறார். இந்த தேவனை நம்மால் நெருங்கமுடியுமா? மோசே, கர்த்தரிடம், “உமது மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்று கேட்டபோது, கர்த்தர், “நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது” என்று சொல்லி, தமது மகிமை கடந்துபோகுமட்டும் கர்த்தரே மோசேயைத் தமது கரத்தினால் மூடினார். தேவனுடைய வாசஸ்தலம் உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் இருக்கிறது. ஆனால் இந்த தேவனே: நான் உன்னதத்தில் வாசம் பண்ணும் அதேசமயம் மனிதரிடத்திலும் வாசம் பண்ணுவேன் என்கிறார் எப்படிப்பட்டவர்களிடத்தில் என்பதே கேள்வி. மனங்கசந்து மனந்திரும்பி தன்னைத் தாழ்த்தி நொருங்குண்ட இருதயத்துடன் பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் வாசம் பண்ணுவேன் என்கிறார். இதற்காகவே மனிதனாக உலகிற்கு வந்தார். இப்படியிருக்க, பெருமையும் கீழ்ப்படியாமையும் கொண்டவர்களாக, அவரது வார்த்தைகளை உதாசீனம் செய்துகொண்டு அவருடைய பிறப்பை நினைவுகூருவதில் என்ன பயன்? சிந்தித்து சீர்செய்துகொள்வோம்.
ஆம், உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தைவிட்டு நமது கீழான மட்டத்துக்கு இயேசு தாமே இறங்கி வந்தாரே, ஏன்? நம்மை மீட்பதற்காக. ஆம், நம்மை மீட்கும் படிக்கு நம்மால் அவர் மட்டத்துக்கு ஏறிப்போக முடியாது. ஆக, மகா அன்பின்தேவன் நம்மை மீட்க நம்மைப்போல ஆனார். இதை அறிந்துணர்ந்தும் நமது இருதயம் நொருங்கவேண்டாமா?
ஜெபம்: அன்பின் தேவனே, எங்கள் இருதயத்திற்குள் காணப்படும் பெருமை, கீழ்ப்படியாமையை விட்டொழித்து நொறுங்குண்ட இதயத்தோடு உம்மண்டை வருகிறோம். எங்களை ஏற்றுக்கொள்ளும். ஆமென்.