பொக்கிஷங்களைத் தேடி..

தியானம்: 2025 டிசம்பர் 9 செவ்வாய் | வேதவாசிப்பு: லூக்கா 19:1-10

YouTube video

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார் (லூக்கா 19:10).

பொருளாதாரப் பிரச்சனை, விலைவாசி ஏற்றம், எங்கும் திகைப்பூட்டும் சம்பவங்கள், விநோத வியாதிகள், போர் முழக்கங்கள், குரூர கொலைகள், புதிய கொள்ளைநோய்கள் என்று சுற்றிலும் யாவுமே கலக்கம் நிறைந்த இக்காலப்பகுதியில், இந்த கிறிஸ்துமஸ் நாட்களில், நாம் என்ன செய்கிறோம்? நமது பழக்கங்கள் வழக்கங்கள், கொண்டாட்டங்கள், ஆலய காரியங்கள் எதிலாவது மாறியிருக்கிறோமா? தமது பொக்கிஷத்தைத் தேடிவந்த ஆண்டவர், தம்மையும் தம்மைச் சுற்றியிருக்கிறவர்களையும் மகிழ்விக்கவா வந்தார்? இழந்து போனவர்கள், தங்கள் அவல நிலையை உணராமல் வாழுகின்றவர்கள் என்று தேடிப்போய், தனிப்பட்டவர்களுடன் தொடர்புகொள்வதையே அதிகமாக விரும்பினார்.

சகேயு, மீட்பு தேடியா இயேசுவைத் தேடினான்? இல்லை! இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டவன், எரிகோ வழியாக இயேசு நடந்துபோகையில் அதையும் கேள்விப்பட்டு, அவர் எப்படிப்பட்டவரோ என்று பார்ப்பதற்கு வகைதேடினான், குள்ளனானபடியினால், மக்களை எதிர்கொள்ளத் தயங்கிய அவன் காட்டத்தி மரத்தில் ஏறியிருந்து அவரைப்பார்க்க முயற்சித்தான். ஆனால் நடந்த சம்பவத்தை உற்று நோக்கும்போது, இழந்துபோயிருந்த சகேயு என்ற தனிமனிதனாகிய பொக்கிஷத்தைத் தேடியே இயேசு அந்த வழியாகச் சென்றார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அப்படியே, அவனும் மனமாற்றமடைந்து, தன் வாழ்வில் பெரிய விடுதலையை அடைந்தான்.

இயேசு, மக்கள் மத்தியிலே தேவ ராஜ்யத்துக்கடுத்த பல காரியங்களை மிகுந்த வல்லமையோடு போதித்தாலும், தனிப்பட்டவர்களைச் சந்தித்த சம்பவங்கள் பல. ஒரு சமாரியப் பெண்ணின் விடுதலைக்காக அவ்வளவுதூரம் நடந்துசென்றாரல்லவா! இன்று நமது பொறுப்பு என்ன? தங்கள் பெறுமதிகளை உணராமல், அன்றாட வாழ்வில் பயத்துடனும், பாடுகளுடனும், பிடிப்பற்ற நிலையிலும் வாழுகிற மக்களை நாடி நாம் செல்லுகிறோமா? ஒரு மனிதன் தன் பெறுமதியை எப்போது உணருகிறானோ, அந்த இடத்தில் அவனுடைய வாழ்வு நிச்சயம் மாறும்.

மனிதனுடைய பெறுமதியை வெளிப்படுத்தவே இயேசு இந்த உலகிற்கு வந்தார். அவர் தமது பொக்கிஷம் இழக்கப்பட்டுப்போவதை விரும்புவதில்லை. இன்று அந்தப்பொக்கிஷங்களைத் தேடிப்பிடித்து, அவரண்டை கொண்டு சேர்க்கும் பொறுப்பு, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு பெறுமதி உணர்த்தப்பட்ட நம் கைகளில் தரப்பட்டுள்ளது என்பதை நினைந்து காரியங்களை முன்னெடுப்போமாக.

ஜெபம்: நல்ல ஆண்டவரே, தனிநபர் ஒவ்வொருவர்மேலும் நீர் எவ்வளவு கரிசனை யுள்ளவராயிருக்கிறீர்! அந்தத் தரிசனத்தோடு நாங்களும் செயல்பட எங்களுதவும். ஆமென்.