இழந்த மகிமையை மீளப்பெற…
தியானம்: 2025 டிசம்பர் 10 புதன் | வேதவாசிப்பு: ரோமர் 3:23-26

எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி … (ரோமர் 3:23).
மனநோயாளன் ஒருவன், அவன் எந்நிலையில் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதைக்கண்டறிய வைத்தியர் சில கேள்விகளைக் கேட்பார். அந்தவகையில் அவனுடைய நுண்ணறிவை, தன்னைக்குறித்து அவன் கொண்டுள்ள உள்ளான பார்வையைச் சோதித்தறிய சில கேள்விகள் கேட்கப்படுவதுண்டு. அதற்குப் பதிலாக, தனக்குப் பிரச்சனை உண்டு என்பதை அவன் ஒப்புக்கொள்ளக்கூடும். அல்லது, ‘எனக்கு என்ன பைத்தியமா?’ என்றும் சொல்லக்கூடும். இப்போது அவன் தன்னைக்குறித்த தனது ஆழ்ந்த பார்வை எதுவாயிருக்கும் என்பதை உணரக்கூடும். முதலாமவன் குணப்படுத்தப்படக்கூடியவன்; இரண்டாமவன், கஷ்டம்தான். ஆம், நாம் எங்கே நிற்கிறோம், எதை இழந்து நிற்கிறோம், எதனை மீளவும் பெற்றுக்கொள்ள வேண்டும், இயேசு அதற்கு வைத்தியர் என்பதையெல்லாம் சிந்திக்க நமது கொண்டாட்ட மனநிலை நமக்கு இடமளிப்பதில்லையே.
தேவனுடைய ‘மகிமை’ என்பது, அவரது அழகு, வல்லமை, அவருக்குரிய கனம், அவருடைய மகத்துவம், அதிகாரம், அவர் எப்படி இருக்கிறாரோ அதையெல்லாம் வலியுறுத்தும் அவரது பூரணமான குணாதிசயமாகும். “அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது” (சங்.113:4), ஆம், இந்த மகிமை தேவனால் படைக்கப்பட்ட மனிதனுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டது. என்றாலும், தேவனுடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதன், அவரது சகல குணாதிசயங்களையும் கொண்டிருந்ததால் அவருடைய மகிமையிலும் கலந்திருக்கிறான். அதனால்தான் அவரோடு உறவாட முடிந்தது. ஆனால், எப்போது மனிதன் பாவத்தின் கோரப்பிடியில் அகப்பட்டானோ, அப்போதே அவன் தேவமகிமையை இழந்தான்; அவன் தேவனைவிட்டுப் பிரிக்கப்பட்டான். எனினும், கர்த்தர் தமது மக்கள் மத்தியில் மேகஸ்தம்பமாக, அக்கினிஸ்தம்பமாக, தமது மகிமையின் பிரதிபலிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மிக முக்கியமாக அவருடைய வாசஸ்தலம் அவர் மகிமையால் நிறைந்திருந்தது. என்றாலும் அந்த மகிமையை மனிதன் கிட்டிச்சேர முடியாதிருந்தது. ஆக, மனிதன் தன்னில் கொண்டிருந்த தேவமகிமையை இழந்துபோனான். காரணம், பாவம்.
ஆனால், இன்று கிறிஸ்து இயேசுவில் தேவமகிமை நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தமது மகிமையை தம்மைப் பின்பற்றுகிறவர்களுடன் பகிருகிறார் (யோவா.17:5,6). இதனால் நாம் அந்த சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபமடைகிறோம் (கொலோ.3:18). இழந்துவிட்ட இந்த மகிமையை நாம் மீளப்பெறமுடியும் என்ற நம்பிக்கையைத் தரவும் அதை மீளப்பெற்றுத்தரவுமே இயேசு வந்துதித்தார். இந்த சத்தியத்தை இன்று சற்று ஆவிக்குரிய முதிர்ச்சியுடன் சிந்திப்போமாக.
ஜெபம்: அன்புள்ள ஆண்டவரே, நாங்கள் பாவத்தால் இழந்துபோன தேவமகிமையை மீண்டும் பெறுவதற்காகவே இவ்வுலகில் வந்துதித்தீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.