பாவத்திலிருந்தா? நரகத்திலிருந்தா?

தியானம்: 2025 டிசம்பர் 11 வியாழன் | வேதவாசிப்பு: கலாத்தியர் 1:1-5

YouTube video

இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி … நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் (கலாத்தியர் 1:4).

பாழுங் கிணற்றிலிருந்து வந்த கூக்குரல் கேட்டு, எட்டிப்பார்த்தவனிடம் ‘காப்பாற்று’ என்று ஒருவன் கத்தினான். அவனைக் காப்பாற்றும் ஆற்றல் இவனிடம் இல்லை. ஆனால், அவனைச் சுற்றியுள்ள பாசிகள் கொடிகளைக் கண்ட இவன், ‘முதலில் அவற்றைப் பிடுங்கி எறி’ என்றான். ‘முடியல்லையே, நான் அமிழுகிறேன்’ என்றான். வெளியே நின்றவன், தன் உயிரையும் பாராமல் கிணற்றில் காணப்பட்ட சிறு வெடிப்புகளில் கால்களை வைத்து சற்று உள்ளிறங்கி அவைகளின் கட்டுக்களை அறுத்தெறிந்தான். அப்போது இவன் சொன்னானாம்: “உன் சாவை என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் உன்னைக் கட்டியிருந்தவைகளை அகற்றி உன்னை மீட்டு விட்டேன். இனி, மேலே வருவதும், உள்ளிருந்து சாவதும் உன் தெரிவு” என்றான். இது வெறும் கற்பனை என்றாலும், இதுதான் நமது வாழ்வும்.

நாம் இழந்துவிட்ட மகிமையை மீளப்பெற்றுத் தரவே இயேசு வந்து பிறந்தார். அந்த மகிமையை நாம் இழக்கக் காரணம் என்ன? ஒரு புண் சீழ்பிடித்தால், அதைத் துடைப்பதால் புண் ஆறாது. சீழ்பிடித்ததன் காரணம், ஒரு சிறிய முள்ளாக இருக்கலாம், அது நீக்கப்படவேண்டும். ஆம், தேவன் தன்னில் வைத்த மகிமையை மனிதன் இழந்துநின்ற காரணம், பாவம். அது துடைத்தெறியப்படும் வரை விடுதலை கிடைக்காது. பாவம்தான் நமது வாழ்வை நரகத்தை நோக்கி நகர்த்துகின்ற கொடிய பாம்பு. இந்தப் பாவம் அகற்றப்படவேண்டும். இப்பொழுதிருக்கிற இப்பொல்லாத பிரபஞ்சத்தினின்று, வஞ்சகம் பொல்லாப்பு அக்கிரமத்தால் சாத்தான் உருட்டிக்கொண்டிருக்கிற உலகத்திலிருந்து, தேவனுடைய திட்டப்படியே நாம் இயேசுவின் இரத்தத்தால் இன்று மீட்கப்பட்டிருக்கிறோம். அநாதி திட்டமாகிய இந்த மீட்பை கிருபையாய் அருளவே இயேசு உலகில் வந்து பிறந்தார். இந்தத் தீய உலகிலிருந்து மீட்கப்பட்டோம் என்பதற்காக நாம் எடுபட்டுப்போகவில்லை. இன்னமும் இங்கேதான் வாழுகிறோம். அப்படியானால் காரியம் என்ன? இப்பிரபஞ்சத்தின் கட்டுகளுக்கு நாம் இன்னமும் அடிமைகள் அல்ல. நாம் கர்த்தருக்காக மீட்கப்பட்டிருக்கிறோம். இந்த மீட்பின் கிரியையினால் நாம் தேவனோடு நித்திய வாழ்வில் பிரவேசிக்கும் கிருபையைப் பெற்றிருக்கிறோம். இனி நரகத்தைப்பற்றி நாம் எதற்குப் பயப்படவேண்டும்.

பிரியமானவர்களே, வேதவாக்கியங்கள் எங்கிலும், இயேசு நம்மை நரகத்திலிருந்து மீட்க வந்தார் என்று எழுதப்படவில்லை. நம்மை நரகத்திற்குள் தள்ளவல்ல பாவத்தால் அடிமைப்பட்டிருந்த நமது நுகத்தடியை முறித்தெறிந்து நமக்கு புதிய வாழ்வு தரவே அவர் வந்து பிறந்தார். இந்த மீட்பை நாம் பெற்றிருப்பதன் நன்றியை நம் வாழ்வில் பிரதிபலிக்கிறோமா?

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, இந்தப்பொல்லாத பிரபஞ்சத்தினின்று எங்களை விடுவிக்கும் படியாகவும், எங்கள் பாவங்களுக்காகவும் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த உமது அன்புக்காக உமக்கு நன்றி. ஆமென்.