நம்மைத் தம்மைப் போல மாற்ற…

தியானம்: 2025 டிசம்பர் 12 வெள்ளி | வேதவாசிப்பு: 1யோவான்; 3:1-6

YouTube video

… அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம் (1யோவான் 3:2).

ஒரு தடவை, அநேக புறாக்கள் வீதியில் தானியம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தன. அவற்றைக் கடந்துசெல்ல முயற்சித்தால் நிச்சயம் பறந்து சென்று விடும். ஆக, ஒரேவழி, நானும் புறாவைப்போல மாறவேண்டும். முடியுமா? சிந்தனை ஓடியது. நம்மால் செல்லமுடியாததால் இயேசு தாமே மனிதனாகி உலகில் வந்து பிறந்தார். அவர் தமது முழு தெய்வத்துவத்துடன் வந்திருந்தால் நம்மால் அவரை அணுகியிருக்கமுடியாது. அவர் முழு மனிதனாக வந்து, பாவமில்லாமல் வாழ்ந்து, மரித்து, உயிர்த்தோரின் முதற்பலனாகி நமக்கு முன் உதாரணமானார். இப்படியிருக்க, அவர் திரும்ப வரும்போது, நாம் இப்படியே அவரைச் சந்திக்கமுடியுமா? அவரைப்போல இருந்தால்தான் அவரைக் கிட்டிச் சேரமுடியும். அது நம்மால் முடியாது. ஆக, நம்மைத் தம்மைப்போல மாற்றிடவே மனுஷகுமாரன் ஒரு மனிதனாக வந்து பிறந்தார். அவர் நாமம் சொல்லி வாழுகின்ற நாம் அவரைப்போல மாற நம்மைக் கொடுத்திருக்கிறோமா?

“தேவன் எவர்களை முன்குறித்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்” (ரோம.8:29). 8:28ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘நன்மைக்கு ஏதுவாக’ என்பது இதுதான். கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு, ஒரு நாளில் நடந்துமுடிந்து விடுகின்ற மாயாஜாலம் அல்ல. கிறிஸ்துவைப்போல மாறுகின்ற ஒரு படிமுறை அது. நாம் கிறிஸ்துவை முகமுகமாய் காணும்வரைக்கும் இது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். அதுவரை இது பூரணப்படாது. அன்று மோசே அனுபவித்த மகிமையைப் பார்க்கிலும் (2கொரி.3:10-18) தேவாவியானவர் நமக்குள் கற்பித்துத்தருகிற மகிமை மேலானது; நிலையான அந்த மகிமையை, முக்காடு இல்லாமல் கிறிஸ்துவில் உற்றுநோக்கும் சிலாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். அதை உற்று நோக்க நோக்க, அவரைப்போல மாறும் கிருபையைப் பெறுகிறோம். சுவிசேஷங்களிலே கிறிஸ்துவின் சத்தியத்தைக் காணக்காண, அவருடைய வாழ்வைப் புரிந்துகொண்டு அதை அப்பியாசப்படுத்தும்போது, அதினூடாக நமது தேவன் எவ்வளவு அதிசயமானவர் என்பதையும் உணருகிறோம். அதில் ஆழமாக வளர வளர கிறிஸ்துவைப்போல நாமும் வாழ, மறுரூபமடைய பரிசுத்த ஆவியானவர் நமக்குத் துணை நிற்பார். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு கிறிஸ்துவைக் கிட்டிச்சேர்ந்து, அவரோடு நடக்கிறோமோ அவ்வளவுக்கு அவரை நாம் தரித்துக்கொள்கிறோம்.

இந்தக் கொண்டாட்ட நாட்கள் இந்த வளர்ச்சிக்குத் தடைசெய்ய நாம் இடமளிக்கக்கூடாது. உலகில் பிறந்த இயேசுவைப்போல நாமும் மாறுதலடைந்து மறுரூபமடைய வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து வழுவிப் போகாதபடி தேவாவியானவர் கரங்களில் நம்மைத் தருவோமாக.

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, உம்மில் நிலைத்திருந்து உம்மோடு நடந்திட தூய ஆவியானவர் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.