உருவாக்கும் தேவன்!

தியானம்: 2025 டிசம்பர் 13 சனி | வேதவாசிப்பு: எரேமியா 18:1-12

YouTube video

…. களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள் (எரேமி 18:6).

ஒரு தடவை உலகின் சிறந்த வயலின் மேதை ஒருவர், காட்டிற்குள் வழிமாறி ஒரு துறவியின் குடிலைக் கண்டு அங்கு சென்றார். உணவு உண்டபின் அத்துறவி, தனது பழைய வயலினை எடுத்து இசைக்க ஆரம்பித்தார். தானும் இசைக்கும்படி அந்த வயலினைத் தரும்படி இந்த மேதை கேட்டார். இவரை அறிந்திரா துறவியோ, “நான் பல ஆண்டுகள் முயற்சித்தே இதைக் கற்றேன், இது ஆங்காங்கே உடைந்தும்விட்டது, உம்மால் முடியாது” என்றார். மேதையோ தான் முயற்சிப்பதாகக் கூறி, அதைக் கையில் எடுத்து, அதன் நரம்புகளைச் இழுத்து சரிசெய்து, இசைக்க ஆரம்பித்தபோது, அந்தக் குடிசை தெய்வீக இசையினால் நிரம்பியது. அந்தத் துறவியோ அழ ஆரம்பித்து விட்டாராம் என ஒரு நூலின் வாசித்தேன்.

நாமும் ஒருவிதத்தில் வாழ்வில், நமது நரம்புகள் அறுந்து, ஆங்காங்கே கீறல்பட்டு உடைந்து சிதைந்துபோனவர்கள்தான். இப்படியிருக்க எப்படி நம்மால் இயேசுவைப்போல மாற்றமடைய முடியும்? அவரைக் கிட்டிச்சேர்ந்து உறவாட முடியும்? வெளி வாழ்விலே வெற்றி வாழ்வு வாழுவதுபோலக் காணப்படுகிற பலர் இன்று தம்முள்ளே உடைந்து சிதைந்த வாழ்வைத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் உணருவதில்லை. அப்போ நம்பிக்கை இல்லையா? பிறந்த இயேசுவைத் தைரியமாகக் கொண்டாடுகிற நாம், அவர் மீண்டும் வரும்போது அவருடன் இருக்கத்தான் முடியுமா? அப்படியானால் நமது முடிவு என்ன? இப்படியாகத் தங்களுக்குள் தவிப்பவர்கள் நம்மைச் சுற்றிலும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கை உண்டு. அன்று எரேமியாவை குயவனின் வீட்டுக்கு அனுப்பிய கர்த்தர், ஒரு காரியத்தைக் காண்பிக்கிறார். குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையில் கெட்டுப்போயிற்று. அதை அவன் எறிந்துவிடவில்லை. அதைத் திருத்தமாய் செய்யும்படிக்கு, தன் பார்வைக்கு சரியாய்க் கண்டபடி அதைத் திரும்ப வேறே மண்பாண்டமாகச் செய்கிறான். கர்த்தர் கேட்கிறார்: இப்படி நான் செய்யக் கூடாதோ? களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல, ‘நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.’

இன்று நம்மை நாமே கேட்கவேண்டிய கேள்வி, நான் என் கர்த்தரின் கையில் இருக்கிறேனா? நம்மை அவர் கரங்களில் தந்தால், போலியான நமது வெளி வாழ்வு நிச்சயம் சாம்பலாகும்; சிதைவுகள் சரியாகும். அழகு குலைந்த நமது உள் வெளி வாழ்வு மாற்றமடையும். நரம்புகள் முறுக்கேறும். இயேசுவைப்போல நம்மை மறுரூபப்படுத்துகின்ற தமது படிமுறையில் கர்த்தர் வேலை செய்வார். பின்னர் அவர் நம்மில் இசைக்கும் இசை, பூலோகில் மாத்திரமல்ல, பரலோகில் தேவதூதர்களையும் மகிழ்விக்கும். இதை உங்களால் விசுவாசிக்க முடியுமா!

ஜெபம்: கர்த்தாவே நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர். நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. ஆமென்.