மாதிரியை வைத்துப்போக…
தியானம்: 2025 டிசம்பர் 15 திங்கள் | வேதவாசிப்பு: பிலிப்பியர் 2:1-13

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும் (1யோவான் 2:6).
“என் அப்பாதான் என் மாதிரி; அவருடைய இளமைக் காலத்துக் காரியங்களை ஆராய்ந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினேன். அதுவே என் வெற்றிக்குக் காரணம்” என்றான் ஒரு மகன் பெருமையுடன். இன்று நமக்கு “மாதிரி” யார்? நான் எனக்கென்று வாழும் வழியை வகுத்திருக்கிறேனா? அல்லது யாராவது எனக்கு முன்மாதிரியாக இருக்கிறார்களா?
விழுந்துபோன உலகில், வீழ்ந்துவிட்ட மனிதன் தான் வாழவேண்டிய நீதியின் பாதைதனை தொலைத்துவிட்டான். வழிவிலகிய மனுக்குலத்தை மறுபடியும் தமது பாதையில் நிலைநாட்டும்படிக்கே தேவாதி தேவன் மனுஷனானார் என்பது நாம் அறிந்ததே! அதற்காகவே அவர் ஒரு முழு மனிதனாக வந்து பிறந்து, ஒரு மனிதனாகவே வாழ்ந்து, இந்தப் பாவமான உலகிலும் பாவத்துடன் சமரசம் செய்யாமல் பாவத்தை வெறுத்து தேவனுக்கு மாத்திரம் பிரியமாய் ஒருவன் வாழமுடியும் என்பதை இயேசு நமக்கு வாழ்ந்து காட்டினார்; நமது பாவத்திற்காகச் சிலுவைக்குச் செல்லுமுன்னதாக அந்தப் பாவத்துடன் சமரசம் கொள்ளாமல், இந்த உலகில் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழமுடியும் என்பதை இயேசுதாமே வாழ்ந்தும் காட்டினார்; ஆம், அவர் இதற்காகவே உலகில் வந்து பிறந்தார். அவர் நடந்த பாதையை சற்று தியானித்துப் பார்த்தால், இன்று நாம் அவர் மாதிரியில் நிற்கிறோமா என்பது கேள்விக்குறிதான். நாம் குற்றம் செய்து தண்டனை பெறும்போதே முறுமுறுக்கிறோம், அவரோ குற்றமற்றவராகவே தமக்கு எதிராக எழுந்த பாடுகளைப் பொறுமையோடே சகித்தார். “கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்” (1பேது.2:21) என்று எழுதுகின்ற பேதுரு, “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்” என்கிறார்.
“நானே வழி” என்றுரைத்தவர் இயேசுவானவர். அவர் தாமே அந்த வழியாய் நம் முன்னே நடந்து, நித்திய வாழ்வுக்கான மாதிரியை நமக்கு வைத்துப் போயிருக்க, நாம் வேறு யாருடைய மாதிரியில், வேறு யாருடைய அடிச்சுவட்டில் நடக்கப்போகிறோம்? அல்லது, நானும் என் சுயவழியும் என்று அழிவுக்கு நேராகச் சென்றுகொண்டு, “நான் இயேசுவை நேசிக்கிறேன், நிலைத்திருக்கிறேன்” என்று எப்படிக் கூறமுடியும்? ஆம், “அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.” அவர் நடந்த பாதை உலகத்தோடு சமரசம் செய்யாத பாதை; அது பிதாவின் சித்தத்தை மாத்திரமே செய்த பாதை; அநீதியின் பிடியில் அகப்பட்ட போதும் நீதியின் ஆண்டவராய் பாடுகளைச் சகித்த பாதை. இன்று நான் எந்தப் பாதையில், யாருடைய மாதிரியின்படி நடக்கிறேன்?
ஜெபம்: கர்த்தாவே, நித்தியவாழ்வுக்கான மாதிரியை எங்களுக்குக் காண்பித்திருக்கிறீர். அந்த மாதிரியின் அடிச்சுவட்டை நாங்களும் பின்பற்ற எங்களுக்குக் கிருபை செய்யும். ஆமென்.