சலவைத் தொட்டி ஜெபம்
தியானம்: 2025 டிசம்பர் 17 புதன் | வேதவாசிப்பு: லூக்கா 6:13-19

ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம் பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான் (லூக்கா 11:1).
முதிர்வயதான ஒரு ஏழை மூதாட்டி ஒருவர், துணி வெளுக்கும் பணியிலிருந்தார். சுருக்கம் விழுந்த கன்னங்களுடன் கண்களிலிருந்து கண்ணீர் வடித்தபடி, தனது மகன் ஜோனுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தாள். இளவயதில் வீட்டை விட்டு ஓடிய மகன், ஒரு கொடியவனாக மாறியிருந்தான். ஆனால், தன் மகன் மனந்திரும்பி, ஆண்டவர் பணி செய்யவேண்டுமென பல காலமாக ஜெபித்துவந்த இத் தாய் மனம் சோரவில்லை. சலவை செய்யும் போதெல்லாம், “இந்த வெண் நுரைபோல மகனுடைய பாவங்கள் கழுவப்பட்டு, அவன் தூய்மையாக மாற அவனைச் சலவை செய்யும்” என்பதே அவளது இடைவிடாத ஜெபம். அதன் பலனாக, மகன் ஜோன் நியூட்டன், மனம் மாறினான். பின்பு, பிரசங்கியாக மாறினார். அவர் பணியின் பலனாக தன்னலம் கொண்ட தாமஸ் ஸ்காட் என்பவர், எழுத்துக்கள் பிரசங்கம் மூலம் அநேகரை கர்த்தரிடம் இழுத்துவந்தார். அவர்களில் ஒருவர் வயிற்று நோயாளியான வில்லியம் கூப்பர், அவர் ஆண்டவரால் கழுவப்பட்ட போது எழுதிய பாடல்தான் “இம்மானுவேலின் இரத்ததால்” என்ற பாடல். (இன்று இப் பாடல்கள் மறக்கப்பட்டுவருவது துக்கத்திற்குரியது). இந்தப் பாடலினால் ஆண்டவரிடம் இழுக்கப்பட்டவர்கள் எண்ணிலடங்காது. அவர்களில் ஒருவர் வில்லியம் வில்பர் போர்ஸ் என்ற கிறிஸ்தவ அரசியல்வாதி. இவர் அடிமைகளின் கட்டுக்களை அறுத்தெறிந்தார். இவர்மூலமாக வந்த இன்னுமொருவர் லேரின்மண்ட் என்ற பாதிரியார். இவர் எழுதிய “பால்காரன் மகள்” என்ற நூலைப் படித்தவர்களுடைய இருதயமும் ஆண்டவரின் அன்பினால் நிறைந்தது. இப்படிப்பட்ட சரித்திரம் இனியும் தொடரும்.
பெயர் அறியப்படாத ஒரு தாயின் ஜெபம், தொடர் சங்கிலியாக தேவ ராஜ்யத்தின் பணிக்கென அநேகரை எழுப்பியது! தமது சீஷர்களைத் தெரிந்தெடுத்தபோது இரா முழுவதும் ஜெபித்தார் ஆண்டவர், என்ன ஜெபித்தார் என்பது பதியப்படவில்லை. ஆனால், இந்த சீஷர்கள் இயேசுவின் ஜெப ஜீவியத்தைப் பார்த்து, தங்களால் அது முடியவில்லை என்று உணர்ந்து, தமக்கும் ஜெபிக்கக் கற்றுத் தரும்படி கேட்டார்கள். ஆண்டவரும் கற்றுக்கொடுத்தார். இந்த ஜெப அலை தொடர்ந்து, அலையலையாக சீஷர்கள் விசுவாசிகளிடம் பரந்து, இன்றும் ஜெப வாழ்வே நமது மூச்சாக இருக்கிறது. இயேசு ஜெபித்து, சீஷரைத் தெரிந்தெடுத்து அனுப்பினார். அந்த மூதாட்டி தன் ஜெபங்களின் பலனை அறியாமலேயே, பலர் வாழ்வில் அசைவைக் கொண்டுவந்தாள். இன்று நமது ஜெப வாழ்வு, இயேசுவின் முன்மாதிரியில் நின்று ஜெபித்து, அலை அலையாக மக்களைக் கர்த்தருக்காக எழுப்புமளவுக்கு அனலாக இருக்கிறதா? இந்த அனலை நமக்குள் பற்றி எரியப்பண்ணவுமே இயேசு உலகில் வந்து பிறந்தார் என்பதை உணர்ந்து, விசேஷமாக இந்த நாட்களில் நமது ஜெபவாழ்வை முதலில் மாற்றியமைக்க, தேவகரத்தில் நம்மைத் தருவோமா!
ஜெபம்: கர்த்தாவே, கிறிஸ்துமஸ் கொண்டாட்ட காலங்களில் எங்களது ஜெபவாழ்வு மங்கிடாது காத்திடும். இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.