வாக்களிக்கப்பட்ட நித்தியஜீவன் !

தியானம்: 2025 டிசம்பர் 18 வியாழன் | வேதவாசிப்பு: யோவான் 17:3; ரோமர் 6:22-23

YouTube video

நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம் (1யோவான் 2:25).

‘மரணம் நம்மைப் பிரிக்கும் வரைக்கும்’ என்று திருமண உடன்படிக்கையில் ஒருவார்த்தை அறிக்கையிடுவதுண்டு. கால எல்லைக்குட்பட்ட ஒரு மனிதனால் ஆகக் குறைந்தது மரணம் வரைக்கும்தான் தன் துணையுடன் கூடவே வாழ முடியும். ஆக, மனிதர் நம்முடைய வாழ்வு அவ்வளவுதானா? இல்லை! நித்திய காலமாய் நம்முடன் கூடவே இருக்கின்றவருடன், அவருடன் வாழுகின்ற நித்திய வாழ்வு நமக்கு உண்டென்பதையும் வேதவாக்கியங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. அந்த நித்தியருடன் நித்தியமாக வாழுவதற்கு நமக்குத் தேவை நித்திய ஜீவன். மனிதனால் இதனை எங்கே தேடிப்பிடிக்க முடியும்? நித்திய ஜீவனை வாக்களிக்கவும், அதை நமக்குப் பெற்றுத்தரவுமே இயேசு உலகில் வந்து பிறந்தார் என்பதை மனதிற்கொள்வோம். அவர் மாத்திரம் மனிதனாய் வந்து நம்மை மீட்டு தமது பிள்ளைகளாக்கியிராவிட்டால், நாம் நித்திய அழிவைத்தான் சந்திக்கவேண்டி இருந்திருக்கும்.

“நித்தியம்” என்பது முடிவு மாத்திரமல்ல, அதற்கு ஆரம்பமும் முடிவும் இரண்டுமே கிடையாது என்பதே அதன் வரைவிலக்கணம். ஆகவே நித்திய வாழ்வு என்பது, வெறுமனே நீடித்த வாழ்வு அல்ல, நித்தியத்திற்கு உரிமையாளரான தேவன் ஒருவரே நித்திய வாழ்வுக்குரியவர். அவரால் அதை நமக்குத் தரமுடியும். தேவதூதர்களுக்கு அது இல்லை, ஆனால் அவர் அதை நமக்குத் தருகிறார். ஆக, நித்திய வாழ்வு என்பது வெறுமனே என்றென்றும் வாழும் வாழ்வு அல்ல; தேவதூதர்கள் என்றென்றும் வாழுகிறார்கள், நரகத்துக்குப் போகிறவர்களும் என்றென்றும் வாழுவார்கள். இதுவா நித்திய வாழ்வு? இல்லை! ஆக, நித்தியராகிய தேவன் நமக்கு அருளும் ஈவுதான் நித்திய வாழ்வு. இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, நித்திய வாழ்வு என்பது எவ்வளவு காலம் வாழுவது என்கிற அளவினால் அல்ல, அது வாழ்வின் தரத்தில், அதன் தன்மையில் தங்கியிருக்கிறது. ஆக, நித்திய வாழ்வு என்பது, நமக்கு தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு விசேஷித்த கொடை; இது, கிறிஸ்துவுக்குள் ஒருமனிதன், புதியதும் மீட்கப்பட்டதுமான வாழ்வை வாழுவது, கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வின் குணாதிசயங்களைக் கொண்டது. இயேசுவினாலான மீட்பைப் பெற்று, தேவசித்தத்துக்கு முற்றிலும் அர்ப்பணித்தவனுக்கே இந்த நித்திய ஜீவன் வருகிறது. ஒன்றான மெய்த் தேவனையும் அவர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் (யோவா.17:3). இந்த அறிவை நமக்குத் தருகிறவர் பரிசுத்த ஆவியானவர். “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்” (யோவா.7:38) என்றார் இயேசு. ஆக, இந்த நித்திய வாழ்வை நமக்கு வாக்கு பண்ணியதோடு, அதன் நிச்சயத்தையும் நமக்கு கொடையாகக் கொடுக்கும்படிக்கு இயேசு உலகில் வந்து பிறந்தார். இந்த வாழ்வின் மகிழ்ச்சி நமக்குள் உண்டா?

ஜெபம்: கர்த்தாவே, நித்திய ஜீவனை தருவேன் என்று வாக்குத்தத்தத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம். பண்டிகையை இந்த மகிழ்ச்சியோடு கொண்டாட அருள் தாரும். ஆமென்.