எதை மறந்தோம்!
தியானம்: 2025 டிசம்பர் 20 சனி | வேதவாசிப்பு: சங்கீதம் 106:13-22; 1பேது.1:3-9

…. சீக்கிரமாய் அவருடைய கிரியையை மறந்தார்கள். …. தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள் (சங்.106:13,22).
ஒருவயது குழந்தைக்குப் பிறந்தநாள் கொண்டாடினார்களாம். அனைவரும் அக்குழந்தையை மறந்து தங்கள் களியாட்டத்தில் மகிழ்ந்து, திடீரென குழந்தையை மறந்துவிட்டோமே என்று ஓடிவந்து பார்த்தபோது, அது புரைக்கேறி இறந்துகிடந்ததாம். இது ஒரு கதையாகக் கூறப்பட்டாலும்கூட, இதில் ஒரு உண்மை உண்டு. இன்று நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் பிறந்த இயேசுவையும், அவருடனான உறவையும், அவர் நமக்குச் செய்தவற்றையும் மறக்கச் செய்துவிடாதபடிக்கு ஜாக்கிரதையாக இருப்போமாக.
106ம் சங்கீதம் இஸ்ரவேலைக் கர்த்தர் நடத்திவந்த அதிசயங்களையும், ஜனங்கள் அவரை மறந்து தங்கள் சுய இச்சையின்படி நடந்து தங்களுக்குத் தாங்களே தீவினைகளை வருவித்ததையும் சங்கீதக்காரர் கோர்வையாகப் பாடிவைத்துள்ளார். இதே நிலைமை இன்றும் இல்லை என்று சொல்லமுடியாது. உலக இச்சை, இதுதான் நமக்கு முதல் எதிரியாக நின்று கர்த்தரை மறக்கச் செய்கிறது. அவரை மறந்துவிட்டதுபோன்று வாழச்செய்து நம்மை வீழ்த்திவிடுகிறது. இயேசுவை அறிகிற அறிவிலிருந்து நம்மை வழிவிலகச் செய்து, உலக அறிவினாலும், கேடான சிந்தனைகளாலும் நம்மை நிறைத்து விடுகிறது. இதிலிருந்து தப்பிக்க பேதுரு எழுதியுள்ள நல் ஆலோசனை நமக்கு மிக அவசியமானது. விசுவாசத்தோடே தைரியத்தையும், அத்தோடே ஞானத்தையும், இச்சையடக்கத்தையும் பொறுமையையும் தேவபக்தியையும் சகோதர சிநேகத்தையும் இவை யாவற்றுடனும் அன்பையும் கூட்டி வழங்குங்கள். இதிலே பெருகினால் கிறிஸ்துவை அறியும் அறிவிலே நம்மைக் கனியற்றவர்களாக விடமாட்டாது. இதிலே வளராவிட்டால், நாம் பாவங்களறச் சுத்திகரிக்கப்பட்டதை நாம் மறந்துபோகிற பரிதாபநிலைக்குள் விழுந்து விடுவோம். இது, நம்மை ஆண்டவரை மறக்கச் செய்துவிடும். அதாவது அவருக்கு நாம் முதலிடத்தைக் கொடுப்பதைத் தவறப்பண்ணிவிடும்.
வருடாவருடம் கொண்டாட்டங்களின் செயற்பாடுகள் முன்னேற்றமடைகிற பெயரிலே, கொண்டாட்டத்தின் காரணரையும், அவர் பிறந்த காரணங்களையும், அவர் செய்து முடித்த அன்பின் கிரியைகளையும் அலட்சியம் செய்து, அவருடைய வருகையின் எச்சரிப்புகளையும்கூட மறக்கச் செய்துவிடுகிறதோ என்று சற்று சிந்திப்போமாக. காரணரை மறந்த காரியங்களால் என்ன பலன்? அன்று கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் செய்த அதே தவறை, இன்று நம்மைத் தெரிந்தெடுத்து அழைத்த தேவனுக்கு முன் நாமும் செய்யாதிருப்போமாக. ஒவ்வொரு அடியிலும் நிதானித்து முன்செல்ல ஆவியானவர் துணைசெய்யட்டும்.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்த எங்களை மீட்கும்படி இப்பூலகிற்கு வந்து எங்களை மீட்டுக்கொண்ட உமது அன்பின் கிரியைகளை மறவாத நன்றியுள்ள இருதயத்தை எங்களுக்குத் தாரும். ஆமென்.