தேவபக்திக்குரிய வாழ்வு

தியானம்: 2025 டிசம்பர் 21 ஞாயிறு | வேதவாசிப்பு: யோவான் 3:15-16; 1தீமோத்.3:16

YouTube video

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது (1தீமோத்.3:16).

‘பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்’ (கொலோ.3:2). இந்த சத்திய வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிந்திருக்கிறோமா, அல்லது முயற்சி எடுத்ததுண்டா? அன்றாட வாழ்வில் பரலோகத்திற்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க நமது இருதயத்தில் போராடவேண்டும். தற்காலிகமானவற்றில் அல்ல, நிரந்தரமானவற்றில் நமது மனதை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் நமது கண்களோ தற்காலிகமான பூமிக்குரியவற்றில் லயித்திருக்கும்படி களியாட்டங்களை அல்லது கஷ்டங்களை சத்துரு விதைக்கிறான். அதற்கு நாமும் இணங்குகிறோமா அல்லது, இயேசு பிறப்பின் உன்னத சத்தியத்தை பூமிக்குரிய பார்வையில் பார்க்காமல், மேலானவற்றில் கண் வைத்து, காரியங்களை மாற்றியமைக்கிறோமா?

1தீமோ.3:16 ஐ ஒரு பாடலாகவே இசைக்கலாம். நாம் எப்படி தேவபக்தியுள்ள தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறோம்? “தேவத்துவத்தின் அதிசயம்” என்ற இந்த நற்செய்தியின் நடுமையத்தை, அந்த சுவிசேஷத்தை இங்கு பவுல் வெளிப்படுத்துகிறார். நம்மைப் பிதாவுடன் ஒப்புரவாக்கும்படிக்கு இயேசு மனுஷனாக வந்தார்; ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டதால், இயேசுவின் உயிர்த்தெழுதலில் பரிசுத்த ஆவியானவர் அவர்மீது தங்கியிருந்தார் என்பது தெளிவாகிறது. தேவதூதர்களால் காணப்பட்டார், மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டார் என்னும்போது, இயேசுவின் தேவத்துவம் நம்முன்னே பிரகாசிக்கிறது. ஆனால், சுயபிரயாசத்தில் நம்மால் தேவனைத் திருப்திப்படுத்த முடியாது. ஒரு மனிதனாக இயேசு பூரணமான வாழ்வு வாழ்ந்தார்; ஆகையால் அவர் நமது வாழ்வுக்கு முன்மாதிரியானார். தேவனாக இயேசு, நாம் தேவனுக்கு முன்பாக சரியான வாழ்வு வாழ நமக்கு வல்லமையைத் தருகிறார். ஆக, மெய்யாகவே இயேசுவை விசுவாசித்து, அவரைப் பின்பற்றும்போது நம்மால் தேவபக்தியுள்ள தெய்வீகத்துவ வாழ்வு வாழ முடியும்.

தேவபக்தி என்பது ஒரு இரகசியம் என்கிறார் பவுல். இந்த தேவத்துவ வாழ்வை நமக்குப் பெற்றுத்தருவதற்கு மனிதனாக வந்த தேவனுக்கு இன்று நாம் உண்மையாய் வாழுகிறோமா? மெய்யாகவே இது நமது சுயபெலத்தால் ஆகாது. “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனும் கெட்டுப்போகாமல் மேலானவைகளை நாடித் தேடி, நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படிக்குத் தம்முடைய ஒரேபேறான குமாரனையே நமக்காகத் தந்திருக்கிறார்.” மேன்மையுள்ள தேவபக்திக்குரிய வாழ்வு வாழ்ந்து தம்மண்டை வந்து சேரவேண்டும் என்பதற்காகவே உலகில் வந்த ஆண்டவருக்கு நமது பதில் என்ன? அந்த மேன்மையை நாம் நாடுகிறோமா? அல்லது, இன்னமும் பூமிக்குரியதில் நம் கண்களைப் பதித்திருக்கிறோமா?

ஜெபம்: பிதாவே, பூமிக்குரியதில் என் கண்களைப் பதித்திராமல் மேன்மையான தேவ பக்திக்குரிய வாழ்வு வாழ அவற்றிலே கண்ணோக்கமாயிருக்க உதவி செய்யும் ஆமென்.