தாபரம்
தியானம்: 2025 டிசம்பர் 22 திங்கள் | வேதவாசிப்பு: ஏசாயா 33:18-24

எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக் கொண்டாய் (சங். 91:9).
தாபரம் என்பதன் அர்த்தம் புகலிடம்’ என்பதாகும். இந்த சங்கீதத்தைப் பாடியவர் பலவித சூழ்நிலைகளை, ஆபத்துக்களைச் சந்தித்திருக்கவேண்டும். அவ்வேளைகளிலெல்லாம் தேவன் தனக்கு அடைக்கலமாயிருந்து தன்னை அற்புதமாகக் காத்துக்கொண்டதை அனுபவித்திருக்கவேண்டும். ஆகவேதான், தனக்கு அடைக்கலமாயிருந்தவரை, புகலிடமாகக் கொள்ளும் எவருக்கும் பொல்லாப்பு நேரிட தேவன் இடமளிக்கமாட்டார் என்று உறுதியோடு இச் சங்கீதத்தைப் பாடியுள்ளார். வேதாகமத்திலே, தேவன் தம்முடைய பிள்ளைகள் யாவருக்கும் புகலிடமாக இருந்தார் என்பதையே காண்கிறோம். குழந்தைகள் கொலை செய்யப்படுகின்ற பாதக சூழலில்தான் மோசே பிறந்தார். ஆபத்து நிறைந்திருந்தபோதும் தேவன் அவருக்குப் புகலிடமாயிருந்ததால் எதிரியின் மாளிகையிலேயே மோசே வளர்க்கப்பட்டார். தேவன் மோசேயை இறுதி வரைக்கும் கைவிடவேயில்லை. தேவனாலேயே அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீது, பயங்கரமான ஆபத்துக்களைச் சந்தித்தபோதும் கடைசிவரைக்கும் தேவனுடைய பாதுகாப்பு அவருக்கு இருந்தது. இப்படி அநேக அனுபவங்களை நாம் காணலாம். இயேசுகிறிஸ்துவும், மரணபயம் மிக்கதொரு சூழலிலேதான் பிறந்தார். ஆனால், உன்னதமானவரோ அவருக்கு அடைக்கலமாயிருந்து, சிலுவை பரியந்தம் தமது செட்டைக்குள் வைத்துப் பாதுகாத்தார்.
இன்று தமக்குப் புகலிடமாக இருக்கவேண்டுமென்று எத்தனை கரிசனையுடன் வீடுகளைக் கட்டுகிறார்கள். உயர்ந்த மதில்களையும் கூரைகளையும் போடுகின்றார்கள். பலமுள்ள தூண்களும், பாதுகாப்பு முன்னெச்சரிப்புக்களும் என்று பல காரியங்களை மக்கள் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இவை ஒரு வினாடியில் நொருங்கி தரைமட்டமாக கூடுமல்லவா! அச்சமயங்களில் நாம் வீட்டைவிட்டு வெளியே நிற்பதுதான் பாதுகாப்பு என்று எண்ணக்கூடிய சூழ்நிலைகளும் உருவாகின்றன.
ஆனாலும் கர்த்தர் நமக்கு வாக்களிக்கிறார். பிரியமானவனே, “உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்” (ஏசா.33:20). அமரிக்கையான தாபரம், இது எத்தனை ஆறுதல் அளிக்கும் வார்த்தைகள். யாராலும் தகர்க்க முடியாத கூடார மறைவாகிய தேவனுடைய அடைக்கலத்துள் நீயும் வந்துவிடு. இக்கிறிஸ்துமஸ் நாட்களில் கலக்கம் நிறைந்த உள்ளத்துடன் இருக்கிறாயா? அந்த உன்னதமானவரை உனக்குத் தாபரமாகக் கொண்டு அவரையே அண்டிக்கொள். அங்கே உனக்கு நித்திய பாதுகாப்பு உண்டு. தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும் … என் புகலிடமும் என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் அவரே (2சாமு.22:3).
ஜெபம்: “உன்னதமானவரே, உமது கூடாரத்தையே எனக்கும் தாபரமாகக் கொண்டு, உமதண்டை வருகிறேன். என்னையும் ஏற்றுக்கொள்ளும். ஆமென்.”