காக்கும் தூதர்கள்!
தியானம்: 2025 டிசம்பர் 23 செவ்வாய் | வேதவாசிப்பு: தானியேல் 6:16-23; எபிரெயர் 1:7-14

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் (சங்கீதம் 91:11).
இன்றும் நமக்கு தேவனின் வாக்குத்தத்தம் வருகிறது. நாம் போகும் இடங்களில் நமக்கு தீங்கு நேரிடாவண்ணம் நம்மைக் காத்துக்கொள்ளும்படிக்கு, தேவன், தமது தூதர்களை அனுப்பிவைப்பார். எத்தனை ஆச்சரியமான காரியம்! மறுரூபமலையிலே கூடாரம் போட்டு தங்கிவிட பேதுரு மனதாயிருந்தார். ஆனால் முகங்குப்புற விழுந்துகிடந்த சீஷரை எழுப்பி, “பயப்படவேண்டாம் எழுந்திருங்கள்” என்று சொல்லி கீழே அழைத்து வந்தார். நல்லதொரு தாபரம் கிடைத்ததும் நாம் தங்கி சுகமாயிருக்க விரும்புகிறோம். ஆனால் ஆண்டவரோ புறப்பட்டுச் செல்ல அழைக்கிறார். நாம் புறப்பட்டுச் செல்லவேண்டியவர்கள். பாதையில் என்ன ஆபத்து வந்தாலும் கர்த்தர் நம்மை நிச்சயம் காப்பார்.
இஸ்ரவேலர் புறப்பட்டபோது, தூதன் அவர்கள் முன்பாகச் சென்றான்; பின்பு தேவையேற்பட்டபோது, விலகி பின்னால் சென்றான். கன்றுக்குட்டியிடம் சோரம் போன இஸ்ரவேலர்மீது தேவன் கோபம் கொண்டாலும், அவர்களைக் கைவிட்டு விடாமல், ஒரு தூதனை அவர்களுக்கு முன்பாக அனுப்பி வைத்தார் (யாத். 33:1,2). தானியேல் சிங்கக்கெபிக்குள் போடப்பட்டபோது அங்கேயும் தேவன் தமது தூதனை அனுப்பி காத்துக்கொண்டார். “சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்” என்றார் தானியேல் (தானி.6:22). அப்போஸ்தலர்களின் வழிகளில் கஷ்டங்கள் சிறையிருப்புகள் வந்தன. கர்த்தருடைய தூதனோ, இராத்திரி நேரத்திலே சிறைச்சாலைக் கதவுகளைத் திறந்து, அவர்களை அப்பிடியிலிருந்து வெளியேற்றினான் என்றும் வாசிக்கிறோம் (அப்.5:19).
பிரியமானவர்களே நமது வழிகளிலும் நமக்குத் துணையாக மாத்திரமல்ல, மரண நேரத்திலுங்கூட தேவனால் அனுப்படும் தூதன் வந்து, நம்மை தேவ சமுகத்திற்கு அழைத்துச் செல்வான் (லூக்.16:22). “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களின் நிமித்தமாக ஊழியம் செய்யும்படிக்கு அவர்கள் எல்லோரும் (தூதர்கள்) அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்கள் (எபி.1:14). ஆம், உன்னதமானவரையே அடைக்கலமாகக் கொண்ட நமக்கு ஊழியம் செய்யும்படிக்கு தேவதூதர்கள் தேவனிடமிருந்து கட்டளை பெற்றிருக்கிறார்கள். கிறிஸ்து பிறக்கும் முன்பிருந்தே தேவதூதர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட ஊழியங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். தேவபிள்ளையே, கர்த்தருடைய வழிகளில் நடக்கின்ற யாவரும் தமது வழிகளிலே தனித்துப் போகத் தேவையில்லை. தேவனால் கட்டளை பெற்ற தூதர்கள் நம்மோடேகூட வருவார்கள். ஆகவே தைரியத்தோடே முன்னேறுவோம். தேவதூதரைக் குறித்தோ, தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது (எபி.1:7).
ஜெபம்: “என் வழிகளிலெல்லாம் என்னைக் காக்கும்படிக்கு நீர் அனுப்புகின்ற உமது தூதர்களுக்காக, பிதாவே உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.”