ஏந்திச்செல்லும் தூதர்கள்
தியானம்: 2025 டிசம்பர் 24 புதன் | வேதவாசிப்பு: சங்கீதம் 94:1-23

உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் (சங்.91:12).
தேவ பாதுகாப்பு என்பது நம் வழிகளிலெல்லாம் தீங்கணுகாமல் காத்துக் கொள்வதோடு நின்றுவிடுவதில்லை. நாம் முன்னேற முடியாமல் இடறி விழும் போதும், அல்லது சாத்தான் கொண்டுவரும் தடைகளைச் சந்திக்கும் போதும், நமக்காக தேவனால் நியமிக்கப்பட்டிருக்கும் தூதர்கள் பறந்துவந்து நம்மை வாரி அணைத்துக்கொண்டு உதவி செய்வார்கள். எத்தனை ஆச்சரியமான வாக்குத்தத்தம்! நம் தேவன் நம்மில் கரிசனையுள்ளவராய் இருக்கிறார்.
பாவ இருளில் வாழ்ந்த ஒரு சகோதரி, தேவனுடைய அளவற்ற கிருபையால் மீட்கப்பட்டாள். சொல்லிமுடியாத மகிழ்ச்சி. ஆனால், சில மாதங்களுக்குள் எந்தப் பாவக்கிடங்கில் இருந்து மீட்கப்பட்டாளோ, அதே சேற்றுப்பள்ளத் தாக்கை நோக்கி மெதுமெதுவாக நழுவி கீழே விழத்தள்ளப்பட்டாள். விழுந்து கொண்டிருந்த பாதி வழியிலே, திடீரென சுய நினைவடைந்தவளாக, விழித்துக் கொண்டு, அவ்விடத்தைவிட்டு ஞானமாக விலகிவிட்டாள். அவள் தன் சாட்சியைப் பகிர்ந்துகொண்டபோது கூறியதாவது, “உண்மையாகவே எந்த பாவ வாழ்க்கை எனக்கு வேண்டாம் என வெறுத்துத் தள்ளினேனோ, அதே குழிக்குள் தந்திரமாக, விழத்தள்ளப்பட்டேன். தலைகீழாக விழுந்து உருண்டு உருண்டு சென்றபோது, என்னை நானே விடுவித்துக் கொள்ளமுடியாது தவித்தேன். என் பெலன் எல்லாம் அற்றுப்போய்விட்டது போலிருந்தது. அந்தச் சமயம் யாரோ வந்து, தம் கரங்களில் அப்படியே என்னை ஏந்திக்கொண்டு, என்னை விழவிடாமல் காப்பாற்றி வெளியேற்றியதை நான் நன்கு உணர்ந்தேன்” என்றாள்.
தேவபிள்ளையே, மீட்கப்பட்ட நீ இனிமேல் விழுந்துவிடமாட்டாய் என்று பெருமை கொள்ளாதே. இந்த மாம்ச சரீரத்திலும், இப் பாவ உலகிலும் நாம் ஜீவிக்கும்வரை நமக்கும் வீழ்ச்சிகள் வரத்தான் செய்யும். ஆனால், உன்ன தமான தேவனை தாபரமாகக் கொண்டிருக்கும் நமக்கு ஒரு விசேஷித்த சகாயமுண்டு. விழுந்துவிட நேர்ந்தாலும், கர்த்தருடைய தூதர்கள் நம்மைத் தம் கரங்களில் ஏந்திக்காத்துக் கொள்வார்கள். (காப்பாற்றுவார்கள் என்பதற்காக துணிகரமாக விழ எத்தனிக்கக் கூடாது) “என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது” (சங்.94:18) இது தாவீதின் அனுபவமாக இருந்தது. இயேசுவையும் பிசாசு சோதித்தபோது தூதர்கள் காப்பார்கள் என்று சொல்லி சோதித்தான். ஆனால் ஆண்டவர் தேவனுடைய சத்திய வார்த்தைகளைக் கொண்டே அவனை ஜெயித்தார். தேவனுடைய வசனத்தை சார்ந்து அதே வழியில் நாமும் நின்று ஜெயிப்போமாக. வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும் இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன் (யாத்.23:20).
ஜெபம்: “பிதாவே, எங்கள் வழிகளில் எங்களைக் காக்கவும், எங்கள் பாதம் கல்லில் இடறாத படிக்கு எங்களை ஏந்திக்கொள்ளவும், நீர் ஏற்படுத்தியிருக்கும் உமது தூதர்களுக்காக உமக்கு ஸ்தோத்திரம் ஐயா. ஆமென்.”