ஒளியின் பிள்ளைகளாவோம்!

தியானம்: 2025 டிசம்பர் 27 சனி | வேதவாசிப்பு: யோவான் 3:17-21

YouTube video

இதோ, உள்ளத்தில்; உண்மையிருக்க விரும்புகிறீர் அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர் (சங்கீதம் 51:6).

ஆதியிலே பூமியின் ஆழத்திலிருந்த இருள், தேவன் வெளிச்சத்தை உண்டாக்கியபோது, முற்றாக அகன்றுவிடவில்லை; தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாக பிரித்தே வைத்தார். படைப்பின் அந்த முதல் நாளிலிருந்து, வெளிச்சத்திற்கும் இருளுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால் இருளின் அதிகாரியான சத்துரு, அடிக்கடி வெளிச்சத்தின் பிள்ளைகளை தன் பக்கம் இழுந்து வீழ்த்துகிறான். ஆனாலும், இருளின் கிரியைகளை முற்றிலும் மேற்கொண்ட நமது ஆண்டவர் இயேசுவின் கிருபை நம்முடன் இருப்பதால், இருளுக்கும் நமக்கும் என்னதான் சம்பந்தம் இருக்கப்போகிறது?

“கர்த்தருடைய இருதயத்துக்கு ஏற்றவன்” (அப்.13:22) என்று நற்சாட்சி பெற்ற தாவீது, பாவத்தில் விழுந்தபோது பாடிய சங்கீதம் பெறுமதிமிக்கது. பாவம் உணர்த்தப்பட்டபோது, கர்த்தரைத் தவிர, வேறு எதுவும் உதவாது என்று உணர்ந்தவராய் தன்னை கழுவும்படி கதறிய தாவீது, தன் உண்மையற்ற உள்ளத்தைத் திறக்கிறார். மாத்திரமல்ல, தனது அந்தரங்கத்தின் ஆழத்தையும் திறக்கிறார். தன்னைச் சூழ்ந்த இருள், வெளிவாழ்வை மாத்திரமல்ல, உள்ளான வாழ்வையும் அந்தரங்கத்தையும் கூட இருளுக்குள் தள்ளிவிட்டதை உணர்ந்து, வெளிச்சத்தை வாஞ்சித்துக் கதறுகிறார்.

இன்று அநேக கிறிஸ்தவர்கள்கூட தங்கள் சுயத்தில் நம்பிக்கைவைத்து இடறிப்போகிறார்கள். நாம் பயப்படவேண்டிய ஒரே விஷயம் நித்திய ஆக்கினைத் தீர்ப்பு; இதிலிருந்து நம்மை மீட்க வல்லவர் தேவன் ஒருவரே. ஆனால் பலர் தங்கள் வாழ்வின் இருண்ட பாகங்களை, அவை வெளிப்பட்டு விடும் என்ற பயத்தில் தேவனுடைய வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில்லை. அதாவது இவர்கள் மாற்றமடைய விரும்புவதில்லை. தாவீதுக்கு இயேசுவையும் தெரியாது, அவரது இரத்தத்தினாலான மீட்பும் தெரியாது. என்றாலும் அவர் தேவசந்நிதானத்தில் முகங்குப்புற விழுந்தார்; விளைவுகளைச் சந்தித்தாலும் விடுதலையானார். இன்று நமது காரியம் என்ன? நாம் கிறிஸ்தவர்களாக இருக்கலாம்; அந்தப் போர்வையில் இருந்துகொண்டு இன்னமும் நமக்குள் பயத்தின் காரணமாக இருளின் காரியங்களை மறைத்து வைத்திருக்கலாம். ஆண்டவர் பாதம் வருவோம். அவர் நம்மை விட்டுக்கொடுக்க மாட்டார். நம்மை நிச்சயம் விடுதலையாக்குவார். நாம் ஒளியின் பிள்ளைகளாக தேவகிருபையால் மாற்றமடையும்போது, நம்மில் பிரகாசிக்கின்ற அந்த வெளிச்சம், இருளுக்குள் தவிக்கும் பிள்ளைகளை நிச்சயம் வெளிச்சத்திற்குள் கொண்டுவர தேவன் நம்மை உபயோகிப்பார். ஆனால் நான் ஒளியின் பிள்ளையா என்பதே கேள்வி.

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, இருளில் இருந்த எங்களை மீட்டு உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழ எங்களுக்கு கிருபை செய்தபடியால் உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.