நன்மையான பரிசு!

தியானம்: 2025 டிசம்பர் 30 செவ்வாய் | வேதவாசிப்பு: ரோமர் 8:28-31; யாக்கோபு 1:16-19

YouTube video

“நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது (யாக்.1:17). (பிரசங்கி 3:17)

நமது தேவன் நன்மைகளின் தேவன். “அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.” அவர் ஜோதிகளின் பிதா; அந்த ஒளியில் நன்மையைத் தவிர எந்தவொரு இருளின் தீமைகளும் கிடையாது. வரவிருக்கும் புதிய ஆண்டிலும் கர்த்தர் நமக்காக வைத்திருக்கிற நன்மைகளை நினைந்து, ஒளியின் பிள்ளைகளாக, அந்தகாரத்தை நோக்கி உருளுகின்ற இந்த உலகில் நன்மையின் வெளிச்சத்தைப் பிரகாசிப்போமாக.

“தமக்குப் பயந்திருக்கிறவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது” (சங்.31:19). தேவன் நமக்காக வைத்திருக்கிற நன்மைகளின் தொகைகளை கணக்கிட முடியாது. “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை; அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (1கொரி.2:9). ஆனால் கிறிஸ்துவை நம்புகிற நமக்கோ அவருடைய மரணம், உயிர்த் தெழுதல், இரட்சிப்பு ஆகிய இரகசியங்களை தேவஆவியானவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நன்மைக்கு ஈடேது!

“அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறீர்களே” (ரோம.8:28) என்கிறார் பவுல். இந்த நன்மை எது? அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு! (ரோம.8:29). யாக்கோபு 1:17ல் குறிப்பிடுகின்ற நன்மை எது? “நம்மைச் சத்திய வசனத்தினால் ஜெனிப்பித்தார்.” கிறிஸ்துவுக்குள் நமக்கு புதிய வாழ்வை தேவன் கட்டளையிட்டிருக்கிறார். இந்த நன்மைகள் மாறாதது, நித்தியமானது. இப்படி யிருக்க, நமக்கு நன்மை என்று நாம் நினைக்கிறவைகள், உதாரணத்துக்கு வியாதியில் சுகம் போன்றவற்றை கர்த்தர் நமக்குப் பரிசுகளாகக் கொடுத்திருக்கிறார் என்று ஆண்டவரைத் துதிக்கிறோம், நல்லது. இப்போது கேள்வி இதுதான். தேவன் நன்மைகளின் தேவன், அவரிடத்தில் தீமை இல்லை. ஆனால், நமக்கு நன்மையல்ல என்று நமக்குக் காணப்படுகிறவைகள், உதாரணத்துக்கு வியாதி, தோல்வி போன்ற காரியங்களுக்கு நாம் முகங்கொடுக்கும் போது, இவையும் தேவனால் நமக்கு அருளப்பட்ட நன்மையான பரிசுகள், இவற்றிலும் கர்த்தர் நன்மை வைத்திருக்கிறார் என்று, அவற்றிலும் கர்த்தர் வைத்திருக்கிற நன்மையைக் கண்டறிந்து நம்மால் கர்த்தரைத் துதிக்க முடியுமா? சாட்சி பகரமுடியுமா? நன்றி செலுத்த முடியுமா? முடியுமானால், ஜோதிகளின் பிதாவின் நன்மைக்கு உரிமையுள்ளவர்களாக நீங்கள் இருப்பீர்கள்!

ஜெபம்: “கர்த்தாவே நீர் நல்லவரும் நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உம்மிடத்தில் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. உமக்கே எல்லா கனத்தையும் மகிமையையும் செலுத்துகிறோம். ஆமென்.”