சாபமும் ஆசீர்வாதமாகும்!

தியானம்: 2026  பிப்ரவரி 11 புதன் | வேத வாசிப்பு: எண்ணாகமம் 22:1-35

YouTube video

அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: … அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார் (எண்ணா.22:12).

அயல்வீட்டுக்காரர் இருவர் சண்டை போட்டுக்கொண்டனர். அதன் பின்னர் ஒருவரோடொருவர் பேசாதிருந்தனர். ஒருவர் ஒவ்வொரு நாள் காலையிலும் மற்றவரின் வீட்டைப் பார்த்து, “ஆண்டவரே, இவர் என்னோடு பேசாதிருந்தாலும், நீர் அவரை ஆசீர்வதியும், காத்துக்கொள்ளும், மீட்டுக்கொள்ளும்” என்றெல்லாம் ஜெபிப்பாராம். ஆனால் மற்ற நபரோ, தினமும் இவர் தனது வீட்டைப்பார்த்து இவர் ஏதோ சொல்லுகிறாரே, அவர் சபிக்கிறார்போலும் என்று எண்ணியவராக அவர் சொல்வது அவருக்கே போகட்டும் என்று சொல்லுவாராம்.

இங்கே தேவனுடைய ஜனங்களைச் சபிப்பதற்காக பிலேயாம் அழைக்கப்படுகிறான். தேவன் அவனைத் தடுத்து, அவர்களோடே போக வேண்டாம் என்கிறார். மீண்டும் பிலேயாம் தேவனிடம் கேட்டபோது, “போ, ஆனால் நான் சொல்வதைத்தான் செய்யவேண்டும்” என்றார். தேவனுக்கு எதிரான ஒரு காரியத்தைச் செய்வதற்காகவே பிலேயாம் புறப்பட்டுப் போகிறான். அதனால் வழியிலே அவனுக்குப் பிரச்சனைகள் பல வந்தன. அவனால் அதைக் கூட உணர்ந்துகொள்ள முடியவில்லை. அவன் பயணித்த கழுதை அதை உணர்ந்துகொண்டது. கழுதை முரண்டு பிடித்தபோது, பிலேயாம் கழுதையை அடிக்கிறான். கர்த்தர் கழுதையின் வாயைத் திறக்கச்செய்து, கழுதை மூலமாகப் பிலேயாமுக்கு எதிராக நின்ற தூதனைக்குறித்து உணர்த்தினார். நாமும் தேவனுடைய வார்த்தைக்கு எதிராகச் செயற்படும்போது, பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். தேவன் வேண்டாம் என்று சொன்ன காரியங்களை மீண்டும் அவரிடம் கேட்கும்போது சிலவேளைகளில் அவர் அனுமதித்தும் விடலாம். அதனால் பெரிய பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

எத்தனை முறை பாலாக், பிலேயாமைக்கொண்டு இஸ்ரவேலரைச் சபிக்கும்படிக்குச் சொன்னாலும், அத்தனை முறையும் பிலேயாம் சொன்ன வார்த்தைகள் ஆசீர்வாதமான வார்த்தைகளாகவே மாறின. பாலாக் எடுத்த எந்தவொரு முயற்சியும் சரிப்பட்டு வரவில்லை. தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராகச் சொல்லப்படும் எந்த வார்த்தையும் ஒருபோதும் பலிக்காது, அவைகள் ஆசீர்வாதமாகவே மாறும். பிரியமானவர்களே, நீங்கள் மற்றவர்களின் சாபத்துக்குப் பயப்படுகிறீர்களா? அல்லது, உன்னை தொடுவோன் என் கண்மணியைத் தொடுகிறான், என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை நினைக்கிறீர்களா? சாபத்தையும் ஆசீர்வாதமாக மாற்ற வல்லமையுள்ள ஆண்டவரை நாம் விசுவாசிக்கிறோம். துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தருடைய சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார் (நீதி. 3:33).

ஜெபம்: கர்த்தாவே, எங்கள் சத்துருக்களை நாங்கள் சிநேகிக்கவும், எங்களைச் சபிக்கிறவர்களுக்காகவும் துன்பப்படுத்துபவர்களுக்காகவும் ஜெபிக்கிறவர்களாக நாங்கள் காணப்படவும் எங்களுக்குக் கிருபை தாரும். ஆமென்.