கீழ்ப்படியாமையின் பயம்
தியானம்: 2026 மார்ச் 16 திங்கள் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 3:1-24

நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான் (ஆதி. 3:10).
பிள்ளைகளை வீட்டிலே இருக்கும்படிக்கு பணித்துவிட்டு, தாய் வெளியில் சென்றுவந்தாள். வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, பிள்ளைகளைக் காணவில்லை. கூப்பிட்டாள், தேடினாள். பிள்ளைகள் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருந்தார்கள். காரணம் கேட்டபோது, நீங்கள் எடுக்கவேண்டாம் என்று சொன்ன இனிப்புப் பாட்டிலை நாங்கள் எடுத்து உடைத்துப் போட்டோம். பயத்தினாலே ஒளித்துக்கொண்டிருக்கிறோம் என்றனர். இதைப்போலதான் அன்று ஆதாமும் தேவனுக்குப் பதிலளித்தான். புசிக்கவேண்டாம் என்று சொன்ன பழத்தைப் புசித்துவிட்டு, இப்போது நான் நிர்வாணியென்று கண்டதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன் என்கிறான். தேவன் சொன்னதற்குக் கீழ்ப்படியாததினால் வந்த பயம். நான் தவறுசெய்து விட்டேன் என்ற உணர்வினால் வந்த பயம். தேவன் இனி என்ன செய்வாரோ, என்ன தண்டனை கிடைக்குமோ என்ற பயம்.
இப்படியான பயம் நம்மைத் தீமையினின்று விலக வைக்கும். மீண்டும் பாவம் செய்யவொட்டாமல் பாதுகாக்கும். ஆனால், இன்று இப்படிப்பட்ட பயமோ, உணர்வோ இல்லாமல், பாவம் செய்துவிட்டு எதுவும் தெரியாதவர்கள்போல வாழுகிறவர்கள் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? பாவம் செய்து விட்டோமே என்ற உணர்வுகூட இல்லாவிடில் அவர்கள் மனந்திரும்புவது எப்படி? இங்கே ஆதாம் தான் தவறு செய்ததை உணர்ந்தான். என்றாலும், அதற்கு நீர் தந்த துணைதான் காரணம் என்று குற்றஞ்சாட்டினான். தானும் சேர்ந்துதான் பாவத்தில் விழுந்ததை ஏற்றுக்கொள்ள மறுத்தான். அதேபோல ஏவாளும் சர்ப்பத்தைச் சாட்டினாள். தேவன் நீதியுள்ள நியாயாதிபதியாய் மூவருக்குமே தண்டனையைக் கொடுத்து ஏதேனிலே இருந்து துரத்திவிட்டார்.
ஆதாமில் தோன்றிய இந்தக் குணம் அதாவது, மற்றவரைக் குற்றஞ்சாட்டும் காரியம் இன்றும் நமக்குள் தொடர்கிறது. தாங்கள் செய்யும் தவறை ஒத்துக்கொள்ள மனதில்லாமல், பிறரில் பழிபோட்டு தங்களை நியாயப்படுத்தும் காரியம் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பிரியமானவர்களே, நாம் தவறு செய்யும்போது, அதை ஒத்துக்கொண்டு, மனந்திரும்புவோம். தேவன் நம்மை மன்னித்து மறுபடியும் புதியதொரு ஆரம்பத்தைத் தர வல்லவராயிருக்கிறார். அவரது கிருபையை நாம் உதாசீனம் செய்து நமக்கு நாமே அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமே. “அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார் இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்” (அப்.17:30) ஆகவே, தேவ மன்னிப்பை நாடுவோமாக.
ஜெபம்: “மன்னிக்கிறதற்கு தயை பெருத்த ஆண்டவரே, தவறுகள் செய்யும்போது அது பாவம் என்று உணரும் மனதையும், குற்றத்தை ஒப்புக்கொண்டு மனந்திரும்புவதற்கும் உமது கிருபைகளைத் தந்தருளும். ஆமென்.”