பயந்து இருதயம் சோர்ந்தார்கள்!
தியானம்: 2026 மார்ச் 17 செவ்வாய் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 42:1-38

… அவர்களுடைய இருதயம் சோர்ந்து போய், அவர்கள் பயந்து, … தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள் (ஆதி. 42:28).
நாம் தவறு செய்யும்போது எவ்வித பயமும் இல்லாமல், கூச்சமும் இல்லாமல் செய்துவிடுவோம். ஆனால், தவறு செய்யாதவிடத்து, யாரும் நம்மேல் குற்றம் சொல்லிவிடுவார்களோ என்று மிகுந்த ஜாக்கிரதையாய் இருப்போம். அப்படியே நடந்துவிட்டாலும் பெரிய கூச்சல் போட்டு நாம் நிரபராதிகள் என்பதை அம்பலப்படுத்தாமல் ஓய மாட்டோம். இங்கேயும் அப்படி ஒரு காரியம்தான் நடக்கிறது. யோசேப்பின் சகோதரர், யோசேப்புக்கு எதிராக எத்தனையோ காரியங்களைச் செய்தார்கள். அவனைக் குழியிலே போட்டார்கள், அந்நிய வியாபாரிகளுக்கு விற்றுப்போட்டார்கள். ஆட்டையடித்து அதன் இரத்தத்தில் அவனது பலவர்ண ஆடையை தோய்த்து, யோசேப்பை ஏதோ கொடிய மிருகம் பீறிப்போட்டது என்று தகப்பனை நம்ப வைத்தார்கள். இப்படியே அடுக்கடுக்காக எத்தனையோ தவறுகளைச் செய்து, செய்த தவறை மறைக்க மீண்டும் தவறு செய்து, இப்படியே செய்யும்போது, அவர்கள் பயப்படவே இல்லை.
ஆனால், இங்கே யோசேப்புக்கு முன்பாக நிற்கின்ற சகோதரர்கள், அவனைக் கண்டும், அவனுக்கு முன்பாக நின்றும், அவன் தாங்கள் விற்றுப் போட்ட சகோதரன்தான் என்பதை அடையாளங்காண முடியாதவர்களாக திகைத்து நிற்கிறார்கள். ஆனால், யோசேப்போ தனது சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டான். யோசேப்பு தான் அதிகாரிகளைக் கொண்டு, தானியத்தையும் கொடுத்து அவர்களது பணத்தையும் சாக்கிலே போடும்படிக்குக் கட்டளையிடுகிறான். இப்பொழுது பணத்தைக் கண்டதும் பயப்படுகிறார்கள். துன்பம் வரும்போதுதான் முன்னர் தாங்கள் செய்த அநியாயத்தை நினைத்து இப்பொழுது பயப்படுகிறார்கள். தேவன் ஏன் நமக்கு இப்படிச் செய்தார் என்று தேவனையும் நொந்து கொள்ளுகிறார்கள்.
தவறு செய்யும்போது கூசாமல் செய்தவர்கள், இப்போது அந்தத் தவறுக்குத் தண்டனை வந்துவிட்டதோ என்று எண்ணிப் பயப்படுவதுண்டு. யோசேப்பின் சகோதரர்கள் பயந்தார்கள். நமது நிலையும் இப்படித்தான் இருக்கிறதா? பாவம் செய்யும் போது துணிகரமாய்ச் செய்துவிட்டு, பாவத்துக்குத் தண்டனை கிடைக்கும் என்று பயப்படுகிறோமா? வேண்டாம் பிரியமானவர்களே, பாவத்தை வெறுப்போம். பாவம் செய்வதற்குப் பயப்படுவோம். நமது பாவங்களின் தண்டனையைத் தம்மீது ஏற்றுக்கொண்ட ஆண்டவரின் மன்னிப்புக்குப் பயப்படுவோம். மொத்தத்தில் தேவனுக்குப் பயப்படுவோம். பாவத்தை வெறுத்துத் தள்ளுவோம். சுத்த இருதயத்துடன் தேவனைக் கிட்டிச் சேருவோமாக. அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார் (சங்.103:10).
ஜெபம்: “அன்பின் தகப்பனே, பாவத்தின் சம்பளம் மரணம் என்ற வசனத்திற்கு நடுங்கி, பாவத்தை வெறுத்து தள்ள எங்களை உணர்வுள்ளவர்களாக்கும். ஆமென்”.