மகிழ்ச்சி தரும் வேதம்!
தியானம்: 2026 மார்ச் 26 வியாழன் | வேத வாசிப்பு: சங்கீதம் 119:89-96

உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன் (சங்.119:92).
இன்று மக்கள் மகிழ்ச்சியைத் தேடி எங்கெங்கோ ஓடுகிறார்கள். “வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்பார்கள். துக்கத்திலே அமிழ்ந்து போய் எத்தனையோ பேர் இன்று மனநோயாளியாய் இருக்கிறார்கள். நான் தேடும் மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கும் இடம் எங்கே என்று தேடி அலைகிறார்கள். ஒரு மனிதன் தனக்கு மகிழ்ச்சியில்லை என்று சொல்லி ஒரு ஆலோசகரை அணுகினான். அவர் அவனோடு பல மணி நேரம் பேசிவிட்டு இறுதியில், அவர் இப்படியாகக் கூறினார்: “ஒரு மனிதன் எல்லா மக்களையும் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறான். அநேகர் பணம் கொடுத்து அவனுடைய நிகழ்ச்சியைப் போய் பார்த்து ஒரு மணிநேரம் தங்களையே மறந்து சிரித்துவிட்டு வருகிறார்கள். நீங்களும் ஒருமுறை அந்த நிகழ்ச்சிக்குப் போய்ப்பாருங்கள். உங்களுக்கு அது ஒரு மாறுதலாய் இருக்கும்” என்றார். அப்போது அந்த மனிதன், “எல்லோரையும் சிரிக்க வைக்கும் அந்த மனிதன் நான்தான்” என்று சொன்னபோது அந்த ஆலோசகர் திகைத்துவிட்டார்.
இங்கே சங்கீதக்காரர் அருமையான ஒரு காரியத்தைக் கூறுகிறார். “உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்.” அவருக்கு வேதம் தான் மகிழ்ச்சியாய் இருந்திருக்கிறது. “அதை நான் ஒருக்காலும் மறக்கமாட்டேன் ஏனெனில், அது என்னை உயிர்ப்பித்திருக்கிறது” என்கிறார். “உம்முடைய கட்டளைகளை நான் ஆராய்கிறேன்”, “என்னை அழிக்கிறதுக்கு துன்மார்க்கர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்; நானோ உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்”, “சகலவற்றிற்கும் ஒரு எல்லையைக் கண்டேன்; உமது வசனமோ மகா விஸ்தாரம்” என்கிறார். எவ்வளவு அழகான ஒரு விளக்கம் என்று பார்த்தீர்களா! கர்த்தருடைய வசனத்திலே எவ்வளவு அடங்கியிருக்கிறது. அது தோண்டத் தோண்ட புதிது புதிதாகக் காரியங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கும். காரணம் அது கர்த்தருடைய வசனம்.
பல வருடங்களாக கிறிஸ்தவர்கள் என்று இருக்கிற நாம் இந்த வேதத்தின் ஆழத்தை ஆராய்ந்து பார்த்திருக்கிறோமா? துக்கத்திலே அது மகிழ்ச்சி தந்த அனுபவம். இதை ருசிபார்த்ததுண்டா. துக்கத்திலே அழிந்து போகாதபடிக்கு அது நம்மைப் பாதுகாத்த சந்தர்ப்பங்களைச் சிந்தித்துப் பார்ப்போம். “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன். நாள் முழுதும் அது என் தியானம்” (சங்.119:97). அதிகமான வேதனையிலும் என்ன செய்வதென்று அறியாத நேரத்திலும், தேவ வார்த்தையைத் தியானிக்கும்போது, அதற்கூடாக தேவன் நம்மோடு பேசுவார், நம்மை ஆறுதல்படுத்துவார், வழிநடத்துவார். இது சங்கீதக்காரருடைய அனுபவம் மட்டுமல்ல, நம்முடைய அனுபவமாகவும் மாறட்டும்.
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. அதுவே எங்கள் ஆறுதல். ஆமென்.