தம்முடையவர்களுக்கான ஜெபம்!
தியானம்: 2026 மார்ச் 31 செவ்வாய் | வேத வாசிப்பு: யோவான் 17:6-19

… நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே (யோவான் 17:9).
நம்முடையவர்களுக்காக எவ்வளவுதூரம் நாம் பாரப்பட்டு ஜெபிக்கிறோம்? இயேசு, தமது மரணத்துக்கான வேளை வந்துவிட்டதை உணர்ந்து, தாம் போனதும் பிதாவானவர் கொடுத்த சீஷர்கள் தவறிவிடக்கூடாது என்று பாரப்பட்டு ஜெபிக்கிறதைக் காண்கிறோம். இந்த சீஷர்கள் யார்? இயேசுவின் வார்த்தைகளை விசுவாசிக்கிறவர்கள் (வச.8). தேவனுடைய மகிமையை கிறிஸ்துவுக்குள்ளாக இந்த உலகத்திற்குப் பிரதிபலிக்கிறவர்கள் (வச.10). தாம் உலகத்தில் இருந்தவரைக்கும் தம்முடனிருந்த இவர்கள், தாம் போன பிற்பாடும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே இயேசுவின் முதலாவது வேண்டுதலாக இருந்தது (வச.11). தாம் இதுவரை அவர்களைக் காத்துக் கொண்டபோதிலும், ஒருவன் இழக்கப்பட்டுவிட்டதைக் குறித்து தமது மனவேதனையை வெளிப்படுத்தி மற்ற சீஷர்களுக்காக மன்றாடுகிறார் இயேசு (வச.12). சந்தோஷத்தின் ஊற்றாகிய இயேசுவுடன் முழுமையான உறவைக் கொண்டிருக்கிறவன் எந்த நிலையிலும் தன் சந்தோஷத்தை இழந்து விடமாட்டான். அவன் தேவனுடைய பாதுகாப்பு கரிசனை அவருக்குள்ளான வெற்றி யாவையும் பெற்றுக்கொள்கிறான். அந்த சந்தோஷத்தைத் தம்முடையவர்கள் பெற்றுக்கொள்ள இயேசு ஜெபிக்கிறார் (வச.13). தம்மைப்போல தம்முடையவர்களும் உலகத்தார் அல்ல என்பதால், உலகம் அவர்களை பகைத்தது என்று தம்முடையவர்களின் நிலைமையைச் சொல்லி ஜெபிக்கிறார் (வச.14). அதற்காக அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி ஜெபிக்காமல், தீமையினின்று காத்துக் கொள்ளும்படி ஜெபிக்கிறார் இயேசு (வச.15). ஏனெனில் அவர் நம்மை இந்த உலகத்துக்குள் தமது பிரதிபலிப்புகளாக அனுப்பியிருக்கிறார். ஆகவே, உலகத்தோடு ஒத்து ஓடாமல், வேறு பிரிக்கப்பட்டவர்களாய் அனுப்புகிறவருக்கு சாட்சியாய் வாழவே அவர் தமது சீஷர்களை அழைத்தார். அந்த அழைப்பிலிருந்து அவர்கள் விழுந்து விடாதபடி இயேசு இந்த உலகில் இருந்தபோதே ஜெபித்தார் (வச.15). இதற்குத் தேவையான சத்திய வசனத்திலே நிலைத்து நிற்கவேண்டுமென்று இயேசு பாரத்துடன் தம்முடையவர்களுக்காக ஜெபித்தார் (வச.17).
இன்றும் அவர் நமக்காக ஜெபிக்கிறார். நாமும் நமது ஆண்டவரின் சீஷர்கள்தான், சீஷர்களாகத் தம்மைப் பின்பற்றி வரும்படிக்கே அவர் நம்மை இரட்சித்திருக்கிறார். உலக போராட்டத்திலும் இயேசுவுக்குள் ஜெயம் பெற்று அநேகரை அவரிடம் கொண்டு வருவதற்குரிய பெலத்தை நமக்கு அருளும்படி இயேசு ஏற்கனவே ஜெபித்துவிட்டார். ஆகவே, அவர் எதற்காக அன்று தமது சீஷர்களை உலகிற்குள் அனுப்பினாரோ, இன்று நம்மை அனுப்பியிருக்கிறாரோ, அதை நிறைவேற்ற தைரியத்தோடு அவர் கரத்தில் நம்மைத் தருவோமாக.
ஜெபம்: ஆண்டவரே, இவ்வுலக போராட்டத்தில் நாங்கள் ஜெயம் பெற்று, மற்றவர்களை யும் உம்வழி நடத்திட பிதாவினிடத்தில் நீர் வேண்டிக்கொண்டபடியே .அந்தப் பணியை நிறைவேற்ற எங்களைத் தருகிறோம். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.