மீண்டும்…
தியானம்: 2026 ஏப்ரல் 12 ஞாயிறு | வேத வாசிப்பு: யோவான்; 21:1-14

அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை (யோவான் 21:3).
கர்த்தர் நம்மை சந்தித்த, நமக்குச் செய்த பெரிய காரியங்களை மறந்து பின்வாங்கும்போது, அவர் இன்னுமொரு தருணத்தைத் தருவதுமன்றி, அதேவிதமான சம்பவங்களுக்கூடாக நம்மை உணர்த்துவதுமுண்டு. இவ்வாறான அனுபவம் நமக்குண்டா?
கெனேசரேத்து கடலும், திபேரியா கடலும், கலிலேயா கடலின் இருவேறு இடங்கள். இயேசு இக்கடற்கரையில் நின்றபோதுதான், அவர்களுக்கு மீன்கள் அகப்படாதிருந்தும், இயேசு சொன்னபடி வலையை ஆழத்தில் போட்டபோது வலை கிழியத்தக்க மீன்கள் அகப்பட்டதும், பேதுரு இயேசுவின் பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவியான மனுஷன்” என்று அறிக்கையிட்டதும், இயேசுவின் அழைப்புக்கிணங்கி பேதுருவும் கூட இருந்தவர்களும் இயேசுவைப் பின்பற்றிச் சென்றதுமான சம்பவங்கள் நிகழ்ந்தன. இங்கேயும் அதே பேதுருதான் நம்பிக்கை இழந்தவனாக, தன்னுடன் இன்னும் ஆறு சீஷர்களையும் சேர்த்துக்கொண்டு தன் பழைய தொழிலுக்குச் செல்லுகிறான். அதே கலிலேயாக் கடல்; மீன்களும் அகப்படவில்லை. இயேசு அந்தக் கடற்கரையிலே நிற்கிறார். அவர்கள் அவரை அறியவில்லை. அவர்களிடம் ஒன்றும் இல்லை என்பது இயேசுவுக்குத் தெரிந்தும், புசிப்பதற்கு ஏதேனும் உண்டோ என்று கேட்கிறார். அவர்களும் இல்லை என்று சொல்ல, வலதுபுறமாக வலையைப் போட சொல்லி இயேசு சொல்ல, அவர்களும் போட, திரளான மீன்களும் அகப்பட்டது. அப்போது இயேசுவுக்கு அன்பான சீஷனின் கண்கள் திறக்கின்றன. “அவர் கர்த்தர்” என்கிறான் யோவான். பேதுருவும், தன்னிலை உணர்ந்தவனாய் இயேசுவுக்கு முகங்கொடுக்க முடியாமல் கடலிலே குதிக்கிறான்.
லூக்கா 5ம் அதிகாரத்தின் சம்பவித்த அதே சம்பவம் இங்கேயும் சம்பவிக்கிறது. அதே கடல். முன்னர் இயேசுவை அறிந்திராத பேதுருவும் மற்றவர்களும் இருந்தனர்; இங்கே உயிர்த்த இயேசுவை அறியமுடியாதபடி கண்கள் மறைக்கப்பட்ட சீஷர்கள். கர்த்தர் அதேவித சம்பவத்தினூடாக அவர்கள் கண்களைத் திறந்தார். அங்கேயும் பேதுரு; இங்கேயும் பேதுரு. அன்று பேதுரு இயேசுவின் அழைப்பைக் கேட்டு பின் சென்றான். இங்கே, மறுதலித்த பேதுருவாய் தடுமாறிவிட்டான். ஆனால் இயேசு, பின்வாங்கிய அவர்களை நேசித்து, மீண்டும் அழைக்க வந்திருந்தார். இன்று நம்மில் யாராவது வாழ்வின் அழுத்தங்களால் சோர்வடைந்து பின்னடைவாகி இருக்கிறோமா? கர்த்தர் உங்கள் அருகில் நிற்கிறார். முதன் முதலில் அவர் உங்களை அழைத்து இரட்சித்த தருணங்களை சற்று திரும்பிப் பாருங்கள். இன்றும் கர்த்தர் உங்களைத்தான் அழைக்கிறார். என்ன பதில் சொல்வோம்?
ஜெபம்: எங்கள் நம்பிக்கையானவரே, வாழ்வின் தோல்விகளினாலே நாங்கள் பின்மாற்றத்திற்குள் போய்விடாதபடி காத்தருளும். பின்மாற்றத்திலிருந்து திரும்பிவருவோரை ஏற்று வழிநடத்தும். ஆமென்.