வெண் இறுதிச்சடங்கு!
தியானம்: 2026 ஏப்ரல் 14 செவ்வாய் | வேத வாசிப்பு: ரோமர் 6:3-6

நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, …. (ரோமர் 6; 4).
“வெண் இறுதிச்சடங்கு” (white funeral) இதைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோமா? ஒருவன் தனது பழைய வாழ்வை அடக்கம் செய்துவிடுவதே இப்படி அழைக்கப்படுகிறதாம். “இத்தகைய மரணத்திற்கு இயேசுவுக்குள்ளான ஒரே உயிர்த்தெழுதல்தான் உண்டு. இப்படிப்பட்ட மரண அனுபவத்தினுள்ளாகக் கடக்காத எவனுக்கும் பரிசுத்தமாக்கப்படுதல் என்பது வெறும் போலியாகவே இருக்கும்.” இவ்விதமாக ஒரு பக்தன் எழுதியுள்ளார். பழைய வாழ்வுக்கு நாம் மரித்தது மெய்யானால், கிறிஸ்துவுடனேகூட பிழைத்திருக்கிறோம் என்பதுவும் சத்தியமே.
பழைய மனுஷன் செத்து, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் சாயலில் இணைக்கப்பட்டவர்களாய் நாம் எழுந்தது மெய்யானால், இன்று ஒரு புதிய வாழ்வுக்குள் நாம் வந்திருக்கிறோம் என்பது சத்தியம். அப்படியானால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையின் சாயல் நம்மில் வெளிப்படவேண்டுமே! பாவத்தின் வல்லமையும் அதற்கான தண்டனையும் சிலுவையிலே கிறிஸ்துவுடனேகூட செத்துப்போய்விட்டது; நமது பழைய பாவ மனுஷனும் சிலுவையிலே செத்துப்போனானே! இதனை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவுக்குள் எழுப்பப்பட்டவர்களாய் வாழுகின்ற நம்மை, கிறிஸ்துவின் நீதி தேவனுக்கு முன்பாக நம்மைக் குற்றமற்றவர்களாக நிறுத்தியிருக்கிறது. இப்படியிருக்கும்போது, நாம் இன்னும் பாவத்தின் ஆளுகைக்குள் வாழ வேண்டியதில்லை. என்றாலும் இந்த விழுந்துபோன உலகில் நாம் இன்னமும் வாழுவதினால், பாவம் செய்ய சோதிக்கப்படுகிறோம்; சில சமயங்களில் பாவம் செய்கிறோம். ஆனால், வித்தியாசம் என்னவென்றால், முன்னர் நாம் நமது பாவ சுபாவத்திற்கு அடிமைகளாக இருந்தோம்; இப்போது கிறிஸ்துவுக்குள் வாழுவதை நமது தெரிவாகக் கொண்டுள்ளோம். இதைத்தான் பவுல், “இனி நான் அல்ல; கிறிஸ்துவே எனக்குள் வாழுகிறார்” என்கிறார்.
நமக்கான “வெண் இறுதிச்சடங்கு” முடிந்துவிட்டதா? அப்படியானால் இன்னமும் பாவத்தின் பயமுறுத்தலுக்குப் பயந்து இணங்குவது எப்படி? “சரீர மரணம் தேவனை பொறுத்தது; ஆனால், என் ஆத்துமாவின் மரணம் என்னைப் பொறுத்தது” என்று ஒருவர் கூறியது சிந்திக்க வேண்டிய உண்மை. இன்று பாவம் எது என்ற உணர்வுகூட இல்லாமல், பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும்… (மாற்.7:21-22) எல்லாமே இன்று கிறிஸ்துவின் பிள்ளைகள் வாழ்விலும் சர்வ சாதாரணமாகிவிட்டதைக் குறித்து நாம் எச்சரிப்படைவோமாக. பழைய மனிதன் கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, அவருடனேகூட உயிர்த்தெழுந்தது மெய்யானால், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு நாம் சாட்சியாக வாழவேண்டாமா?
ஜெபம்: அன்பின் ஆவியானவரே, பாவசோதனைகள் எங்களைத் தாக்க வரும்போதே அவற்றை உதறித்தள்ள பெலன் தாரும். ஆமென்.