பயந்து ஓடியவனே பயன்பட்டான்
தியானம்: 2026 ஏப்ரல் 18 சனி | வேத வாசிப்பு: யாத்திராகமம் 2:1-15

அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான் (யாத்திராகமம் 2:14).
நமது வாழ்க்கைப் பாதையில், இந்த சூழ்நிலையில், அல்லது இந்த மனிதர்கள் மத்தியில், அல்லது இந்த ஐக்கியத்தில் ஒன்றுமே செய்ய என்னால் முடியாது என்று நாம் நினைக்கலாம். ஆனால் அதே சூழ்நிலையில், அதே மனிதர்கள் மத்தியில், அதே ஐக்கியத்தில் நம்மைக்கொண்டு ஆண்டவர் பலத்த காரியங்களைச் செய்ய வல்லவராய் இருக்கிறார் என்பதே இன்றைய தியானத்தின் முக்கிய செய்தியாகும்.
மோசே குழந்தையாய் இருந்தபோதே, தேவன் அவரைத் தெரிந்து கொண்டார். சகல ஆண் பிள்ளைகளும் கொல்லப்பட்ட அப்பயங்கரமான சூழ்நிலையிலும், மோசேயை ஆண்டவர் காப்பாற்றி, எந்தப் பார்வோன் மோசேயைக் கொல்ல நினைத்தானோ, அதே பார்வோனின் அரண்மனையிலேயே மோசே வளரும்படிக்குச் செய்தார். இஸ்ரவேலர் அடைந்த கொடுமைகளையெல்லாம் மோசே காண்கிறார். எகிப்தியன் ஒருவன் எபிரெயனை அடிக்கிறதைக் கண்ட மோசே, அந்த எகிப்தியனைக் கொன்றுபோட்டார். இதை யாரும் காணவில்லை என்று எண்ணினார். மறுநாளிலே இரண்டு எபிரெயர் சண்டைபோடுவதைக் கண்ட மோசே அவர்களை விலக்கச் சென்றபோது, அவனது சொந்த இனமே அவனை எதிர்த்து, “எங்களையும் கொன்றுபோடப் பார்க்கிறாயோ” என்றதும், மோசே பயந்தார். தனது காரியம் வெளிப்பட்டது என்று அறிந்து பயந்து அங்கிருந்து ஓடுகிறார். அதே மோசேயைத்தான் தேவன், அதே இஸ்ரவேலரைப் பார்வோன் கையிலிருந்து மீட்கும்படிக்கு அனுப்பி வைத்தார். தன்னை எதிர்த்துப் பேசியவர்கள், எப்படித் தன்னை நம்பி தன்னோடு புறப்பட்டு வரப்போகிறார்கள் என்பது அவருக்குள் ஒரு பெரிய கேள்வியாக இருந்திருக்கலாம். அவர் பல சாக்குப்போக்குகளைச் சொல்லித் தப்ப முயன்றார். ஆனால் தேவனோ, தமது அநாதி திட்டத்தை நிறைவேற்றும்படி மோசேயைத் தயார்படுத்தியவர் விட்டுவிடுவாரா. அதே மோசேயைக்கொண்டே அதே எகிப்திலே அத்தனை காரியங்களையும் வெற்றியாகச் செய்து முடித்தார்.
ஆரம்பத்தில் மோசே அதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், தனது கையில் தேவன் கொடுத்த பொறுப்பை கடைசிவரைக்கும் செய்து முடித்தார். எத்தனையோ எதிர்ப்பு, முறுமுறுப்பு, எத்தனையோ கல்லெறிகள், சொல்லெறிகள் அத்தனையையும் சாந்தமாய் ஏற்றுக்கொண்டார் மோசே. தேவனின் திட்டம் தன்னில் நிறைவேற தன்னை விட்டுக்கொடுத்தார். “மோசேயானவன் பூமியி லுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்” (எண்.12:3). இந்த தேவன் நம்மைக் கொண்டும், நாம் பயப்படுகிற அதே சூழ்நிலையில் பெரிய காரியம் செய்ய வல்லவர்.
ஜெபம்: கர்த்தாவே, மோசேயோடு இருந்ததுபோல நீர் எங்களோடும்கூட இருந்து உமது திட்டத்தில் எங்களை பயன்படுத்தும்படி அர்ப்பணித்து ஜெபிக்கிறோம். ஆமென்.