தேவையான தராதரம்
தியானம்: 2026 ஏப்ரல் 20 திங்கள் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 18:13-27

தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு …. (யாத்திராகமம் 18:21).
இன்று உலகம் எதிர்பார்க்கின்ற தராதரம் என்ன? பணம் படைத்தவன், படித்தவன், அனுபவம் வாய்ந்தவன், பல பட்டங்களைப் பெற்ற பட்டதாரி, கெட்டிக்காரன் இப்படியான தராதரங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இங்கே ஜனங்களை விசாரிப்பதற்கு தனித்தவனாக மோசேயால் கூடாமற் போகிறது என்று மோசேயின் மாமனாகிய எத்திரோ கண்டு, மோசேக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறார். அந்த ஆலோசனையின்படி மோசே சக மனிதரை இந்தப் பணிக்காகத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம் பேருக்கு அதிபதியாகவும், நூறு பேருக்கு அதிபதியாகவும், ஐம்பது பேருக்கு அதிபதியாகவும், பத்துப்பேருக்கு அதிபதியாகவும் நியமித்தார். இவர்களைத் தெரிவு செய்தபோது என்ன தராதரம் பார்க்கப்பட்டது என்றால், அவர்கள் தேவனுக்குப் பயந்தவர்களாக முதலாவது இருக்கவேண்டும். அடுத்தது, உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். பொருளாசையை வெறுக்கிறவர்களாய் இருக்கவேண்டும். இதுதான் தேவனுடைய பார்வையில் உகந்த தராதரமாய் இருக்கிறது.
இன்று நாம் தேவனுடைய பணியைச் செய்கிறவர்களாக இருக்கலாம்; நாம் பிறரால் தெரிவுசெய்யப்பட்டவர்களாகவும் இருக்கலாம். இருந்தாலும், இந்த தராதரங்கள் நமக்குள் உண்டா என்பதை ஆராய்ந்து பார்ப்போம். அப்பொழுது நாம் தேவனுக்குப் பிரியமானவர்களாய் எப்போதும் நடந்துகொள்ளலாம். தேவபயமுள்ளவன் எப்போதும் எந்த இடத்திலும், என்ன செய்துகொண்டு இருந்தாலும், “தேவன் என்னைக் காண்கிறார்” என்ற உள்ளுணர்வோடு இருப்பதால் தவறு செய்யத் துணிய மாட்டான். எனவே, அவன் எப்போதும் உண்மையுள்ளவனாகவே இருப்பான்.
பொருளாசை இருந்தால் நமக்குள் போதுமென்ற மனம் இருக்காது. எப்போதும் எல்லாவற்றிற்கும் ஆசைப்படுகிறவர்களாகவே இருப்போம். இந்த ஆசை மிகுதியால் தவறு செய்யத் தூண்டப்படுவோம். எனவே பொருளாசையை வெறுக்கிறவனே உண்மைத்துவமாய் பணிசெய்ய முடியும். எல்லாவற்றிற்கும் பணத்தை எதிர்பார்த்து லஞ்சம் வாங்குபவர்கள் இன்று ஏராளம்; இவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள். தங்களுக்குக் கிடைக்கும் பணம் போதுமென்கிற திருப்தி அவர்களுக்குள் இல்லை. அதிகமாகச் சம்பாதித்து சொகுசு காணவே மனம் நாடுகிறது. “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்” (எபி.13:5). ஆகையால், நாம் தேவனுடைய பிள்ளைகளாய் பணஆசைக்கு நம்மை விலக்கிக் காத்துக் கொள்ளுவோம்.
ஜெபம்: எங்கள் பரமபிதாவே, உமக்கு பயந்து உண்மையாயும் பொருளாசை இல்லாதவர்களாயும் வாழ்ந்து உமது பணியில் ஈடுபட உமதாவியினால் எங்களை நிரப்பும். ஆமென்.