அந்நிய தேவர்களுக்குப் பயந்து…

தியானம்: 2026 ஏப்ரல் 22 புதன் | வேத வாசிப்பு: 2இராஜாக்கள் 17: 1-20

YouTube video

… கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள் (2இராஜா. 17:17).

அலுவலகத்தில் இருக்கின்றபோது, திடீரென தபாலில் ஒரு கடிதம் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்தால், அதிலே அந்நிய தெய்வங்களின் நாமங்கள் எல்லாம் எழுதப்பட்டு, இன்னும் பல காரியங்கள் எல்லாம் இருந்தது. இறுதியில், “இதை இப்படியே ஒரு வார்த்தைகூட பிசகாமல் எழுதி எட்டுப் பேருக்கு அனுப்பு. அப்பொழுது உனக்கு மிகுந்த பலன் கிடைக்கும். நீ எதிர்பார்ப்பது நடக்கும். ஆனால், இதை நீ செய்யாமல் விட்டால், இரத்த வாந்தியெடுத்து எட்டு நாட்களுக்குள் செத்துப்போவாய்” என்று எழுதப்பட்டிருந்தது. இதேபோல என்னோடு பணியாற்றும் இன்னும் ஒரு பெண்ணுக்கும் வந்திருந்தது. அவள் கிறிஸ்துவை அறியாதவள். அவள் பயத்திலே உடனேயே எட்டுப் பேருக்கு எழுத ஆரம்பித்துவிட்டாள். நானோ அதைக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டேன். இதைப் பார்த்த அந்தப் பெண், “என்ன இப்படிச் செய்கிறீர்கள், நான் வேண்டுமானால் உங்களுக்கும் எழுதித் தரட்டுமா” என்றாள். நானோ, “ஐயோ, வேண்டாம், எனக்கு என் இயேசு போதும். நான் அவருக்கு மாத்திரமே பயப்படுவேன்” என்றேன். அந்நிய தேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று தேவன் இஸ்ரவேலருக்கு திரும்பத் திரும்பக் கூறியிருந்தார். பிற தெய்வ வழிபாடுகளை அனுஷ்டிக்க வேண்டாம்; அவர்களைப் பின்பற்றிச் சோரம்போகவேண்டாம் என்று மறுபடியும் மறுபடியும் எச்சரித்திருந்தார். ஆனால், இந்த அதிகாரம் முழுவதுமே இஸ்ரவேலர் தேவனைக் கோபமூட்டிய காரியங்களே எழுதப்பட்டுள்ளது. அந்நிய ஜாதிகளோடு சேரும்போது, அவர்களின் வழிபாடுகளைக் கண்டு, தேவனுக்குப் பயப்படுவதை விடுத்து, அந்நிய தேவர்களுக்குப் பயப்படத் தொடங்கினார்கள் இஸ்ரவேலர். அதனால் தேவனின் கட்டளையை மீறினார்கள். அவர்களை வழி நடத்திய ராஜாக்களும் இதற்கு உடந்தையாக இருந்ததையும் காண்கிறோம்.

இன்று ஆண்டவரின் பிள்ளைகள் என்று சொல்லுகிற நாமும்கூட, சில வேளைகளில் நாட்களை, காலங்களைக் கண்டு பயப்படுகிறோம். நாம் ஒரு காரியத்தைச் செய்ய எத்தனிக்கும்போது, இன்று நாள் சரியில்லை என்றவுடன் தடுமாறிப் போகிறோம். அப்படியானால் நாம் அந்த நாளை ஜெபித்துத் தொடங்கவில்லையா? இந்த நாளை கர்த்தர் படைத்தார், இது நல்லது என்று கண்டார் என்பதில் நமக்கு நம்பிக்கை இல்லையா. “என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்” (சங்.31:15) என்ற ஜெபத்தை மறந்துவிடுகிறோமா? இன்று நாம் யாருக்குப் பயப்படுகிறோம்? காலங்களையும் நேரங்களையும் சிருஷ்டித்த தேவனுக்கா? அல்லது சிருஷ்டிகளுக்கா? சிந்திப்போம்.

ஜெபம்: சர்வவல்லமையுள்ள கர்த்தாவே, நீரே எங்கள் தேவன்: உம்மையல்லாமல் எங்களை இரட்சிப்பார் யாருமில்லை. நாங்கள் கர்த்தரையே சேவிப்போம். ஆமென்.