கர்த்தருக்கு முன்பாக

தியானம்: 2026 ஏப்ரல் 23 வியாழன் | வேத வாசிப்பு: 2சாமுவேல் 6:14-23

YouTube video

கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன் (2சாமுவேல் 6:21).

தாவீதைப்போல நடனமாடி என் அப்பாவை ஸ்தோத்திரிப்பேன், என்ன வந்தாலும் ஏது நேர்ந்தாலும் என் அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்” என்று மிக அழகாக நாம் கைகளைத் தட்டி, ஏன் ஆடிக்கொண்டே பாடுவதும் உண்டு. ஆனால், தாவீது என்ன காரணத்துக்காக நடனமாடினார், அதுவும் எப்படியாக நடனமாடினார் என்று நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?

தனக்கு ராஜமேன்மை கிடைத்ததற்காகவோ, பதவியும் அந்தஸ்தும் உயர்ந்ததற்காகவோ அவர் ஆடவில்லை. அது தேவனுடைய பெட்டியை தனது நகரத்துக்குள்ளே கொண்டுவரும் சந்தோஷம்; தேவனுடைய ஆசீர்வாதம் தனக்குண்டு என்ற ஆனந்தக் களிப்பு; இவைகளே அவரை ஆட வைத்தன. அதுமாத்திரமல்ல ஒரு ராஜாவுக்கு அவரது ராஜ வஸ்திரமே மேன்மையானது. அந்த வஸ்திரத்தை அவர் கழற்றிப்போட்டு சாதாரண சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவராக தேவனுக்கு முன்பாக நடனமாடினார் என்று வாசிக்கிறோம். தேவனுக்கு முன்பாக, தனக்குண்டான மேன்மையெல்லாம் அற்பமானவை எனக் கருதினார் தாவீது. அவரது மனைவி மீகாள் அவரைப் பார்த்துச் சிரித்த போது, தேவனுக்கு முன்பாக இதைப்பார்க்கிலும் இன்னமும் நீசனும், என் பார்வைக்கு அற்பனுமாவேன்’ என்று தாவீது சொன்னதிலிருந்து அவருடைய உள்ளம் தேவன்மீது எவ்வளவாய் மகிழ்ந்திருந்தது, தாழ்ந்திருந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில், தேவனே எல்லாவற்றிற்கும் எல்லாமுமானவர் என்பதை தாவீது உணர்ந்திருந்தார்.

தேவனுடைய சமுகத்தில் இருக்கும்போது நாம் எப்படிப்பட்டவர்களாய் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறோம் என்பது முக்கியம். நமது மேன்மைகளும், பெருமைகளும்தான் நமக்குப் பெரிதாகத் தெரிகிறதா? நமக்கு மேன்மையாக இருப்பவைகளை ஆண்டவருக்காய் விட்டுக்கொடுக்க நாம் ஆயத்தமா? நமக்குரிய மேன்மைகள் எல்லாம் ஆண்டவருடைய சமுகத்தில் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்திருக்கிறோமா?

பிரியமானவர்களே, முதலாவது கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்துவோம். தேவனைக் குறித்தே நாம் மேன்மைபாராட்டுவோம். ஆகிலும்,எனக்கு லாபமாய் இருந்தவைகள் எவைகளோ அவற்றை கிறிஸ்துவுக்காய் நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் (பிலி.3:7,8) என்று பவுல் அடியார் கூறியதுபோல நம்மால் கூறமுடியுமா? ஆண்டவர் நமது உள்ளத்தை அறிந்திருக்கிறவர். ஆகவே அவருக்குப் பிரியமானபடி வாழ பிரயாசப்படுவோமாக.

ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, எனது மேன்மைகளை எல்லாம் குப்பையாக எண்ணவும், உமது நாம மேன்மைக்காய் பிரயாசப்படவும் எனக்கு உமது அருள் தாரும் ஆமென்.”