கர்த்தருடைய காரியத்தில் வாஞ்சை

தியானம்: 2026 ஏப்ரல் 24 வெள்ளி | வேத வாசிப்பு: 2சாமுவேல் 7:1-13

YouTube video

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது (சங்கீதம் 42:1).

வாஞ்சை என்பது இன்னுமொருவர் சொல்லி வருவதல்ல; தானாகவே எழும் ஒரு உணர்வு. மானுக்குத் தாகம் எடுக்கும்போது அது நீரோடையை நோக்கி வாஞ்சித்துக் கதறும்; அதைக் கண்டடையும் வரைக்கும் அது ஓயாது. அதுபோலவே, தனது ஆத்துமாவும் தேவனை நோக்கி வாஞ்சிக்கிறது என்று தேவன்மீதுள்ள தனது வாஞ்சையை அழகாக வெளிக்காட்டுகிறார்; தாவீது.

எல்லா வசதிகளும் நிறைவாக இருக்கும்போது தேவனைத் தேடுவது குறைவடைகிறது என்று பொதுவாகச் சொல்வார்கள். அப்படியானால் தாவீதின் காரியம் சற்று வித்தியாசமானது எனலாம். சகல வசதிகளோடும் வாழ்ந்த இவர் தேவனுடைய காரியத்தில் கரிசனை காட்டியது எப்படி? அவர் தேவன்மீது கொண்டிருந்த அந்த வாஞ்சைதான் காரணம். தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்ற வாஞ்சையையும் அதுவே ஏற்படுத்தியது. தான் உயர்ந்த ஒரு வீட்டிலே வாசம் பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவில் இருப்பது சரியானதா என்ற எண்ணமே தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்ற அவாவை தாவீதுக்குள் தோற்றுவித்தது.

நானும் எனது குடும்பமும் என்று சிந்தித்துக்கொண்டு, தேவனுடைய காரியங்களைக் குறித்து எவ்வித அக்கறையும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கும் நமக்கு, தாவீதின் இந்தச் சிந்தனை ஒரு சவால்தான். கர்த்தர்பேரில் நமக்கு வாஞ்சை இருந்தால் போதாது. அது கிரியையில் வெளிப்படவேண்டும். இன்றும் ஆலயங்கள் கர்த்தருக்குள்ளாகக் கட்டப்படவேண்டும். சபைகளில் ஐக்கியம் பேணப்படவேண்டும். விசுவாசிகளாகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நமது சபைகள் ஐக்கியம் குலைந்து உடைந்து போய்க் கொண்டிருக்கிறது. நாம் நமது குடும்பங்களை மாத்திரம் பாதுகாப்பாகக் கட்டிக்கொண்டு தேவனின் ஆலய காரியங்களில் சிரத்தை அற்றிருப்பது சரியானதா? தாவீதுக்கு அன்றிருந்த தாகம் இன்று நமக்கு இல்லாமல் போனதேன்? சில சமயங்களில் சபைகள் உடைந்துபோவதற்கு நாமே மூலக் காரணமாயும் அமைந்துவிடுகிறோம். நமது சபைகளைக் கர்த்தருக்காய் கட்டமுயலுவோம். நமது பங்குகளையும், பொறுப்புக்களையும் செவ்வனே செய்வோம். ஆவியானவரின் கிரியைகள் நமது சபைகளில் காணப்பட முழங்கால்களை முடக்கி தேவனை நோக்கிக் கூப்பிடுவோம். சபை கூடி வருதலை சிலர் விட்டுவிடுகிறது போல, நீங்களும் விட்டுவிடாமல் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம் என்று பவுல் எபிரெயருக்கு எழுதுகிறார் (எபி.10:25). அன்பானவர்களே, தேவனுடைய ஆலய காரியங்களில் வாஞ்சையோடு ஈடுபடுங்கள். அதுவே நமது வாஞ்சையாகட்டும். நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும் … காணுமட்டும், என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதில்லை (சங்.132:2,3).

ஜெபம்: “ஆண்டவரே, தாவீதைப்போல ஆலயத்தின்மேல் வாஞ்சைகொண்டு, ஆலயப் பணியில் உண்மையாய் ஈடுபடுவதற்கும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.”