அன்னாளின் தைரியம்!
தியானம்: 2026 ஜூலை 4 சனி | வேத வாசிப்பு: 1சாமுவேல் 1:9-18; எபி.4:13-16

நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன் (1சாமுவேல் 1:15).
அன்று ஆசரிப்புக்கூடாரம் இருந்த காலம். ஆசாரியர்கள் மாத்திரமே, அதிலும் தங்களுக்கான பலிகளைச் செலுத்திய பின்னரே இதற்குள் செல்ல முடியும். பிரதான ஆசாரியனோ, பலி இரத்தத்துடன் வருடத்துக்கு ஒரு தடவையே மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்லமுடியும். பிரதான ஆசாரியனின் மார்பகத்திலே கர்த்தரது சித்தம், பதில் என்னவென்பதை அறிந்துகொள்ளும் ஊரீம் தும்மீம் பதிக்கப்பட்டிருந்தது. மக்களுக்கும் கர்த்தருக்கும் இடையே நின்று, மக்களின் வேண்டுதலைக் கர்த்தரிடம் எடுத்துச்சென்று, கர்த்தருடைய பதிலை மக்களுக்கு அறிவிக்கின்ற பெரிய பொறுப்பை அவர் பெற்றிருப்பார். மக்கள் வருஷந்தோறும் கர்த்தரைத் தொழுதுகொள்ள ஆசரிப்புக் கூடாரத்துக்குச் செல்லுவது வழக்கம்.
அதன்படி எல்க்கானா தனது மனைவிமார் இருவரையும் கூட்டிச்செல்லுவான், பெனின்னாள் அன்னாளைத் துக்கப்படுத்த, அவள் துக்கத்தோடே திரும்புவாள். ஆனால் அந்த வருடத்தில் அன்னாள், புசித்துக் குடித்தபின்பு எழுந்தாள்; ஆசரிப்புக்கூடாரத்தண்டைக்குச் சென்றாள். பிரதான ஆசாரியனான ஏலி கூடாரத்தின் வாசலில் உட்கார்ந்திருக்கிறான். அன்றைய முறைக்கு அன்னாள் அவனிடமே தனது முறைப்பாட்டைச் சொல்லியிருக்கவேண்டும். அவளோ மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி, மனவேதனையை அறிக்கைபண்ணி, தனது இருதயத்தை ஊற்றிவிட்டாள். இது எப்படி? அவள் குடித்திருக்கிறாள் என்று நினைத்த ஏலியும் அன்னாளின் விண்ணப்பம் என்ன என்றுகூடக் கேட்காமல், சமாதானம் கூறி அனுப்புகிறார்.
இந்த அன்னாள், பிரதான ஆசாரியனையும் தாண்டி, தேவனிடம் நேரடி யாகவே விண்ணப்பம்பண்ணியது என்ன? இன்று நமக்கு மகா பிரதான ஆசாரியரான இயேசுதாமே தமது இரத்தத்தை நமக்காகச் சிந்தி, பிதாவிடம் போக தடையான திரையாகிய மாம்சத்தைக் கிழித்தெறிந்து நமக்கு வழியமைத்துத் தந்திருக்கிறார். நாம் இன்று தைரியமாய் பிதாவண்டைக்குச் செல்லும் மார்க்கத்தை அவர் நமக்கு வகுத்துத் தந்திருக்கிறார். இது இப்படியிருக்க, அன்று அன்னாளுக்கு பிதாவண்டையில் தைரியமாய் சேர்ந்து விண்ணப்பிக்கின்ற உள்ளுணர்வைக் கொடுத்தது யார்? அன்னாளின் அந்தச் செயலானது, இன்று நமக்கு அருளப்பட்டுள்ள நேரான நித்திய வழி என்ற நிஜத்திற்கு நிழலாட்டமாக இருப்பதை உணருகிறோமா! இரட்சகரும் ஒருவரே, மத்தியஸ்தரும் ஒருவரே. அவரண்டைக்குத் தைரியமாய் செல்லும் கிருபையைப் பெற்றிருக்கிற நாம் இன்று அந்த அன்னாளின் செயலுக்கு என்ன பதிலுரை கொடுக்கப்போகிறோம்? ஏன் அங்கும் இங்கும் அலையவேண்டும்? இருதயம் நொருங்குண்டு தம்மிடத்தில் திரும்புகிற எவரையும் ஒருபோதும் தள்ளாத ஆண்டவர் நமக்கு இருக்கும்போது நாம் ஏன் தடுமாறவேண்டும்?
ஜெபம்: “கர்த்தாவே, இதயம் நொறுங்குண்ட வேளையில் அன்னாளைப்போல கிருபாசனத்தண்டை வந்து உம்மை மட்டுமே நோக்கிப்பார்க்க எங்களுக்குதவும். ஆமென்.”