நமக்கு ஏன்?
தியானம்: 2026 ஜூலை 7 செவ்வாய் | வேத வாசிப்பு: 2கொரிந்தியர்; 1:4-5

எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, … அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர் (2கொரி.1:4).
“கர்த்தாவே, இந்த சோதனைக்காக, வியாதிக்காக, தோல்விக்காக உமக்கு நன்றி” என்று நாம் சொல்லுவோமா? முடியாது. ஆனால் இவை தாங்கொண்ணாத பாரமாக இருந்தாலும், அதுதான் உண்மை. கர்த்தர் வெறுமனே நம்மைக் குழிகளில் தள்ளிவிடுகிறவர் அல்ல. நமது வாழ்வின் ஒவ்வொரு சம்பவத்துக்கும் நிச்சயம் ஒரு நோக்கம் உண்டு. ஏனெனில், தாம் முன்செல்லாத முன்அனுபவிக்காத எதனையும் ஆண்டவர் நமக்கு அனுமதிக்கவே மாட்டார்.
பவுல் கர்த்தரால் தொடப்பட்ட பின்னர் அடைந்த வேதனைகள் யாவும் இயேசுவின்நாமத்தின் நிமித்தமேயாகும். ஆனால் அதற்காக அவர் துக்கப்பட்டதாகவோ, மனஸ்தாபப்பட்டதாகவோ நாம் பார்க்கமுடியாது. மாறாக, சிலுவையின் உபதேசத்தினிமித்தம் அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார். அத்துடன் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது நிருபத்தில் முக்கிய காரியத்தை எழுதியுள்ளார். முதலாவது, “தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே” இந்த உலகம் தேவனுக்கு விரோதமானது, ஆகவே சுவிசேஷத்தை அது எதிர்க்கத்தான் செய்யும். அந்த எதிர்ப்புகளிலிருந்து கர்த்தர் இவரை மறைக்கவில்லை, பதிலுக்கு, எல்லா நிலையிலும், தேவன் தனக்கு ஆறுதல் அருளினார் என்று எழுதுகிறார். இரண்டாவதாக, “அந்த ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யும்படி திராணியுள்ளவர்களாகும்படி” இதுவே ஆசீர்வாதம்!
ஆம், தலைவலியின் வேதனையை அனுபவித்தவனுக்குமட்டுமே இன்னொருவன் தலைவலியின் அவஸ்தை புரியும். பிறரது துக்க துயரங்களை நாம் அறியலாம்; ஆனால் அந்தந்த பாதைகளுக்கூடாகச் சென்றவனாலேயே அவனுடைய துயரம் எவ்வளவு கொடூரம் என்பதை உணரமுடியும். “அடுத்தவன் காலணியில் என் கால்களை வைத்தால்தான் அவன் துயர் புரியும்” என்று சொல்லுவார்கள். காலணியில் வெறுமனே கால் வைப்பது அல்ல, அந்த வேதனையில் முன்நடந்த ஒருவனால்தான் மெய்யான ஆறுதலை அளிக்கமுடியும். இப்படியாக முன்நடந்த ஒருவர்தான் நமக்கு இருக்கிறார். இன்று நாம் அனுபவிக்கின்ற சகலவற்றிற்கூடாகவும் முன்நடந்து ஜெயம்பெற்ற ஒருவர்தான் நமது ஆண்டவர். அவர் நம்மை வெறுமனே சோதனைக்கு அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு வேதனைக்கும் நாம் ஆளாகும்போது, ஆண்டவர் நம்மை ஆறுதல்படுத்துவார் என்பதை நம்பவேண்டும். அடுத்தது, இப்படிப்பட்ட துன்பத்திலுள்ள யாரோ ஒருவருக்காக என்னை ஆண்டவர் ஆயத்தப்படுத்துகிறார் என்பதை நாம் உணரவேண்டும். அப்போது நமது துக்கம் நிச்சயம் களிப்பாகவே மாறும். நாமும் பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்போம்.
ஜெபம்: தகப்பனே, நாங்கள் கடந்துவந்த உபத்திரவத்தின் பாதைகளும், வேதனையின் அனுபவங்களும் அவ்வித பாதையில் செல்லும் நபர்களை ஆறுதல்படுத்த எங்களை ஆயத்தப்படுத்தும் தருணங்கள் என்பதை எங்களுக்கு உணர்த்தினீர். ஸ்தோத்திரம். ஆமென்.