நாம் அல்ல, கர்த்தரே!

தியானம்: 2026 ஜூலை 9 வியாழன் | வேத வாசிப்பு: 2நாளாகமம் 20:1-19

YouTube video

இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல …. புறப்படுங்கள் (2நாளாகமம் 20:17).

அநேகர் ஒன்றுதிரண்டு, தனித்து நிற்கும் உங்களைச் சூழ்ந்து, உங்களைக் குற்றஞ்சாட்டி, தலைகுனிய வைத்திருக்கிறார்களா? அதிலும் என்ன தவறு செய்தோம் என்பது கூட நமக்கு விளங்காதபோதும், நாம் தாக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களும் நிச்சயம் நேரிடலாம். இது நேரடியாகவும் சம்பவிக்கலாம்; அல்லது எப்பக்கமும் திரும்பமுடியாதபடி பல பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்து நம்மைத் திகைக்கவும் வைக்கலாம். இது மிகவும் கடினமான நேரம்.

இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகி பிரயாணமாய் வந்தபோது, அம்மோனியர் மோவாபியர் வாழ்ந்த தேசத்தின் வழியாய்ப் போக கர்த்தர் உத்தரவு கொடுக்கவில்லை. இவர்களும் அப்படியே விலகியே போனார்கள். இந்த நன்மையையெல்லாம் மறந்து இப்போது மோவாபியருடன், அம்மோனியருடன், சுற்றிலும் இருந்தவர்கள் யோசபாத் ராஜாவுக்கு விரோதமாக யுத்தம் பண்ண வந்தார்கள். அப்போது யோசபாத் செய்தது ஒன்றுதான்; யூதா எங்கும் உபவாசத்தைக் கூறுவித்து, கர்த்தரைத் தேடுவதற்கு சகலரையும் ஒன்றுகூட்டினான். அப்போது யோசபாத், “இந்த ஏராளமான கூட்டத்துக்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை. செய்வது என்னவென்றும் தெரியவில்லை. எங்களது கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கிறது” என்று ஜெபித்தான். அதற்கு யகாசியேல் மூலமாக கர்த்தருடைய ஆவி பதிலுரைத்ததாவது: “கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள். யுத்தம் உங்களுடையது அல்ல; தேவனுடையது. நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்” என்பதே (2நாளா.20:17). யோசபாத்தும் மக்களும் கர்த்தருக்கு முன்பாகத் தாழ விழுந்தார்கள். யூதா மனுஷர் ஒன்றும் செய்யவில்லை. அடுத்த நாளிலே யூதாவுக்கு விரோதமாக வந்த அத்தனை மனிதரும் தரையிலே செத்துக் கிடந்தார்கள். இது சத்தியம்.

இந்த தேவனே இன்று நம்முடைய தேவனும். “எப்பக்கம் நெருக்கப்பட்டும் நாம் ஒடுங்கிப்போவதில்லை” என்று பவுல் எப்படிச் சொன்னார்? இன்று நாம் மோவாபியரையும் அம்மோனியரையும் சந்திக்கப்போவதில்லை. மாறாக, நாட்டில் நடக்கக்கூடிய யுத்தங்களை சந்திக்க நேரிட்டாலும், இதற்கும் மேலாக, நமது தனிப்பட்ட அன்றாட வாழ்விலே நமக்கு எதிராக எழும்புகின்ற ஆயுதங்கள் அநேகத்தை சந்திக்கவும் நேரிடலாம். எல்லாப் பக்கமும் நெருக்கப்படலாம். நாம் நேசித்தவர்கள், நம்மிடம் நன்மை பெற்றவர்கள்கூட நமக்கு எதிராக எழும்பலாம். நாம் செய்யவேண்டியது ஒன்றுதான். “கர்த்தர் எனக்கு உதவி செய்வார்” என்று சொல்லி தேவனுடைய பாதம் சரணடைய வேண்டியதுதான். அப்போது கர்த்தர் நமது யுத்தங்களை ஆச்சரியமான விதத்தில் நடத்துவார். சகலமும் முறியடிக்கப்படும். கர்த்தரை நம்புவோமா?

ஜெபம்: ஆண்டவரே, எங்களுடைய இக்கட்டான நேரங்களில் நாங்கள் நம்பினவர்கள் உடன் இராமற்போனாலும் நீர் எங்களோடுகூடவே இருக்கிறீர். உமக்கு நன்றி. ஆமென்.