ஆவியானவரால் தடைபண்ணப்பட்டு…
தியானம்: 2026 ஜூலை 12 ஞாயிறு | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 16:6-12

ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்; (அப்போஸ்தலர் 16:7).
ஜெபங்களுக்கு எப்போதும் நேர்மறையான பதில்கள்தான் கிடைக்கும் என்பதல்ல. அதற்கு எதிர்மறையாகவும் கர்த்தர் நடத்துவார். ஆனால் அது தப்பாகாது. நம்மில் நற்காரியங்களைச் செய்வதற்கு, கர்த்தருடைய ஊழியத்தைச் செய்வதற்கு ஒழுங்கு செய்கையில் பலத்த தடைகள் வந்து நம்மைத் திகைக்க வைப்பதுமுண்டு.
பல வருடங்களுக்கு முன்னர், தொடர்மாடிக் கட்டடங்களால் நிறைந்த ஒரு இடத்தில் கிறிஸ்துமஸ் நாட்களில், அனுமதி பெற்று, ஒரு குறிப்பிட்ட இரவு வேளையில் மெழுகுவர்த்திகளும் விளக்குகளும் கொண்டு, அந்த இடத்திலுள்ள வீதிகளில் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி, தெருச்சந்திகளில் சுவிசேஷம் சொல்வதற்குத் திட்டமிட்டோம்; அப்படியே ஆரம்பித்தோம். யாரும் நம்மை எதிர்க்கவுமில்லை, நமக்கும் மிகுந்த சந்தோஷம். ஆனால் நடந்தது என்ன? ஒரு சிறிது நேரத்தில் திடீரென சோ என்று மழை பெய்ய ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த கட்டடத்துக்குள் புகுந்தோம். அது அந்தப் பகுதியின் சமூக மண்டபமாயிருந்தது. அதிகாரிகள் வந்து, அதற்குள் கூட்டம் நடத்த அனுமதி தந்தார்கள். கர்த்தருக்கே நன்றி! ஒரு பெரிய கூட்டம் அந்த மழையின் மத்தியிலும் அந்த மண்டபத்துக்குள் கூடினார்கள். நாங்களும் சந்தோஷமாக சுவிசேஷத்தை அறிவித்துவிட்டுத் திரும்பினோம். கர்த்தருக்கே துதி.
பவுல் தன்னுடைய இரண்டாவது மிஷனரிப் பயணத்தை சீலாவுடன் தொடர்ந்தபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லத் திட்டமிட்டிருக்க, “பரிசுத்த ஆவியினாலே அவர்கள் தடைபண்ணப்பட்டார்கள்.” பின்னர் பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம் பண்ணினபோது, “ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.” திரும்பும் பக்கம் தெரியாதிருக்க, மக்கெதோனியாவிலிருந்து ஒருவன் வந்து நின்று தங்களுக்கு உதவி செய்யவேண்டுமென்று வேண்டிக்கொண்டதாக பவுல் ஒரு தரிசனம் காண்கிறார். இப்போது செல்ல வேண்டிய திசை தெளிவாயிற்று. அங்கே அவர்களுக்கு என்ன வைக்கப்பட்டிருந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால், அந்தத் தரிசனத்தின்படி, கர்த்தர் தங்களை அழைத்தார் என்று நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போக ஆயத்தமானார்கள்.
கர்த்தருடைய ஊழியத்திட்டத்தையே ஆவியானவர் தடுத்து, வேறுபக்கம் திருப்பிய போது, பவுலும் சீலாவும் மனதார ஏற்றுக்கொண்டார்கள். நம்மால் இது முடியுமா? வார்த்தையின்படி திட்டங்களைப் போடும்போதும், ஆவியானவர் தடை பண்ணலாம், மறுபக்கத்தில் அவர் தமது திட்டத்தை நமக்குள் வைப்பார். அதற்கு நாம் நம்மைத் தரவேண்டுமே! விசுவாசத்துடன் கர்த்தர் உணர்த்தும் வழியில் நமது கால்களை வைப்போமாக? அவர் நடத்துவார்.
ஜெபம்: “அன்பின் பிதாவே, சுவிசேஷப்பணிகளின் செயல்படுத்த வேண்டிய திட்டங்களில் ஆவியானவரின் வழிநடத்துதலைத் தெளிவாக அறிந்துகொள்ள உதவி செய்யும். ஆமென்.”