சத்திய வசனம் பங்காளர் மடல்

(மே – ஜுன் 2026)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இம்மாத சத்தியவசன சஞ்சிகை வெளிவர கர்த்தர் செய்த இரக்கத்திற்காக அவரைத் துதிக்கிறோம். சத்தியவசன ஊழியத்தை தங்களது மனப்பூர்வமான காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கிவருகிற பங்காளர்கள், ஆதரவாளர்கள் யாவருக்கும் ஆண்டவருடைய நாமத்தினால் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினது முதல் நாங்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தோம்; இன்னமும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்தினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது (2நாளா.31:10). தம்முடைய ஜனத்தை கர்த்தர் ஆசீர்வதித்தினால் எசேக்கியாவும் பிரபுக்களும் கர்த்தரை ஸ்தோத்தி ரித்தார்கள். அவ்வண்ணமாகவே கர்த்தர் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்க நாங்களும் வேண்டுதல் செய்கிறோம்.

புதிய கல்வியாண்டு பங்காளர் குடும்பங்களிலே மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதமாய் இருக்கவும், கல்வி கட்டணத்தொகையை கட்டுவதற்கான எல்லாத்தேவைகளும் சந்திக்கப்படவும் அனைவரும் பாதுகாப்போடு இருப்பதற்கும் நாங்களும் தொடர்ந்து ஜெபிக்கிறோம்.

சத்தியவசன வெளியீடுகள் மூலமாகவும், தொலைக்காட்சி ஊழியங்கள், வாட்ஸ் அப், இணையதளம் மற்றும் YouTube வாயிலாகவும் தடைகளின்றி தொடர்ந்து நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கு உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யுங்கள்.

இவ்விதழில் ஒருவரையொருவர்… என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய சிறப்புக்கட்டுரையின் முதல்பாகம் இடம் பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு வேதபாடமாக சிறிய தீர்க்கதரிசிகளைக் குறித்து கற்றுவருகிறோம். அருள்திரு இராபர்ட் ரீட் அவர்கள் எழுதிய யோவேல் தீர்க்கதரிசியைக் குறித்த வேதபாடத்தின் தொடர்ச்சியும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தொடர் வேதபாடமும் இடம் பெற்றுள்ளது, மேலும் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆவிக்குரிய அறநெறி காரியங்களில் பனையைப்போல இயற்கை அழகினை வெளிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பனை மரம் என்ற தலைப்பில் சகோ.ஜி. கிறிஸ்டியன் வெய்ஸ் அவர்கள் எழுதியுள்ளார்கள். இச்செய்திகள் யாவும் தங்களது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக பிரயோஜனமாயிருக்க ஜெபிக்கிறோம்.

A.ஜான் துரை

அவர்களும் மகா சத்தமிட்டு, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ள பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். (வெளி. 5:12)