• சகோதரி சாந்தி பொன்னு •
(மே – ஜுன் 2026)

ஆண்டுகள் மாதங்கள் நாட்கள் நாழிகைகள் நம்மை விட்டுக் கடந்துகொண்டிருக்கின்றன. நாமும் உலக வாழ்வில் நமது வாழ்நாட்களின் காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம். வயதில், பருவத்தில் நாம் வளர்ந்து, நம்மில் பலர் முதுமைக்குள்ளும் வந்திருக்கலாம். இவை இயல்பாக சம்பவிப்பவைகளே. இப்படியிருக்க, நாம் எவ்வளவுக்குக் கர்த்தருக்குள் திடமாக இருக்கிறோம்? பரிசுத்த ஆவியானவருடைய நடத்துதலில் கர்த்தருடைய வார்த்தை எவ்வளவுக்கு நமக்குள் ஊன்றி, வளர்ந்து, அதிக கனிகொடுக்கும்படி எவ்வளவுக்கு வளர்ந்திருக்கிறோம்?
‘அன்பு’ கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளம் என்றால், ‘ஒருவருக்கொருவர்’ என்பது அதன் மேற்தளம் என்றால் மிகையாகாது. ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்’ என்றார் ஆண்டவர். அதுதானே கட்டளை, பத்துக் கற்பனைகளும் இந்த அன்பில்தானே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இயேசுவானவர் குறிப்பிட்ட அந்த அன்பு எப்படிப்பட்டதாயிருக்கவேண்டும் என்பதையும் அவரே எடுத்துரைத்தார். அதாவது, ‘நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்’ (யோவா.13:34). அந்த அன்பில் நிலைத்திருந்தால்தான் நாம் அவருடைய சீஷர்களாயிருப்போம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இப்படியிருக்க, கிறிஸ்தவ வாழ்வு, அதன் அடித்தளம், மேற்தளம், சீஷத்துவம் யாவிலும் நாம் இயேசுவுக்குச் சாட்சிகளாக இருக்கிறோமா என்பதை இன்றைய காலகட்டத்தில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். வேதவாக்கியங்களில் நமக்குப் பிடித்தமான உகந்ததான தேவைக்கு ஏற்றபடியான வாக்கியங்களைப் பிடித்துக்கொண்டு, பலவற்றை நாம் அதிகம் கவனத்தில் கொள்ளாத ஒரு சோதனைக்குள் நாம் இருக்கிறோம் என்றால் அதை மறுக்க முடியுமா? நம்மையும் அறியாமலே நாம் ஒரு உள்ளான போராட்டத்தில் சிக்குண்டிருக்கிறோம் என்பதே உண்மை. நம்மை நாம் உணராமல், நம்மை நாம் சோதித்தறியாமல், பிறரைக் குறித்த காரியங்களில் அதிகம் சிரத்தை எடுத்து, நமக்கு நாமே தீங்கு செய்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எனக்கு எதிரி யார்?
‘உங்கள் எதிரி யார்’ என்று கேட்டால், எந்தவொரு தயக்கமுமின்றி ‘சாத்தான்’ என்று நாம் சொல்லிவிடுகிறோம். அது ஓரளவுக்கு உண்மையாயிருந்தாலும், ‘நமக்கு முதல் எதிரி நாமே’ என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். கர்த்தருடைய வார்த்தை நம் வாழ்வுக்கு ஏற்ற யாவையும் நமக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறது; ஆனால் நாம் எவ்வளவுக்கு அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கிறோம் என்பது கேள்விக்குறிதான். இயேசு சிலுவையில் மரித்தது எதற்காக என்று கேட்டால், அவர் என் பாவங்களுக்காக மரித்து, என்னை மீட்டுக்கொண்டார் என்று உடனடி பதிலளிக்கிறோம். இது சத்தியம். ஆனால், அவர் என்னை என் பாவத்திலிருந்து மாத்திரமல்ல, என்னிடத்திலிருந்தும் மீட்டெடுத்தார் என்ற உண்மை இதற்குள் பொதிந்திருப்பதை உணர்ந்திருக்கிறோமா? மீட்படைந்த பவுலடியார், தன்னில் நன்மை இல்லையே என்று வருந்துகிறார். ‘நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை’ என்கிறார். ‘ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்’ என்கிறார். ஆக, பவுலடியாருக்குள் ஒரு போராட்டம் இருந்திருக்கிறது. யார் தன்னை விடுவிப்பார் என்று வெளிப்படையாக தன் இயலாமையை எழுதியுள்ளார். ஆக, இந்த மரண சரீரத்தில் நாமே நமக்கு விரோதிகளாக, பாவப் பிரமாணத்துக்கு நம்மை விற்றுப்போட்டவர்களாக இருந்த நம்மைத்தான் ஆண்டவர் மீட்டுக்கொண்டார் என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.
இன்று நாம் மீட்கப்பட வேண்டிய முக்கிய பகுதி:
வெளிப்படையான தவறுகள் பாவங்களைச் சரிசெய்வது ஒன்று; அதை ஓரளவுக்குச் செய்யலாம். ஆனால் நாமே உணராமல் நாம் செய்யும் பாவம் இருக்கிறதே; அதை நாம் உணர்ந்தால்தானே சரிசெய்வதற்கு! ஒரு நாளில் நாம் பேசுகின்ற வார்த்தைகளைப் பதிவுசெய்து கணக்கிட்டால், அடுத்தவரைப்பற்றிய பேச்சுதான் மிக அதிகமாக இருப்பதைக் கணக்கிடமுடியும். அதிலும் இன்றைய நடைமுறை வாழ்வில், தங்கள் தங்கள் காரியங்களைத் தவிர்த்து, பிறரைப்பற்றிய காரியங்களை, அதிலும் ஒருவர் தவறு செய்துவிட்டாரோ இல்லையோ, தவறு செய்துவிட்டார் என்று ஒருவர் ஒரு செய்தியைத் துவக்கிவிட்டால் போதும்; நாம் ஒருவருக்கொருவர் அதைப் பரப்புவது ஒருபுறம் என்றால், சமூக வலைத்தளம் என்று ஒன்று உள்ளதே, அதில் அந்த நபரைப் பகுதி பகுதியாக தங்கள் இஷ்டத்துக்குக் கிழித்தெறிகிற கலாச்சாரம் ஒன்று இன்று அதிகரித்து வருகிறதை மறுக்கமுடியாது. அடுத்தவர் சமாச்சாரம், அடுத்தவர் தவறு இன்று பலருக்கு ஆதாயத்தைத் தேடித் தருகிற தொழிலாக இருப்பது மிகவும் துக்கத்துக்குரியது.
விபசாரத்திலே கண்டுபிடித்துவிட்டோம் என்று சொல்லி வேதபாரகரும் பரிசேயரும் ஒரு பெண்ணை இயேசுவிடம் கொண்டுவருகிறார்கள். கொண்டுவந்த இவர்கள் சமுதாயத்திலே கனவான்கள், சமய சடங்காசாரங்களை ஒழுங்காகக் கடைப் பிடிக்கிறவர்கள் என்று பெயர் பெற்றவர்கள், பிறருடன் கலக்காதவர்கள். உண்மையில் இவர்கள் அவளைக் குற்றவாளியாக தண்டனை நிறைவேற்றக் கொண்டு வரவில்லை; மாறாக, இப்படிப்பட்ட குற்றத்தில் பிடிபட்டவர்களுக்கான தண்டனை நியாயப்பிரமாணத்தில் உண்டு; அதைக் குறித்து இயேசு என்ன சொல்கிறார் என்று அவரில் குற்றம் பிடிக்கவே அவர்கள் வந்தார்கள். கல்லெறிவது தவறு என்று இயேசு அவளுக்காகப் பரிந்துபேசுவார் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள். அப்படியானால் அவர் நியாயப் பிரமாணத்தை மீறுகிறவர் ஆவர். ஆனால் இயேசுவோ, அமைதியாக, ‘உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் கல்லெறியக்கடவன்’ என்று சொன்னதும், அவர்கள் தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டவர்களாய் சிறியோரும் பெரியோரும் ஒவ்வொருவராய் போய்விட்டார்கள்.
அன்று அவர்களுக்காவது மனச்சாட்சி இருந்தது; இன்று அது மனிதனிடம் உண்டா என்பதுவும் கேள்விக்குறிதான். குற்றம் குற்றம்தான்; ஆனால் அடுத்தவன் குற்றத்தைப் பிரபல்யப்படுத்தி அவனை உயிரோடே கொலை செய்வது தகுமா? ஒருவன் குற்றத்தில் கையும் மெய்யுமாக அகப்பட்டால் அது குற்றம், அவன் குற்றவாளி; அகப்படுமளவும் அதற்கு என்ன பெயர்? ஒருவன் குற்றத்தில் அகப்பட்டால், நியாயத்தீர்ப்புக் கொடுப்பதற்கு அதன் உண்மை தெரியாத நாம் யார்?˜ நியாயத்தீர்ப்பு கர்த்தருடையது.
பிறரைக் குற்றப்படுத்தும் முன்னர், நம்மை நாமே நிதானிக்கவேண்டும். நம்மை நாம் உணர்ந்து கொள்வதை விடுத்து, அடுத்தவர் விஷயத்தில் பய மின்றி நியாயந்தீர்க்க நாம் விரைந்து செயற்படுகிறோம் என்பதை மறுக்கமுடியாது. அதிலும் ஒருவர் செய்த தவறுகளை கர்த்தர் நினையாதிருந்தாலும், நாம் மறப்பதேயில்லை. இன்று அவர் எப்படி யிருக்கிறார் என்ற சிந்தனையே இல்லாமல், அன்று செய்த தவறுகளையே நாம் இன்னமும் எடுத்துப் பேசி அந்த நபரின் வாழ்வை நாமே கொன்றுபோடுகிறோம்.
கிறிஸ்தவர்களைக் கட்டி இழுத்துவரும்படி உத்தரவு பெற்று தமஸ்குவுக்குப் புறப்பட்டு வந்த சவுலுக்கு வழியில் நடந்ததும், அவருடைய கண்கள் பார்வை இழந்ததையும், இதனால் அவருக்குக் கைலாகு கொடுத்து தமஸ்குவுக்கே அவரைக் கூட்டிவந்து, யூதாவின் வீட்டிலே விட்டுவிட்டதும் நாம் அறிந்ததே. இப்போ தமஸ்குவிலே இருந்த சீஷனாகிய அனனியாவுக்குக் கர்த்தர் தரிசனமாகி, ‘நீ எழுந்து, நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப் போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்’ என்றார். ஆனால் அனனியாவோ, கர்த்தருக்கே பாடம் எடுக்கிறான். இவனைத் தெரியாதா? இவன் பொல்லாதவன்; இங்கேயும் நம்மைக் கட்டி இழுத்துப் போகவே வந்திருக்கிறான் என்கிறான். ஆனால் கர்த்தரோ, ‘நீ போ, அவன் நான் தெரிந்துகொண்ட பாத்திரம்’ என்கிறார். இந்த சமயத்தில் பவுல் என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா? பவுல் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்.
நாமும் இந்தத் தவறைத்தான் செய்கிறோம். ஒருவன் மனந்திரும்பினதைக்கூட அலட்சியம் செய்து, அவனுடைய பழைய வாழ்வையே பேசுகிறோம். ‘இவன் இப்போ நன்றாக ஆராதிக்கிறான். ஆனால் இவன் முன்னர் எப்படி இருந்தான் என்று நமக்குத் தெரியாதா’ என்று குற்றப்படுத்துகிறோம். இந்த செயல் நம்மை நாமே குற்றப்படுத்துவதற்குச் சமம் என்பதை நினைவில் கொள்வோம். ஏனெனில் நாமும் முன்னர் துஷ்டரும் அந்நியருமாகத்தானே இருந்தோம். அதை மறந்து, அடுத்தவனின் பழைய வாழ்வுக்குக் கணக்குப்போடக்கூடாது. அவனைக் கர்த்தர் அறிவார்.
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க் காதிருங்கள். மத்.7:1 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் என்று சொன்னது நமது ஆண்டவர்; அவரது வார்த்தையை மீறினால் அது பாவம் அல்லவா. அவரே அதற்கான காரணத்தையும் தந்துள்ளார். ஒன்று, பிறரைக் குற்றம் தீர்க்கின்ற நாங்களே குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு… அடுத்தது, நாங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நாங்களும் தீர்க்கப்படுவோம். இந்தக் காரியங்களைக் குறித்து நாம் அதிகம் சிந்திப்பதில்லை. உண்மையாகவே ஒருவன் குற்றம் செய்கிறானோ இல்லையோ, அதிலும் மேலாக அந்த சூழ்நிலையின் உண்மைத்தன்மையை உணராமல், ஏதோ அருகில் நின்று பார்த்தவர்கள்போல அதனை ஆமோதித்து, இன்னமும் அதிகம் சேர்த்து, பிறருடன் பகிர்ந்துகொள்ளும்போது, குற்றம் செய்தவன் என்று கருதப்படுகிறவனிலும் பார்க்க, நாமேதான் நமது தலையில் அதிக பாவத்தைக் கொட்டிக்கொள்கிறோம். அடுத்தவனை நியாயந்தீர்ப்பதை விடுத்து, நமது சிந்தனைகளை நமது நடத்தைகளை ஆராய்ந்து பார்க்கும்படி ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.
நமக்குள் மறைந்திருக்கிற பிரச்சனை என்னவென்றால், நாம் விரும்பாதவற்றை அடுத்தவனும் செய்யக்கூடாது, செய்தால் அவன் தவறு செய்கிறான் என்பதே நமக்கு கணக்கு. அல்லது நாம் விரும்புகிறபடி அடுத்தவனும் நடக்கவேண்டும், அதனால் அந்த வழியில் அவனை மாற்றவும் முயல விரும்புகிறோம். இன்று அநேக குடும்பங்கள் உடைந்துபோவதுற்கு இதுவே முக்கிய காரணம்.
சோதனைக்குள்ளாக்கும் சமூக வலைத்தளம்:
இன்று சமூக வலைத்தளம் என்ற வலைக்குள் அநேகமாக நாம் எல்லாருமே அகப்பட்டிருக்கிறோம் என்பதை மறுக்கமுடியாது. இந்த வலைத்தளத்தில் பாதிக்கும் மேல், அவற்றைப் பதிவிடுகிறவர்கள் அடுத்தவரின் வாழ்வை, முக்கியமாக எதிர்மறையான காரியங்களை, அவற்றின் உண்மைத் தன்மையைக்கூட உணராமல், மக்களைக் கவரும்வண்ணமாக தலைப்புகளைப் போட்டு குறிப்பிட்ட நபரை ஓரளவுக்குச் சாகடித்தே விடுகிறார்கள். இதைப் பார்த்தவுடன் நாமும் அந்தச் செய்தித் தலைப்பால் கவரப்பட்டு, அதைப் பார்வையிடத் திறக்கும்போது, ஒரு நொடியில் அதைப் பதிவிட்டவர் சம்பாதித்துவிடுவார். பாதிக்கப்பட்டவர் பாதிக்கு மேல் செத்துவிடுவார். இதில் நமது பங்களிப்பு என்னவென்றால், அந்தப் பதிவை ஆமோதிக்கும் வண்ணம், அதை உடனடியாகவே பலருடன் பகிர்ந்து விடுகிறோம். அதாவது, நாம் அடுத்தவரைக் குற்றவாளி என்று தீர்த்துவிடுகிறோம். இந்தப் பாவத்துக்கு கர்த்தர்தாமே நம்மை விலக்கிக் காப்பாராக.
அமர்ந்திருந்து சிந்தித்தால் அடுத்தவரில் நாம் சாட்டும் குற்றத்தை, நமது வாழ்வில் எங்கோ எப்போதோ எந்த மாதிரியிலேயோ செய்திருப்போம் என்பதை நிச்சயம் காணலாம். தங்கள் குற்றங்களை மறைக்க எத்தனிப்பவர்கள்தான் அடுத்தவரைக் குற்றப்படுத்துகிறவர்கள் என்கிறது மனவள வைத்தியம். இந்தப் பாவத்தை வெறுத்துவிட இன்றே தீர்மானிப்போம்! ஒருவரையொருவர் என்ற கிறிஸ்தவ அத்திபாரத்தைக் குலைத்துப்போட்டு, நம்மைத் தனது வலைக்குள் விழுத்தி, பிறரைக் குற்றப்படுத்துவதில் தந்திரமாக நம்மை ஊக்குவித்து, நம்மைப் பாவத்துள் தள்ளிவிடுகிற சத்துருவின் தந்திரத்துக்கு நம்மை விலக்கிக் காக்கும்படி நம்மை ஆவியானவர் கரத்தில் ஒப்புக்கொடுப்போமாக.
(அடுத்த இதழில் தொடரும்)