அறிமுகம்: தீர்க்கதரிசிகளின் சிறிய புத்தகங்கள்
• அருள்திரு. ராபர்ட் ரீட் •
(மே – ஜுன் 2026)

(சென்ற இதழின் தொடர்ச்சி)

அடுத்த நாள் காலையில் படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகளின் முதல் வரிசை என் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தது. …..சுவரின் மேல் ஏறவிடாமல் மரக்கிளைகள், பிரஷ்களினாலும் அவைகளை அடித்து விரட்டியும். தோட்டத்தைக் கொஞ்சமாவது சுத்தமாக வைக்க முடிந்தது. கடைசியில் இடைவிடாமல் இங்கும் அங்கும் போராடியதால் மிகவும் களைப்புற்றதால், போராட்டத்தையே நிறுத்தினேன். செடித்தொட்டிகளை வெளிக்கூடத்தில் வைத்துவிட்டு, மூடக்கூடியவைகளை மூடிவிட்டு, மீதியானவைகளை வெற்றிபெற்ற அந்த வெட்டுக்கிளிகளிடம் விட்டுக்கொடுத்தேன். நான்கு நாட்கள் தொடர்ந்து அவைகள் கிழக்குத்திசையை நோக்கி சென்றன. போன வழியில் கண்ணுக்கெட்டிய பசுமையான எல்லாவற்றையும் விழுங்கிவிட்டன. என் வீட்டை ஒட்டியிருந்த ஒரு பெரிய திராட்சத்தோட்டமும், மற்றொரு தோட்டமும் காலையில் புல் வெளியைப்போல பச்சைப் பசேல் என்று காணப்பட்டது. ஆனால் இரவு வருமுன் இவ்விரு தோட்டங்களும் இருந்த இடம், புதிதாய் உழப்பட்ட வயல்போல் அல்லது ஒரு தூசி நிறைந்த சாலையைப் போல் காணப்பட்டது. வெட்டுக்கிளிப் படை வரிசை வரிசையாய் அணிவகுத்துச் சென்றதிலும், சாப்பிடக்கூடிய எல்லாவற்றையும் தடங்கலின்றி தின்றதிலும் உண்டான இரைச்சல், தூரத்திலிருந்த காட்டிலே பெய்யும் பலத்த மழையின் சத்தத்தைப் போலிருந்தது. திராட்சப்பழங்கள் கனத்து தொங்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய திராட்சத்தோட்டம் மட்டுமல்ல, தானியம் விளைந்திருந்த வயல்களும்கூட மாயமாய் மறைந்துபோவதை என் கண்கூடாகக் கண்டேன். வெட்டுக்கிளிகளாலான அந்த வல்லார் படையின் தலைவரிசைகள் அபீய் என்னுமிடத்திலுள்ள எமீர் ஆசாத் என்பவருடைய அரமனையை அடைந்தபோது, அவைகள் கட்டடத்தின் மூலைகளைச் சுற்றிப்போக அலட்டிக்கொள்ளாமல் போர்வீரர்களைப் போல் சுவற்றில் ஏறி அவைகளின் மேல் அணியணியாய்ச் சென்றன.

இதேவிதமான ஒரு நாசத்தைத்தான் யோவேல் அனுபவித்தார். ஆகையால் இதைப்போன்ற நாசம் இதற்குமுன் ஒருபோதும் சம்பவித்ததில்லை என்று முதலாம் அதிகாரம் 2ஆம் வசனத்தில் கூறுகிறார். யோவேல் இஸ்ரவேலருக்கு கீழ்வரும் இரண்டு பெரிய பாடங்களை கற்பிக்கும்படி தேவன் இவ்வித படையெடுப்பை உபயோகப்படுத்தினார்.

1) வெட்டுக்கிளிகளினால் உண்டான இப்பெரும் நாசம் ஜனங்களுடைய பாவதத்தின் விளைவே. உண்மையான மனஸ்தாபத்தினால் அதைத் தடுக்கக் கூடும்.

2) வெட்டுக்கிளிகளினால் உண்டான பெரும் நாசம் கர்த்தர் அரசாளுகிறார் என்பதை சகல ஜாதிகளும் அறிந்துகொள்ளும்படி தேவன் மனித வரலாற்றிலே குறுக்கிடவிருக்கும், கர்த்தருடைய மகாப்பெரிய கோபாக்கினையின் நாளுக்கு ஒப்பாக இருக்கிறது.

அந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, ஒரு பெரிய சேனை தேசத்திற்குள் அணி வகுத்துச் செல்வதுபோல் இருந்தது (2:2-6). அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலைப்போல் இருந்தது. அவைகளின் இரைச்சல் ஓடுகிற இரதத்தின் சத்தத்தைப்போல் இருந்தது. அவைகளின் செயல்கள் யுத்த வீரருக்கு ஒத்ததாய் இருந்தது. அதன் முடிவு சர்வ நாசம். யோவேல் அதனுடைய விளைவை நன்றாய் அறிந்திருக்கிறார். அவர் ஜனங்களை எல்லாம் புலம்பும்படி அழைக்கிறார். விசேஷமாய் குடிவெறியரை குறிப்பாய் தெரிந்து கொள்ளுகிறார் (வச.1:5-7). திராட்சக்குழைகள் எல்லாம் அழித்துப் போடப்படுகின்றன. திராட்சக் கொடிகள் வேரோடே அரித்து தின்றுபோடப்பட்டது மாத்திரமல்ல, குடிகாரர் திரும்பவும் மது அருந்துவதற்கு நீண்டகாலம் ஆகுமாயிற்று. ஆகையால் குடிகாரர் எல்லாம் புலம்பட்டும். அடுத்தபடியாக, ஆசாரியர்களும் புலம்ப வேண்டும் (1:8-9). ஏனென்றால் அவர்களுக்கு தேவாலயத்தில் கர்த்தரை ஆராதிப்பதற்கு செய்ய வேண்டிய போஜனபலியான தானியமும், பான பலியான திராட்சரசமும் கிடைக்காது. தங்கள் வாழ் நாள் எல்லாம் ஆசாரியத்துவத்திற்காகவே பயின்று வந்த இவர்கள் திடீரென்று வேலையில்லாத நிலையை அடைந்துவிடுகிறார்கள். விவசாயிகளும் புலம்ப வேண்டியதிருக்கிறது (1:11,12). ஏனெனில் அவர்களுக்கு தங்கள் திராட்சத்தோட்டங்களிலும், பழத்தோட்டங்களிலும் வேலையில்லாமல் போனது மட்டுமல்ல, தங்கள் பிள்ளைகளைப் போஷிப்பதற்கும் எவ்வித ஆகாரமும் இருக்காது.

இப்பெரும் நாசத்தை கர்த்தருடைய நாள் என்று யோவேல் 1:15-17இல் அழைக்கிறார். அது கர்த்தரால் விசாரிக்கப்படும் நாள். அதன் விளைவு ஆகாரம் அற்றுப் போகிறது. வரப்போகும் நாட்களில் நாற்றுகள் பாவுவதற்காக வைத்திருந்த விதைகளும் அழிக்கப்பட்டுப் போகின்றன. ஆகவே எல்லா மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டங்களுக்கும் முடிவு வந்துவிடுகிறது. இந்த யுகம் முடியும்பொழுது நடக்கப்போகிற ஒரு சம்பவத்தை அவர், விவரணம் செய்யவில்லை. கி.மு. 850 இல் நடந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைப் பற்றி வர்ணிக்கிறார். அவர் இதை கர்த்தருடைய விசாரிப்பு என்று சொல்லுகிறார். அதாவது நாம் சந்திக்காமல் எப்படியாவது தப்பிக்கொள்ளவேண்டும் என்று முயற்சிக்கும் ஒரு காரியத்தைப் பற்றி எடுத்துப் பேசுகிறார். நம் வாழ்க்கையில் வியாதிகளும், துரதிஷ்ட வசமான சம்பவங்களும் ஏன் நம்மை தாக்குகிறது என்று ஆச்சரியப்படுகிறோம். அவைகளுக்குக் காரணம் அசுத்த ஆவிகள்தான். ஏன், சாத்தானே என்று எளிதாக குற்றம் சாட்டுகிறோமேயொழிய நமக்கு தனிப்பட்ட விதமாய் வரும் துரதிஷ்டங்களும் கஷ்டங்களும் தேவ கோபாக்கினையின் விளைவு என்று நாம் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. ஒருவேளை நாம் வாழும்முறை கர்த்தருக்குப் பிரியமில்லாததாயிருக்கக்கூடும். அப்போது அவர் நம் கவனத்தை ஈர்க்கும்படி ஒரு பெருந்துன்பத்தினால் நம்மை விசாரிக்கிறார்.

யோவேல், அந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கர்த்தருடைய உக்கிரத்தின் நாள், அல்லது ஒருவிதமான தேவ விசாரிப்பு என்று சரியாக கருதியதால் 2நாளா.7:14இல் கொடுக்கப்பட்டுள்ள போதனையின்படி, ஜனங்கள் கர்த்தரைத் தேடும்படி மனம்விட்டு ஏவுகிறார். யோவேல் 1:14ஐப் பாருங்கள்: “கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. மீண்டும் 2:12-14இல் ஜனங்களுக்கு ஒரு விரிவான அழைப்பு கொடுக்கப்படுகிறது. அது யோவேலிடமிருந்து அல்ல, கர்த்தரிடத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. 13ஆம் வசனத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் கர்த்தருடைய ஐந்து தனிப்பட்ட குணாதிசயங்களை யோனா நினிவே பட்டணத்திற்கு போனபோது அறிந்திருந்தான் என்பதை கவனியுங்கள். கர்த்தர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். நமக்குத் தேவையெழும் சமயங்களில் நமக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். உங்களில் யாராவது கர்த்தருடைய பலத்த கரத்தின் கீழ் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களானால், நீங்கள் கூப்பிடக் கூடியவரும் உங்களுக்கு உதவி செய்யக் கூடியவருமானவர் ஒருவர்தான் உண்டு. அவர் ஆண்டவராகிய கர்த்தரே. அவர் நம்மை அவரிடத்தில் திரும்ப வரச்சொல்லுகிறார். அவரிடத்திலிருந்து உங்களுக்கு ஆசீர்வாதம் வேண்டுமானால், நீங்கள் அவரிடம் திரும்ப வேண்டியது அவசியம்.

வரப்போகும் நாளுக்கான வாக்குத்தத்தங்கள் (2:18-3:21)

யோவேல் மனந்திரும்புதலுக்கு அழைப்பு கொடுத்து பிரசங்கித்ததால், இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடத்தில் திரும்பி தங்களுடைய அக்கிரமங்களுக்காக உண்மையாக மனஸ்தாபப்பட்டார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அப்பொழுது கர்த்தர் தேசதை மறுபடியும் ஆசீர்வதிக்க முடிந்தது.

இந்த புஸ்தகத்தின் இரண்டாம் பகுதியில் அதாவது 2:18 முதல் 3:21 வரை எழுதப்பட்டிருக்கும் விஷயங்கள் வெட்டுக்கிளிகளினால் நாட்டிற்கு வந்த பெரும் நாசத்தைப் பற்றி அல்ல. மாறாக, வரும் நாட்களில் நிறைவேறவிருக்கும் வாக்குத்தத்தங்களைப் பற்றியே ஆகும். யோவேல், தேவ ஆவியானவரின் கண்களின் மூலமாக மனித வரலாற்றில் நிகழவிருக்கும் சம்பவங்களான கர்த்தரின் நாளையும், அவருடைய வல்லமையான விசாரிப்பையும் காணமுடிகிறது. யோவேல் காணும் 3 முக்கியமான கட்டங்களாவன:

1) கர்த்தரின் நாளுக்கு பதிலாக தெரிந்து கொள்ளக்கூடியது – 2:28-32

2) கர்த்தருடைய நாளின் வருகை – 3:1-17

3) கர்த்தருடைய நாளுக்குப் பிறகு ஆசீர்வாதத்தின் காலம் – 3:18-21

1) கர்த்தருடைய நாளுக்குப் பதிலாக தெரிந்து கொள்ளக்கூடியது (2:28-32)

பெந்தெகொஸ்தே நாளன்று ஆவியானவர் ஊற்றப்பட்டபோது பரிசுத்த சபை உருவாகி அந்த நாள் சபையின் பிறந்தநாளானது, அன்று அப்போஸ்தலனாகிய பேதுரு ஒரு வல்லமையான பிரசங்கம் பண்ணினதினால், மூவாயிரம் பேருக்கு மேலான மக்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப்.2). அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ஏன் இந்த சாதாரண மக்கள் தாங்கள் ஒருபோதும் படித்திராத பாஷைகளைப் பேசுகிறார்கள் என்று கேட்டார்கள். அதற்கு பேதுரு, யோவேல் 2:28-32 இல் எழுதப்பட்டதை மேற்கோளாகக் கொண்டு விளக்கம் கூறினார். அக்காலத்தை ‘கடைசி நாட்கள்’ என்று குறிப்பிடுகிறார். ஆண்டவர் இயேசுகிறிஸ்து பரத்திற்கு ஏறினது, கர்த்தரின் பயங்கரமான நாளைக் கொண்டு வரவில்லை. ஆவியின் காலத்தையே கொண்டு வந்தது. இதுதான் கர்த்தருடைய நாளின் நியாயத்தீர்ப்புகளுக்குப் பதிலாக வந்த நாள். பெந்தெகொஸ்தே நாள் என்பது ஒருவரும் அழிவதை விரும்பாமல், யாவரும் இரட்சிக்கப்படுவதை விரும்பும் நீடிய பொறுமையுள்ள நம் ஆண்டவரின் தன்மையை வெளிப்படுத்துகிறது என்று நாம் விளங்கிகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

யோவேலின் காலத்தில் இஸ்ரவேலரின் பாவம், வெட்டுக்கிளிகளையும், சுற்றுப்புறத்து உயிரினங்களின் ஒழுங்கிற்கு நாசத்தையும் கொண்டு வந்தது. ஆதாம் காலத்திலிருந்து மனிதனுடைய பாவங்கள் அநேகந்தரம் மறுபடியும் மறுபடியும் மன்னிக்கப்பட்டு, கவனியாமல் விடப்பட்டிருக்கின்றன. நோவாவின் காலத்தில் காணப்பட்ட வன்முறைச் செயல்கள் நம்முடைய காலத்தில் காணப்படும் வன்முறைச் செயல்களுக்கு முன் அற்பமானவைகளாய் இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்நாளில் தேவன் வெறுப்புற்றவராய் உலகத்தை ஜலத்தினால் அழித்தாரென்றால், இக்காலத்தில் அவர் எவ்வளவு துக்கங்கொண்டவராயிருப்பார்? பலவிதமான பேரா பத்துக்கள் நமக்கு நேரிடக்கூடும் என்ற பயங்களுடன் நாம் வாழுகிறோம். நாம் அன்று அதிர்வெடியினால் அல்லது புற்றுநோயினால் அல்லது எய்ட்ஸ் (AIDS) என்ற கொடிய வியாதியினால் மரிக்கக்கூடும். கர்த்தருடைய மகா பரிசுத்தத்தைக் கருத்தில் கொண்டு நோக்கும்பொழுது, நாம் ஒருவரும் உயிர்பிழைத்து வாழ்வதற்குத் தகுதியுள்ளவர்கள் அல்ல என்று காரணம் எடுத்துக் கூறமுடியும். நாம் எல்லோரும் பாவஞ்செய்திருக்கிறோம். ஆகையால் நாம் சாக வேண்டியது அவசியமானாலும் கர்த்தரோ நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். இந்தக் காரணத்தினால்தான் கர்த்தர் தம்முடைய மகா உக்கிரத்தை பாவத்தின்மேல் ஊற்றப்போகும் கர்த்தருடைய நாள் கடைசியில் வந்து சேருமுன், இதற்குத் தப்பிக்கொள்ள ஓர் உபாயம் தந்தருளியுள்ளார். அதுதான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிந்து அவருடைய பரிசுத்த ஆவியினால் மறுபிறப்படைவது, கர்த்தர் தன் நியாயத்தீர்ப்பை தாமதிப்பதற்காய் அவருடைய மகா தயவிற்கு நன்றி செலுத்துவோமாக. பரிசுத்த ஆவியானவருடைய வாக்குத்தத்தம் என்னவென்றால், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தைக் கூப்பிடுகிற ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பதே.

2) கர்த்தருடைய நாளின் வருகை (3:1-17)

கர்த்தர் மகா தயவும் மிகுந்த அன்பும் நிறைந்தவராயிருந்தாலும், அந்த பயங்கரமான நியாயத்தீர்ப்பின் நாள் கட்டாயம் வந்தே தீரவேண்டும். அந்த நாளை என்றென்றுமாக தாமதம் செய்து கொண்டே இருக்கமுடியாது. யோவேல் தேவ நியாயத்தீர்ப்பைப் பற்றி கூறின விளக்கம் நாம் ஒவ்வொருவரும் விவரமாகப் படிக்கத்தக்கது. கர்த்தர் மனிதரை நியாயந்தீர்ப்பது அவசியம். ஏனென்றால் தேவனுடைய வார்த்தையை பிரசங்கித்ததின் மூலம் அவருடைய இரக்கத்தை ஏற்றுக்கொள்ளுவதற்கு கொடுத்த அழைப்பை எல்லா மக்களும் கவனியாது போவார்கள். எந்தெந்த ஜனங்கள், எந்தெந்த தேசத்தார் கிறிஸ்துவின் மூலமாகப் பெறக்கூடிய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களோ அவர்களுக்கு இந்த நியாயத்தீர்ப்பு பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருக்கிறது.

3) கர்த்தருடைய நாளுக்குப் பின்வரும் ஆசீர்வாதத்தின் காலம் (3:18-21).

யோவேல் புத்தகத்தின் கடைசிப்பகுதி இஸ்ரவேலரை மிக உன்னத நிலையில் காணும் புதிய காலமாயிருக்கிறது. அதாவது சமாதானமும் பொருளாதார செழுமையும் நிறைந்த காலம். யோவேல் புத்தகத்தைப் பற்றிய இவ்வுரையை முடிக்கும்பொழுது தேவனுடைய கடிகாரத்தின்படி நாம் எக்காலத்தில் இருக்கிறோம் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். வெட்டுக்கிளிகள் படையெடுத்த யோவேலின் காலம் கடந்தாயிற்று. இன்று நாம் பரிசுத்த ஆவியானவரின் காலப்பகுதியில் வாழுகிறோம். அக்கிரமக்காரர்மேல் தேவகோபாக்கினை ஊற்றப்படும் காலம் வரவிருக்கிறது.

வரப்போகும் பயங்கரமான கர்த்தருடைய நாளிலிருந்து காப்பாற்றப்படக்கூடிய ஒரு கூட்ட ஜனத்தை எல்லா ஜாதிகளிலிருந்தும் அழைக்கும் பணியில் தேவன் ஈடுபட்டிருக்கிறார் என்பது உண்மைதான். இந்த ஜனங்கள் இயேசுகிறிஸ்து தங்களுடைய பாவங்களுக்காக மரித்தார் என்று முழு இருதயத்தோடு நம்புகிறவர்களே!

 மொழியாக்கம்: Bro.Johndurai

வேத வசனத்தின் வல்லமை

அவிசுவாசியான ஒரு மருத்துவர் வேதாகமத்தை கேலிசெய்வதுண்டு. விசேஷமாக கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையான உயிர்த்தெழுதலை அவர் அதிக கேலி செய்வதுண்டு. ஒருநாள் வேதாகமத்தைத் தாக்குவதற்கு ஏதாவது வசனங்களைக் கண்டுபிடிக்க விரும்பி அதன் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது 1கொரி.15 ஆம் அதிகாரத்தில் ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்… (வச.35) என்ற வசனத்தைக் கொண்டு, ஓ! கேலி பண்ணுவதற்கு நமக்கு நல்ல ஏது கிடைத்தது என்றும், வேதாகமத்தைப் பரிகசிக்க நல்லதொரு வாய்ப்பு என்றும் எண்ணினார். இவ்வித எண்ணத்துடன் ஏதோ சொல்ல துவங்கின பொழுது அவருடைய கவனம் அதற்குப் பின்னே வந்த வசனம்மீது பட்டது. ‘புத்தியீனனே நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்ப்பிக்க மாட்டாதே’, ‘புத்தியீனனே’ என்ற வார்த்தை தேவனிடத்திலிருந்து வந்த ஒரு கூர்மையான அம்புபோல அவன் மனச்சாட்சியைக் குத்தி ஊடுருவிச் சென்றது. தர்சு பட்டணத்தின் வாசியான சவுலை, பவுல் என்ற இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக மாற்றின அதே தேவன் அவிசுவாசியும், பரிகாசக்காரனுமான இந்த டாக்டர் தன்னுடைய கிருபையின் கருவியாவதற்கு சித்தம் கொண்டார்.

பரிசுத்த ஆவியினாலும், தேவனுடைய வசனத்தின் வல்லமையாலும் மறுபிறப்பு பெற்ற இந்த டாக்டர், ஆண்டவருடைய உத்தமமான ஊழியனாக மாறினார். தன் கண்களை தேவன் திறந்ததை ஞாபகப்படுத்திக் கொள்ளும் பொருட்டு தன்னுடைய வேதாகமத்திற்கு ஒரு வெள்ளிப்பூட்டு ஒன்று செய்து அதிலே ‘புத்தியீனனே’ என்ற வார்த்தையையும் 1கொரி.15:36 என்ற அந்த அதன் குறிப்பையும் செதுக்கி வைத்துக்கொண்டார்.

உண்மையான அறிவு மனிதனை தாழ்மையுள்ளவனாக்கும். ஆனால் பொய்யான அறிவோ தற்பெருமையுடனும், தற்புகழ்ச்சியுடனும் பேசச்சொல்லும். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள் (நீதி.1:7).