சத்திய வசனம் பங்காளர் மடல்

(ஜூலை – ஆகஸ்ட் 2026)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

ஆண்டவரின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இம்மாத சத்தியவசன சஞ்சிகையின் வாயிலாக அனைவரையும் சந்திக்க கர்த்தர் செய்த கிருபைகளுக்காக அவரது அதிசயமான வழிநடத்துலுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். மிகுந்த ஜெபத்தோடும் அர்ப்பணிப்போடும் தாங்கள் சத்தியவசன ஊழியத்தை தாங்கிவருகிறீர்கள். ஊழியத்தை தாங்கிவருகிற சத்தியவசன பங்காளர்கள், ஆதரவாளர்கள், சந்தாதாரர்கள் யாவருக்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக (உபா.1:11). மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன இந்த வசனத்தின்படியே ஒவ்வொருவருடைய கைகளின் பிரயாசத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்களெல்லாம் நிறைவேறி, ஜனத்திற்கு விரோதமாய் ஜனம் எழும்பி, பெற்றாருக்கு விரோதமாக பிள்ளைகள் எழும்பி, பல்வேறு குற்றச்செயல்கள் நிறைந்து வழியும் இக்காலத்தில் பங்காளர் குடும்பத்தினரை கர்த்தர் வருகைக்கு ஆயத்தப்படுத்தவும், தீமைக்கு விலக்கி பாதுகாத்து நடத்தவும் 1தெச. 1:4 ஆம் வசனத்தின்படி இடைவிடாமல் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.

சத்தியவசன தொலைக்காட்சி ஊழியங்கள் அநேகமாயிரமான மக்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது. வாட்ஸ் அப், இணையதளம் மற்றும் YouTube வாயிலாகவும் தொடர்ந்து நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கு உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யுங்கள்.

இவ்விதழில் ஒருவரையொருவர்… என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய சிறப்புக்கட்டுரையின் இரண்டாம் பாகம் இடம் பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு வேதபாடமாக அருள்திரு இராபர்ட் ரீட் அவர்கள் எழுதிய சிறிய தீர்க்கதரிசிகளைக் குறித்த வரிசையில் இந்த இதழில் யோனா தீர்க்கதரிசியைக் குறித்த வேதபாடமும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தொடர் வேத பாடமும் இடம் பெற்றுள்ளது, மேலும் நம்முடைய பலத்தினாலோ பராக்கிரமத்தினாலோ ஒன்றும் செய்ய இயலாது என்கிற சத்தியத்தை பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்? என்ற தலைப்பில் சகோதரி பவானி மகேந்திரன் அவர்கள் எழுதிய கட்டுரையும், அத்தோடு நித்தியத்தைப் பற்றிப் பிடிக்கும் ஜெபம் என்ற தலைப்பில் சகோ.லியோனர்ட் ரேவன்ஹில் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவும் தங்களது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக பிரயோஜனமாயிருக்க ஜெபிக்கிறோம்.

A.ஜான் துரை

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டு வருவான்.