• Dr.உட்ரோ குரோல் •
(ஜூலை – ஆகஸ்ட் 2026)

17. ஆறு முத்திரைகள்

உபத்திரவ காலத்தில் பூமியில் வரும் நியாயத் தீர்ப்புகள் பூமியின் குடிகளுக்கு வரும் ஒரே நியாயத்தீர்ப்பு அல்ல; அவை துன்மார்க்கருக்கு வரும் ஒரே நியாயத்தீர்ப்பும் அல்ல. தேவனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணி, பாவம் செய்த பூமியின் மேல்வரும் நியாயத்தீர்ப்பு ஏற்கனவே குறிக்கப்பட்டுவிட்டது. வேதாகமத்தின் ஆறு இடங்களில் தேவன் கோபப்படுவதற்கு தாமதமானவர், இரக்கமுள்ளவர், பொறுமையுள்ளவர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தேவன் உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு அளிப்பதையே தமது கடமையாகக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அதனை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வெளிப்படுத்தல் 6ம் அதிகாரத்தில் உலகத்துக்கு உண்டான நியாயத்தீர்ப்பை எவ்வாறு தேவன் அனுமதிக்கிறார் என்றும் நாம் பார்க்க இருக்கிறோம்.

ஐந்தாம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்து ஒருவரே சுருளைத் திறக்கவும், எதிர்கால நிகழ்வுகளை வெளித்தப்படுத்தவும் தகுதியானவர் என்று பார்த்தோம். அவர் ஒருவரே தகுதியானவர் என்பதால் இருபத்து நான்கு மூப்பர்கள், நான்கு ஜீவன்கள் யாவரும் இயேசுவின் முன்பாக முகங்குப்புற விழுந்தனர். “தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” (வசனம் 7) என்ற புதிய பாட்டைப் பாடினார்கள்.

அடுத்த வசனத்தில் இவர்களுடன் கோடிக் கணக்கான தூதர்களும் இணைந்து கொண்டனர் எனப் பார்க்கிறோம். வரலாற்றில் எந்த காலத்திலும் விண்ணுலகில் ஒரு தனி மனிதன் தேவனுக்காகப் பாடுவதை நாம் பார்க்கமுடியாது. அங்கு மிக அதிகமான பாடகர்குழுவினர் தேவனைப் போற்றிப் பாடினர். அவர்கள், “கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது” (வச.12) என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள். பின்பு இவர்களைத் தவிர, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், “அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன” என்று பாடினார்கள். பிலிப்பியர் 2 ஆம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து தம்மை வெறுமையாக்கினதை வாசிக்கிறோம். “அவர் தேவனுக்கு சமமாயிருப்பதை விரும்பாமல் வானலோக மகிமையனைத்தையும் துறந்து மனுஷசாயலாகி நம்முடைய பாவங்களை சுமந்து மரணபரியந்தம் அதாவது சிலுவை மரணம் வரைக்கும் தம்மைத் தாழ்த்தினார்.” சிலுவைக் காட்சியை நாம் கண்ணோக்கும்பொழுது, வரலாற்றிலும் இயேசுவின் வாழ்விலும் தாழ்மையான காரியத்தையே நாம் பார்க்கிறோம். சாத்தானுக்கு அனைத்தும் கீழே சரிந்துவிட்டது. ஆனால் இயேசுவுக்கோ எப்பொழுதும் உயர்ச்சியே.

இங்கு இருபத்து நான்கு மூப்பர்களையும், நான்கு ஜீவன்களையும் கோடிக்கணக்கானவர்களையும், வானத்திலும் பூமியிலும் உள்ள அனைவரையும் நாம் காண்கிறோம். இங்கு இயேசுவுக்கு அவர்கள் கொடுத்த மரியாதையையும் நாம் காண்கிறோம். முழங்கால் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும். பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கையிடும். இது நிச்சயம் நிறைவேறும்.

இனி அதிகாரம் 6 – ஐ ஆராய்வோம். “ஆட்டுக் குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்” (வச.1). இக்காரியங்களைக் காண நான் யோவானின் அருகில் இருக்க விரும்பினேன். முதலாவது அவர் ஆவியில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். யோவான் அங்கு நடப்பவற்றைப் பார்ப்பதற்கு தேவன் வானத்தைத் திறந்தார்.

“நான்கு ஜீவன்களில் ஒன்று யோவானிடம் “சுருளைத் திறக்க தகுதியான இயேசுகிறிஸ்து முதல் முத்திரையை உடைத்துவிட்டார். நீ வந்து பார்” என்றது. உலக அழிவை ஆரம்பித்து வைக்கும் நான்கு குதிரை வீரர்களை கண்டார்.

(வசனம் 2) “நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.” இந்த வெள்ளைக் குதிரையில் ஏறியிருந்தவர் யார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் வேதவிளக்கியலார் “அவர் இயேசுவாகத்தான் இருக்க வேண்டும். அவர் வெற்றியாளராக இருக்கிறார்” என்கின்றனர். ஆனால் 19ம் அதிகாரத்தில் இயேசு ஒரு வெள்ளைக் குதிரையில் ஏறி உலகத்தை ஜெயிக்கிறவராகக் காணப்படுகிறார். எனவே இந்த குதிரை வீரர் இயேசுவாக இருக்கமுடியாது. ஒவ்வொரு குதிரை வீரரும் உலகிற்கு அழிவையே கொண்டு வருகின்றனர்.

இவர் இயேசுவைப்போல இருக்கவிரும்பும் நபர். தனது முழு காலத்தையும் கிறிஸ்துவைப்போன்று நடிக்கும் ஒரு நபர். எனவே இவர் அந்திக் கிறிஸ்துவாகத்தான் இருக்கவேண்டும் என நான் நம்புகிறேன். இவர் அழிவைக் கொண்டு வருவதால் கிறிஸ்துவாக இருக்கமுடியாது.

நான்கு முத்திரைகளில் முதல் நியாயத்தீர்ப்பை, பரலோகத்திலிருந்து வந்த வெள்ளைக் குதிரை பூமிக்கு எதிராகவும், தேவனுடைய ராஜ்யத்துக்கு விரோதமாகவும் கொண்டுவந்தது. வசனம் 4 இல் இரண்டாவது குதிரை வருகிறது. “அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.”

பூமியின்மேல் நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகிறது. அனைத்து நியாயத்தீர்ப்பும் குமாரனின் அதிகாரத்தில் உள்ளது. இவர்கள் அவருடைய முகவர்கள்.

இச் சிவப்பு குதிரையின் நிறம் இரத்தத்தைக் குறிக்கிறது. வெள்ளை நிறம் வெற்றியைக் குறித்தால் சிவப்பு குதிரை யுத்தத்தைக் குறிக்கிறது. இப்பொழுது தேவனுடைய அரியணையிலிருந்து பூமியின்மேல் அவருடைய நியாயத்தீர்ப்புக்கு மாறிவிட்டோம்.

வசனம் 5 இல் “அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்” என வாசிக்கிறோம். கறுப்பு என்பது மரணம் மற்றும் பஞ்சத்தைக் குறிக்கும்.

குதிரையின்மேலிருந்தவன் கையில் தராசு இருந்தது. அக்காலத்தில் உலகமுழுதும் ஏற்படும் உணவு பஞ்சத்தைக் குறிக்கும். மிக சொற்பமான உணவே இருப்பதால் அது நிறுக்கப்பட்டு அனைத்து உலகத்துக்கும் சமமாக்கப்படும். பொதுவாக யுத்தத்துக்குப் பிறகு பஞ்சம் உண்டாவது இயல்பு. போஸ்னியா, தூர கிழக்குநாடுகள், கிழக்கு ஆப்பிரிக்காவின் தீபகற்ப நாடுகள் ஆகியவற்றில் இவ்வாறு நடந்ததை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

வசனம் 5 இல் உணவு பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. “நான்கு ஜீவன்களின் நடுவில் மனிதக்குரல் போன்ற ஓசை ஒன்று கேட்டது. அது, ஒரு தெனாரியத்துக்கு கோதுமை அரை படி; வாற் கோதுமை ஒன்றரைப் படி; எண்ணெயையும் திராட்ச ரசத்தையும் சேதப்படுத்தவேண்டாம்” என்றது. இது வேடிக்கையாகத் தோன்றலாம். உணவு பஞ்சம் எனில் நாள் கூலியான தெனாரியத்துக்கு ஒருபடி மட்டுமே வாங்கமுடியும். பஞ்சகாலத்தில் ஒருவர் தனக்கு தேவையான அளவு உணவை சாப்பிடமுடியாது. இது நியாயத்தீர்ப்பின் ஒரு பகுதி. இங்கு குறிப்பிட்டுள்ள கிரேக்க சொல் தெனாரியம் என்பது ஒரு மனிதனின் ஒரு நாள் கூலியாகும். ஒரு நாள் முழுவதும் உழைத்து கிடைத்த பணத்துடன் மளிகைக் கடைக்குச் சென்று அரைபடி கோதுமை வாங்கினால், அது போதாது. அவரது குடும்பத்தை அதிக நாட்கள் பராமரிக்க முடியாது. நிச்சயமாகவே இது கடவுளின் நியாயத்தீர்ப்பு.

தற்காலத்தில் இருப்பது போலவே அப்பொழுதும் செல்வர், வறியோர் இருப்பார்கள். எண்ணெய் மற்றும் திராட்சரசம் உடைய செல்வர்களும், அரைபடி கோதுமை மட்டுமே உடைய எளியவர்களும் இருப்பர். எனவேதான் எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தவேண்டாம் என்று கூறப்பட்டிருக்கலாம்.

வசனம் 8 இல், “இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது” என்று வாசிக்கிறோம்.

இது தூய ஆவியானவரோ, கடவுளின் திருச்சபையோ, தேவனுடைய கிருபையோ இல்லாத உலகைச் சித்தரிக்கிறது. தேவன் தம்முடைய கிருபை என்ற திரையை விலக்கிவிட்டால், அவருடைய சினமே வெளிப்படும்.

காட்சி 1. தேவனுடைய கிருபை. அவர் மனுக் குலத்துடன் நீண்ட காலமாக கிருபையுடன் வழிநடத்தி வருகிறார். நாம் எவ்வாறு செயல்படுவது என்று நமக்குத் தெரியவில்லை.

காட்சி 2. தேவனுடைய கோபம். இதன் விளைவுதான் இந்த நான்கு குதிரைகள் கொண்டுவரும் அழிவும், பஞ்சமும் இறுதியில் மரணமும் ஆகும். உலகில் நியாயத்தீர்ப்பு நிச்சயமாகவே வரும். ஆனால் அது தேவனுடைய கரத்திலிருந்து வரவில்லை. தேவன் நம்மை நியாயந்தீர்க்க வேண்டியதில்லை. தீமையின் விளைவே நியாயத்தீர்ப்பு.

தேவன் பரிசுத்தராய் இருப்பதால் அவர் நம்மை நியாயந்தீர்க்கவேண்டும். ஏனெனில் நாம் பரிசுத்தர் அல்ல. தேவன் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவர வேண்டுமென்று இனியும் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த முத்திரைகள் உடைக்கப் படுவதனால் பூமி இதற்கு முன் காணாத எப்பொழுதுமில்லாத அழிவைக் காணும். தேவனுடைய கிருபையை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இன்று தேவன் தமது கிருபையை நீட்டிருத்திருக்கிறார் என்பதால் அவருடைய நாமத்தை வீணிலே வழங்குகிறார்கள். அவர் உள்ளார் என்பதை மறுதலிக்கிறார்கள்; சபிக்கவும் செய்கிறார்கள்.

கிருபை தேவனுடைய கோபத்துக்கு ஆளான மக்களுக்கு கிடைக்கும் இலவசமான ஈவு; நாம் அதற்குத் தகுதியானவர்கள் அல்லர். நாம் அதை அலட்சியப்படுத்தவோ, வியாபாரம் பண்ணவோ கூடாது. அவருடைய கிருபைக்காக நாம் அதிக நேரம் நன்றி சொல்லி துதிக்கலாம். இதுவே அவரது கிருபையை நாம் ஏற்றுக்கொள்ளும் சரியான முறை.

தேவனுடைய கிருபையே நம்மை பாவத்தின் தாக்குதலிலிருந்து முழுவதுமாக பாதுகாக்கிறது. “அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.

எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் (அந்திக்கிறிஸ்து) வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப் படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தானே தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். நான் உங்களிடத் திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே” என்று 2 தெசலோனிக்கேயர் 2ம் அதிகாரம் 1-6ஆம் வசனங்களில் நாம் வாசிக்கிறோம்.

இங்கு திருச்சபை இருக்கும்வரை தேவனுடைய ஆவியானவர் நியாயப்பிரமாணம் இல்லாதவர்களை ஆபத்து தாக்காதபடி தடுத்துக்கொள்கிறார். திருச்சபை எடுக்கப்பட்டபின்னர் தேவனுடைய ஆவியானவரும் சென்றுவிடுவார்.

வசனம் 9- 11 இல் “அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழி வாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொரு வருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன் பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங் கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது” என்று வாசிக்கிறோம்.

பூமியிலிருந்து திருச்சபை எடுத்துக் கொள்ளப்பட்டாயிற்று. ஆனால் தேவனுடைய வசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்ட ஆத்துமாக்கள் என்று வாசிக்கிறோம். இவர்கள் யார்? சபை காலத்தில் கொல்லப்பட்டவர்கள் அல்லர்.

தங்களுடைய விசுவாசத்துக்காக உலக நாடுகள் முழுவதிலும் துன்பப்படும் கிறிஸ்தவர்களும் அல்லர். உபத்திரவகாலத்தின் ஆரம்ப மாதங்களில் கொலை செய்யப்பட்டவர்களாயிருக்கலாம். தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் கண்டுகொண்டிருக்கும் இயேசுகிறிஸ்துவை தங்களுடைய இரட்சகராக ஏற்றுக் கொண்ட மக்களாவார்கள். இவர்கள் தேவனுடைய பலிபீடத்தின் கீழ் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் மூடப்பட்டவர்கள் என்று அடையாள பாஷையில் இருக்கலாம்.

தங்களுடைய இரத்தப்பழிக்காக எவ்வளவு காலம் பழிவாங்காமல் இருப்பீர் என்று ஆண்டவரை நோக்கிக் கேட்கிறார்கள். அந்திக்கிறிஸ்து ஜெயிக்கப்படும் வரைக்கும் இரத்த சாட்சிகளாக மரித்த இன்னும் அநேகர் இவர்களுடன் இணைய இருக்கிறார்கள்.

ஆறாவது முத்திரை உடைக்கப்படும்பொழுது பூமியின் மேல் அழிவு கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

ஆறு பேரழிவுகள் வரும் என எழுதப்பட்டுள்ளன.

1. மிகப்பெரிய நிலநடுக்கம்.

2. கதிரவன் கறுப்புக் கம்பளிபோல் கறுத்துப் போகுதல்.

3. நிலவு இரத்தம்போல் சிவத்தல்.

4. விண்மீன்கள் இடமாறி பாரெங்கும் கொட்டுதல்.

5. வானங்கள் சுருளைப்போல சுருட்டப்பட்டு தேவனுடைய ஆசனத்தை வெளிப்படுத்துதல்.

6. வானங்கள் சுருட்டப்படும் பொழுது மலைகளும் தீவுகளும் அகன்று போதல்.

இவைகளின் விளைவு மகா பயங்கரமாயிருக்கும். மக்களை பயம் பற்றிக்கொள்ளும். வசனம் 15,16 இல் மக்கள் யாவரும் “பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; ஆண்டவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது, யார் நிலை நிற்கக்கூடும்” என்பார்கள். இதைப்போலொத்த நாளை ஒருவரும் விரும்பமாட்டார்கள்.

இதை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே, அந்த மகா நாளில் உன்னுடைய நிலை என்ன?

(தொடரும்)

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை