• சகோதரி சாந்தி பொன்னு •
(ஜூலை – ஆகஸ்ட் 2026)

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கடந்த இதழிலே பிறரைக் குற்றப்படுத்துவதும், சரி பிழை தெரியாமல் புறங்கூறுவதும், பிறருக்கு நியாயத் தீர்ப்புக் கொடுப்பதும் தேவனுக்கு விரோதமான பாவம் என்றும், நாம் பிறரைக் குற்றப்படுத்தும்போது, நாம் நம்மை நாமே குற்றப்படுத்தக்கூடும் என்று வேத வசனங்களுடன் தெளிவாகக் கவனித்தோம். அதிகம் கவனம் எடுக்காத சிந்திக்கத் தவறுகின்ற இந்தத் தவறுகளையும் தேவன் வெறுக்கிறார் என்பதை உணர்ந்து, பிறருடன் சேர்ந்து இன்னொருவரைக் குறித்து வீண்பேச்சுக்கள் பேசுவதை அடியோடே நிறுத்திவிட தேவ ஆவியானவர் நமக்குத் துணை நிற்பாராக. இதன் தொடர்ச்சியாக இன்னும் சில விஷயங்களை இந்தக் கட்டுரையில் சிந்திப்போமாக.

இயேசு சொன்னார்:

‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்’ (மத்தேயு 5:22) என்று இயேசுவானவர் சொல்லிய வாழ்க்கைக்குரிய பல உபதேசங்களை அவர் உபதேசித்த மலைப் பிரசங்கத்தில் நாம் படிக்கிறோம். அந்த சமயத்தில் அவர் சொன்ன ஒரு விஷயம்: ‘நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்’ என்று சொன்ன ஆண்டவர், கொலை செய்யாதிருப்பாயாக என்ற கற்பனையை விளக்குகிறார். ஆயுதத்தால் ஒருவனைக் கொலை செய்வது ஒருபுறம்; ஆனால் முக்கியமாக நமது வார்த்தைகள், நியாயமில்லாமல் கோபிப்பது, வீணனென்று சொல்லுவது, மூடன் என்று ஒதுக்குவது, இவை யாவும் ஒருவனை நியாயந்தீர்ப்பதற்குச் சமம் அல்லவா! இந்தக் காரியங்கள் ஒரு மனிதனைக் கொலை செய்வதற்குச் சமம் என்பதை ஆண்டவர் விளக்கியுள்ளார். இப்படிப்பட்டவர்களுக்கு என்னவாகும் என்பதையும் நாம் அறிந்திருந்தாலும் அதைக் குறித்து அதிகம் கவனம் செலுத்துவதில்லை. ‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத் தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதவாயிருப்பான்’ (மத்.5:22).

இந்த வார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்துவது என்ன? நாம் ஆயுதம் எடுத்தோ வேறு விதத்திலே ஒருவரைக் கொலை செய்வது ஒன்று. அப்படிக் கொலை செய்யும் எண்ணம் எங்கிருந்து உருவாகிறது? ‘கோபம்’ இதுதான் மூலகாரணம். ஏன் கோபம் வருகிறது? நாம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அடுத்தவர் செய்யும்போது கோபம் வருகிறது. இந்தக் கோபம் மிகவும் ஆபத்தான உணர்வாகும். இது கட்டுப்பாட்டை மீறுமானால் அது மனரீதியான ஆவிக்குரிய ரீதியான பாதிப்புகளை பிறருக்கு மாத்திரமல்ல, நமக்கும் ஏற்படுத்திவிடுகிறது. ஆகவே, சுயகட்டுப்பாடு என்னும் போது முதலாவது நமது சிந்தனைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

இதுவரை நாம் எத்தனை கொலைகளைச் செய்து கர்த்தரையும் அடுத்தவரையும் துக்கப்படுத்தியுள்ளோம்? எத்தனை பேரை நியாயந்தீர்த்து நம்மை நாமே தீர்ப்புக்குள்ளாக்கியிருக்கிறோம்?

என்னை நானே நியாயத்தீர்க்கிறேனா?

பிறர் செய்யும் தவறுகளையோ பாவங்களையோ குறித்து நியாயந்தீர்த்து நாம் கோபப்படுகிறோமா, எச்சரிக்கையாயிருப்போம். ஏனெனில் அந்த சமயத்திலெல்லாம் என்னை நானே நியாயந்தீர்க்கின்ற ஆபத்துக்குள் சிக்கிக்கொள்ள நேரிடும். நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், …உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய் (ரோமர் 2:1).

ஏனெனில் பிறரில் நாம் கவனித்துப் பார்க்கின்ற பாவங்கள், ஏற்கனவே நமக்குள் வேர்விட ஆரம்பித்திருக்கும் என்பதை நாம் உணருவதில்லை. நம்மை நாம் உற்றுக் கவனித்தால், நமது கடந்தகால வாழ்வில் எங்கோ ஒரு மூலையில் நாம் குற்றப்படுத்துகிறவர் செய்த பாவத்தை ஏதோவொரு விதத்தில் நாம் செய்திருப்பதை உணரலாம்; அல்லது, இன்றைய சமூகம் ஏற்றுக்கொள்கிற விதத்தில் நாமே அந்தப் பாவத்தைக் கண்ணியமாகச் செய்கிறவர்களாக இருக்கலாம். பிறரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தி வீண் வார்த்தைகளை நாம் பேசுகின்ற அதேசமயம், நம்மைக் குறித்துப் பிறர் வீண்வார்த்தைகளைப் பேசுவதை நாம் உணராதிருக்கிறோம். நாம் ஒருவரைக் குற்றப்படுத்திப் பேச, அவர் நம்மைக் குறித்து இன்னொருவரிடம் குற்றப்படுத்திப் பேச. இதையெல்லாம் ஆண்டவர் வெறுக்கிறார்.

பவுல் தனது நிருபத்திலே இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். “மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, ,……நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக் குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்” என்கிறார். அதாவது பிறரைக் குற்றப்படுத்தும்போது நான் என்னையே குற்றவாளியாகத் தீர்க்கிறேன். ஆம், தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள மீட்டுக்கொள்ள யாராலும் முடியாது என்பதை பவுல் இந்த இடத்தில் ஆணித்தரமாக எழுதியுள்ளார். நாமே பாவம் செய்கிற சுபாவத்தை உடையவர்களாக இருக்கும்போது, அடுத்தவரைக் குற்றப்படுத்தி நியாயப்படுத்தும் பாவத்தையும் ஏன் நம்மில் கூட்டிக்கொள்ளவேண்டும்?

கர்த்தரே நியாயாதிபதி, அவர் பார்த்துக்கொள்வார். ஆகவே, கிறிஸ்துவண்டை திரும்புவோம்; பிறரையும் திருப்புவோம். பாவத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதா என்று நாம் கேட்கலாம். நிச்சயமாக முடியாது! ஆனால் கண்டித்து மனந்திரும்ப உதவுவது வேறு; குற்றவாளி என்று நியாயந்தீர்த்து தூற்றுவது வேறு. கண்டித்தாலும் தாழ்மையுடன்தான் நாம் கண்டிக்கவேண்டும். ஏனெனில் நாமும் அந்த நிலையில் ஒருநாள் இருந்திருப்போம்; இனியும் இருக்கலாம். அந்த நபரை ஆண்டவரிடம் வழி நடத்துவோம். அவர் பார்த்துக்கொள்வார்.

தாவீதின் உதாரணம்:

அடுத்தவரின் குற்றத்தைப் பெரிதுபடுத்தி, நியாயத் தீர்ப்பும் கொடுத்துவிடுகிற பாவத்தை அநேகமாக நாம் அறிந்தோ அறியாமலோ இயல்பாகவே செய்து விடுகிறோம். இச்சை, விபசாரம், கொலை என்று தொடர் பாவங்கள் செய்த தாவீது, அமைதியாக இருந்துவிட்டார். இந்தத் தாவீதின் வம்சத்தில்தான் மேசியா வரவேண்டும். அப்படியிருக்க கர்த்தர் தாவீதைப் பாராமுகமாக விட்டுவிடுவாரா? நாத்தானை அனுப்பி, ஒரு சங்கதியைச் சொல்ல வைக்கிறார். ஒரு தரித்திரனுக்கு இருந்த ஒரே செல்லமான ஆட்டுக் குட்டியை, அநேக ஆடுமாடுகள் வைத்திருந்த ஐசுவரியவான் தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவளிக்க, அந்த ஒரே ஆட்டுக்குட்டியைப் பிடித்து சமையல் பண்ணுவித்துவிட்டான் என்று நாத்தான் சொல்லக் கேட்ட தாவீதுக்குக் கோபம் வந்தது. “இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” என்று சொல்லிவிட்டார். அப்பொழுது நாத்தான், தாவீதை நோக்கி, ‘நீயே அந்த மனுஷன்’ என்கிறான் (2சாமு.12:1-7). இதைக் கேட்டதும் தாவீதின் இருதயம் எவ்வளவாய் துடித்திருக்கும் என்பதை நம்மால் உணரமுடிகிறதா? தனக்கு பல மனைவிகள் இருந்தும், உரியாவுக்கு ஒரே மனைவியாக இருந்தவளை, அதிலும் உரியாவைக் கொன்று தன்வசப்படுத்திய கொடிய பாவத்தைத் தன்னில் ஒளித்து வைத்திருந்த தாவீது, அந்தக் கற்பனை ஐசுவரியவானுக்கு நியாயம் தீர்த்துவிட்டார்.

நீ மற்றவனைக் குற்றப்படுத்தும்படி உன் சுட்டுவிரலை நீட்டும்போது, உன் மற்ற மூன்று விரல்களும் உன்னையே சுட்டிக்காட்டுகின்றன என்றதொரு கூற்று உண்டு. தாவீதின் நிலைமை நமக்கு வரவேண்டாமே.

குற்றத்தில் அகப்பட்டவரை என்ன செய்வது?

‘ஒருவருக்கொருவர்’ இதுதான் கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளம். நம்மை ஆண்டவர் தாங்கி நடத்துவது போல, நாமும் ஒருவரையொருவர் தாங்கி நடத்தவேண்டும் என்பதே வேதபோதனை. ‘என் வேலையை நான் பார்ப்பேன், எவரும் எனக்குத் தேவையில்லை’ என்று யாரும் தனித்து வாழ்ந்திடவும் முடியாது; விழுந்தவன் விழுந்துகிடக்கட்டும் என்று கிறிஸ்தவன் நான் விலகி நடக்கவும் முடியாது. நான் தடுக்கும்போது தாங்கவும், விழும்போது தூக்கி விடவும், தனித்து விடப்படும்போது துணையாய் நிற்கவும் எனக்கு ஒருவர் தேவை.

படைப்பிலேயே ‘மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல’ என்று தேவன் தாமே கண்டு, மனிதனுக்கு ஏற்ற துணையை அவனிலிருந்தே படைத்துக் கொடுத்தார். எந்தவொரு கிறிஸ்தவனோ கிறிஸ்தவளோ, நான் சுதந்தரவாளி என்று சொல்லமுடியாது, சொல்லவும் கூடாது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாம் நம்பியவர்கள் நம்மைக் கைவிட்டிருக்கலாம். ஆனால் கர்த்தரை நோக்கிப் பார்க்கும்போது எதிர்பாராத இடத்திலிருந்து அவர் நமக்கு நிச்சயம் ஒத்தாசை அனுப்புவார். ஒரு சகோதரன் அநியாயமாய் குற்றம் சுமத்தப்பட்டு மிகுந்த நெருக்கத்தில் இருந்தபோது, அதிலிருந்து மீண்டுவர அவருடைய நண்பர்கள், அவரிடம் உதவி பெற்றவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. ஆனால் ஒரு அந்நிய சகோதரனே அந்த வேளையில் எந்தவித நிபந்தனையும் எதிர்பார்ப்பும் இன்றி முன்வந்து உதவி பண்ணி அவரை மீட்டெடுத்த சம்பவம் சமீபத்தில் நடந்தேறியது. நான் கிறிஸ்துவின் பிள்ளையானால் யாராவது தேவையிலுள்ளதைக் கண்டால் பாராமுகமாக இருப்பது எப்படி?

சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள் (கலா.6:1).

பவுல் கலாத்தியருக்கு எழுதிய இந்த வாக்கியம் மிக முக்கியமானது. யாராவது யாதொரு குற்றத்தில் அகப்பட்டால்… அதாவது மெய்யாகவே அவர் குற்றம் செய்து, வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டால், சாதாரணமாக நாம் என்ன செய்கிறோம்? ‘இவரா’ ‘இப்படிச் செய்யலாமா’ என்று எத்தனை நியாயங்கள்; ‘இவருக்குத் தண்டனை அவசியந்தான்’ ‘இவர் சபைக்கே இழுக்கு’ என்று எத்தனை நியாயத்தீர்ப்புகள்! ஆனால் பவுலோ, ‘சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்’ என்கிறார். கண்டிப்பும் ஒழுக்காற்று நடவடிக்கையும் அவசியமானாலும், அதையும் சாந்தமுள்ள ஆவியோடும் அமைதியோடும் செய்யவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, பிறர் விஷயத்தில் எச்சரிக்கையோடு நடப்போமாக.

இங்கே பவுலடியார், குற்றத்தில் அகப்பட்டவனுக்கு சாந்தமுள்ள ஆவியோடே அவனைச் சீர் பொருந்தப்பண்ணவேண்டும் என்று எழுதியதோடு, இன்னும் இரண்டு விஷயங்களையும் சேர்த்து நமக்கு நல்லாலோசனையாக எழுதியுள்ளார்.

…நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு (கலா.6:1).

ஒன்று ‘நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு’ என்பதாகும். அடுத்த வரைச் சீர்பொருந்தப்பண்ணும்போது நான் எப்படிச் சோதிக்கப்படுவேன்? ஒன்று, குற்றம் செய்தவன் தண்டிக்கப்படத்தானே வேண்டும் என்று சொல்லி, அந்த நபருக்கு எதிராக எழும்புவேனானால், அது தவறு. நானும் என் வாழ்வில் அந்த நபர் செய்த அதே குற்றத்தைச் செய்யாதிருந்தாலும், அப்படிப்பட்ட ஏதோவொரு குற்றத்தை எப்பொழுதோ செய்திருக்கலாம், அது அகப்படாமலும் இருந்திருக்கலாம். ஆகவே, நானும் பூரணன் அல்ல என்பதை நினைந்து, அந்த நபரை அன்போடும் கருணையோடும் அணுகி அவரைத் தூக்கிவிட நம்மைத் தாழ்த்தவேண்டும். மாறாக, நான் நல்லவன்போல நடக்கக்கூடாது. அடுத்தது, தவறு செய்தவரைத் தூக்கிவிடுவதை விடுத்து, அவருடைய தவறுக்கு நானும் பங்காளியாகக்கூடாது.

அடுத்தது, ‘கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்’ என்கிறார் பவுல். அதெப்படி அதற்கான பதிலையும் அவரே தந்துள்ளார்: ‘ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து…’ கிறிஸ்துவின் பிரமாணம் எது? ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்’ (யோவா.13:34). இயேசு தாமே கொடுத்த இந்தப் பிரமாணத்தை நாம் மீறுவது எப்படி? ‘ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து’ … தவறு செய்தவன் எப்படி அதற்குள் விழுந்தான் என்பதை அன்போடு விசாரித்து, அவனைத் தூக்கிவிட நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனெனில் எந்தக் கணக்கையும் நம்மிடம் கேட்காமல்தானே ஆண்டவர் நம்மைத் தூக்கிவிட்டார், சிந்திப்போம்.

கிறிஸ்துவின் மாதிரியின்படியே

ஆண்டவர் எங்கே வைத்து நம்மைக் கண்டார், அவர் நம்மைத் தேடிக் கண்டுபிடிக்கையில் நாம் எந்நிலையில் இருந்தோம், அவர் நம்மை ஏற்றுக்கொண்டு தமது பிள்ளைகளாக உயர்த்தியபோது நமது மனநிலை எப்படி இருந்தது என்பதையெல்லாம் சற்று பின்னால் திரும்பிப் பார்த்து, சிந்திப்பது நல்லது. ஒவ்வொருவருடைய அனுபவங்களும் வேறுபட்டதாக இருக்கலாம்; ஆனால் சத்தியம் ஒன்றுதான். எவ்வளவேனும் தகுதியில்லாத நம்மை, பலவீனரான நம்மை, பாவசங்கிலியினால் சுற்றிக் கட்டப்பட்டிருந்த வேளையில்தான் ஆண்டவர் நம்மைக் கண்டு, விடுவித்து, ஏற்றுக்கொண்டார். இப்படியிருக்க, நம்மால் ஏன் பிறரை அவர்களுடைய பலவீனங்களோடே அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது?

ஆதலால், தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். (ரோமர்15:7).

அன்று ரோம சபையிலே யூதரும் புறவினத்தாரும், சுதந்திரரும் அடிமைகளும், செல்வந்தரும் ஏழை களும், பலவான்களும் பலவீனருமாக பலதரப்பட்ட சமூகத்தினர் இருந்தனர். அதனால் அவர்களுக்கு ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு அன்பாயிருக்க, நட்பு பாராட்டக் கடினமாக இருந்தது. ஏற்றுக்கொள்வது என்பது வெறுமனே வணக்கம் சொல்வதுடன் முடிவதில்லை; அவர்களை நமது வீடுகளுக்கு அழைத்து, ஐக்கியத்தின் அடையாளமாக ஒன்றாக இருந்து போஜனம் பண்ணி, நமது வீட்டுக் கொண்டாட்டங்களுக்கு அவர்களையும் அழைத்து என்று பல காரியங்களைச் சொல்லலாம். அதாவது ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமளிக்காமல் எல்லாருடனும் ஒருமனதுடன் முன்செல்லுதலாகும். நான் யார் எப்படிப்பட்டவன் என்று ஆராய்ந்து பார்த்தா நம் ஆண்டவர் நம்மைத் தம்முடன் சேர்த்துக்கொண்டார்?

‘பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்’ என்கிறார் பவுல். இது நம்மால் முடிகின்ற விஷயமா? ஆம், நாம் கிறிஸ்துவின் பிள்ளைகளானால் அவர் நடந்தபடிதானே நாமும் நடக்கவேண்டும்! நாம் பலவீனராய் இருந்தபோதுதானே கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டார்! ‘கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல், உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.’ இப்படியிருக்க, அன்றைய ரோம கிறிஸ்தவர்கள்போல நாமும் இன்று ஜீவிக்கலாமா? வேறுபாடு காட்டலாமா? விழுந்துபோகிறவர்களை இன்னமும் ஏறி மிதிக்கலாமா? விசுவாசத்தில் பலவீனரைத் தள்ளிநடக்கலாமா? நம்மை நேசிக்கிறவர்களை மாத்திரம் நேசிக்கலாமா?

முடிவில்…

ஏன் நாம் ஒரு தீர்மானம் எடுக்கக்கூடாது? பிறரைக் குறித்த பேச்சை நிறுத்திப் பாருங்கள், நமக்குப் பேசுவதற்குப் பேச்சே இராது. ஆகவே, முதலில் நம்மை நாமே நிதானிப்பதில் விழிப்புடன் இருப்போம். அடுத்தவரைக் குறித்த பேச்சுகளில் ஈடுபடாதபடி எச்சரிப்புடன் இருப்போம். அடுத்தவரைக் குறை கூறுவதும், குற்றப்படுத்துவதும், அதை எல்லாரிடமும் பரப்புவதும், போதாதற்கு அவர்களை நியாயந்தீர்க்கும் கொடிய பாவத்துக்கு இடமளிப்பதும் நமது வாழ்வில் வேண்டாமே. நமது பாவங்கள் குற்றங்கள் யாவையும் தம்மேல் ஏற்றுக்கொண்டு நம்மை மீட்டெடுத்த இயேசுவின் ஒளியின் பிள்ளைகளாக, இந்த அந்தகாரம் சூழ்ந்த உலகில் வெளிச்சங்களாகப் பிரகாசித்து, பிறரையும் அந்த வெளிச்சத்தில் வழிநடத்துகின்றதான தேவனுக்குப் பிரியமான வாழ்வை வாழ நம் ஒவ்வொருரையும் தேவாவியானவர் பெலப்படுத்துவாராக. ஆமென்.