அறிமுகம்: தீர்க்கதரிசிகளின் சிறிய புத்தகங்கள்
• அருள்திரு. ராபர்ட் ரீட் •
(ஜூலை – ஆகஸ்ட் 2026)
கடமையை விட்டு ஓடின தீர்க்கதரிசி
ஜோனத்தான் ஸ்விஃப்ட் (Jonathan Swift) எழுதியுள்ள கீழ்க்கண்ட வரிகள், சிறிய தீர்க்கதரிசன புத்தகங்களிலிருந்து நாம் அறியும் ஒரு மனிதன் காட்டிய அலட்சியத்தைப் பிரதிபலிக்கின்றன.
“நாங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட சிலர்
மற்றவர்கள் யாவரும் நாசமாவார்கள்
மோட்சத்தில் உனக்கிடமில்லையே
மோட்சம் நெருக்கி நிரம்பிவிட எங்களுக்கு
விருப்பமில்லையே!”
இந்த இதழில் அந்த மனிதனைப் பற்றி நாம் சிறிது சிந்திப்போம். இதில் பரிதாபகரமான காரியம் என்னவென்றால்; இன்று தேவனுடைய கிரியைகளைப் பற்றி அநேக கிறிஸ்தவர்களும் அதேவித அலட்சியமாயிருக்கிறார்கள்.
யோனாவின் புஸ்தகத்தை கவனிப்பீர்களானால் அதில் 48 வசனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அவைகள் முழுவதிலும் கர்த்தருடைய ஒப்பற்ற பிரசன்னம் இருக்கின்றன. ஏனென்றால், கர்த்தர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, அசைக்கப்பட முடியாத இருதயமுடைய ஒருவனை அறிவுறுத்தும்படி, தம் கரம் நீட்டி அவனைப் பிடித்துக்கொள்ளுகிறார். இந்தப் புஸ்தகம் ஒரு மனித சரீரத்தைப் போன்று இருக்கிறது. சரீரத்தில் எந்த இடத்தில் குத்தினாலும் அங்கே இரத்தம் ஒழுகுகிறது. யோனா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தை எங்கே குத்தினாலும், கர்த்தருடைய வல்லமையான கரத்தின் அற்புதங்களினால் இரத்த ஒழுக்கு ஏற்படுகிறது. முதலாவது சடுதியான புயல் காற்று உண்டாகக் காண்கிறோம். அதன்பின் யோனாவை கடலில் தூக்கிப்போட்டவுடன் அமைதி நிலவுகிறது. ஒரு அசாதாரணமான பெரிய மீனுக்கு, திக்குமுக்கு அடித்து போராடிக்கொண்டிருக்கிற மனிதன் ஒருவனை உண்ணுவதற்கான பசி சரியான நேரத்தில் உண்டாகிறது. அதே விதமாக சரியான நேரத்தில் அந்த மீனுக்கு அஜீரணம் உண்டாக, யோனாவை கடற்கரையில் வாந்தி பண்ணிவிட்டது. ஒரு ஆமணக்குச் செடி, ஒரு பூச்சி, கீழ்க்காற்று இவைகளெல்லாம் கர்த்தரால் நியமிக்கப்படவும் அவைகள் எல்லாம் இசைந்து செயல்படுவதையும் பார்க்கின்றோம்.
நினிவே பட்டணத்தின். தலைவனிலிருந்து சாதாரண மனிதன் வரைக்கும் எல்லோரும் தங்கள் பாவங்களை விட்டு விலகி இரட்சிக்கப்படுகிறார்கள். இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் கொண்ட பிள்ளைகளுக்கு, யோனாவின் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் அற்புதங்களை விளங்கிக்கொள்வதற்கு பிரச்சனை ஏதும் இராது. ஏனென்றால் நாமெல்லாரும் அவருடைய நோக்கங்களுக்கு இசைந்து நடக்கும் ஜனமாயிருப்பதற்காக கர்த்தர் வானத்தையும் பூமியையும் மட்டுமல்லாமல் கடலையுங்கூட அசைக்க ஆயத்தமாயிருக்கிறார்.
இந்த புஸ்தகத்தின் முக்கியமான பொருள், சொல்லப்பட்ட பெரிய மீனோ அல்லது மனந்திரும்பின மகா நினிவே பட்டணமோ அல்ல. அந்தப் பொருள் ஒரு மனிதனையும் அவனுக்கு அவன் தேவனுடன் இருந்த உறவையும் மையமாகக் கொண்டுள்ளது. தேவனுடைய சீஷத்துவத்தின் பள்ளியில் படிக்கச் சென்ற மிகவும் புத்தியீனமான மாணவர்களில் ஒருவனான யோனாவையே மையமாகக் கொண்டுள்ளது. அவன் பள்ளியில் கற்றுத்தேறி வெளியே வரவில்லை. அவன் தேர்வுகளிலெல்லாம் அநேகமாய் மிகக்குறைந்த மதிப்பெண்கள்தான் எடுத்தான். ஆகையால் தேவன் அவனை ஒதுக்கிவைக்க வேண்டியதாயிருந்தது.
முதலாம் அதிகாரத்தில் அவனை சந்திக்கும்போது அவன் தேவனுக்கு விரோதமாக எதிர்த்து நிற்பவனாய்க் காண்கிறோம். நான்காம் அதிகாரத்தின் முடிவிலே அவனை விட்டுப் பிரியும்போதும் அவன் தேவனுக்கு எதிர்த்து நிற்பவனாகவே இருக்கிறான். தன்னுடைய அனுபவத்தின் மூலம் அடிப்படையான பாடம் எதையும் அவன் கற்றுக்கொள்ளவில்லை.
யோனாவின் குணாதிசயங்களில் இரண்டு முக்கியமான அம்சங்களை சுருக்கமாய் கவனிப்போம். அவையாவன: யோனாவின் மனிதத்தன்மை, யோனாவின் தாழ்மை.
1) யோனாவின் மனிதத்தன்மை:
நாம் யோனாவைக் கவனிக்கும்போது, அவனை நேசிக்கக்கூடிய நல்ல காரியங்கள் மிகச் சிலதான் அவனிடத்தில் காணப்படுகின்றன. அவன் பயங்கர ஜாதி வைராக்கியமும், மதவெறியும் நிறைந்தவனாய் இருந்தான். தேவன் நேசித்து பாதுகாத்த ஒரே ஜனம் இஸ்ரவேல் தேசத்தார் மட்டும்தான் என்று நிஜமாகவே நம்பினான். உண்மையிலே, உலகத்திலுள்ள மற்ற ஜனங்களெல்லாரும் தேவனுடைய விரோதிகள் என்றும் அவர்கள் கர்த்தரால் நொறுக்கப்பட வேண்டும் என்றும் கருதினான். ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கர்த்தரோடு முரண்பாடுள்ளவனாகவே இருந்தான்.
யோனா கர்த்தரோடு வேறுபட்டிருந்தான் (1:1-3)
அவனுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை மிகவும் தெளிவாகவும், எளிதாகவும் இருந்தது. யோனா கர்த்தருடைய ஒரு தீர்க்கதரிசி. அக்காலத்தின் ஜனங்களோடு தேவனுக்காக பேசுவதற்கு அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவன். ‘யோனா, நீ அசீரியாவின் தலைநகரமான நினிவேக்குப் போய் நான் அந்த ஜனங்களின் வாழ்க்கை நடைமுறைமேல் கோபமாய் இருக்கிறேன் என்று சொல்’ என்பதே. ஒரு சிறு பிள்ளைகூட இந்தச் செய்தியை உரைக்கக்கூடும். அவ்வளவு எளிதானதாக இருந்தது. யோனா ஏன் கர்த்தருடைய எண்ணத்திற்கு இணங்காதிருந்தான் என்று முதலிலேயே நமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. நான்காம் அதிகாரம் வந்தபிறகுதான் அதைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பப்பட்டிருக்கிறது. யோனா கர்த்தருடைய செய்தியை ஏற்றுக்கொண்டு அதை பிரசங்கிக்க மறுத்துவிட்டான்.
அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப் போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான் (யோனா 1:3). யோனா கப்பல் பிரயாணம் செய்தது “கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி” என்று இருமுறை மூன்றாம் வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இதிலிருந்து யோனா கர்த்தரிடத்தில் எவ்வளவு கோபமாயிருந்தான் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். ஒருவராலும் கர்த்தருடைய சமூகத்தினின்று விலகி ஓட முடியாது. யோனா கர்த்தரிடத்தில் தன் ஊழியத்தை ராஜினாமா செய்யலானான். “நீர் செய்யச் சொல்லும் இகழத்தக்க வேலையை செய்வதற்கு வேறே ஒருவரைத் தெரிந்துகொள்ளும். நான் நினிவே பட்டணத்திற்குப் போகப்போகிறதில்லை” என்று கூறுகிறான். தன்னுடைய பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதால் இனி தான் நனகு உழைத்து சம்பாதித்த விடுமுறைகாலத்தில் ஊர் சுற்றலாம் என்று எண்ணியிருந்திருப்பான் என்று நான் நினைக்கிறேன். ஆகையால்தான் தர்ஷீசுக்கு பிரயாணப்பட்டு சென்றுகொண்டிருந்த ஒரு கப்பலில் தனக்கு பயணச்சீட்டு வாங்கினான். இதைப்போலத்தான் கர்த்தர் இடும்பணியை ஏற்றுக்கொள்ள மனமில்லாத ஒவ்வொரு விசுவாசியினுடைய கதையுமாயிருக்கிறது. அவன் கர்த்தரைத் தட்டிக் கழித்துவிடும்படி தானே தன் பயணச்செலவையும் செலவு செய்து அவரிடமிருந்து தப்பி ஓட முயற்சி செய்கிறான். புத்தகத்தின் ஆரம்ப வசனங்களில் யோனா கர்த்தருடன் நடந்து கொண்டதைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?
சில கிறிஸ்தவர்கள் மூன்றாம் வசனத்தின் சில பகுதிகள் கர்த்தர் யோனாவிற்குக் காட்டிய ஒரு திறந்த வாசலைக் குறிக்கின்றன என்று நினைக்கக்கூடும்.
யோனா, சுலபமாய் தான் செய்தது சரி என்று சொல்லக்கூடும். கர்த்தர் தனக்கு வேறொரு இடத்தில் ஊழியம்செய்ய ஏற்பாடு செய்திருந்தார் என்று நிரூபிக்க முடிந்திருக்கும். எப்படியென்றால் அந்த கப்பல்காரன் பிரயாணப்பணத்தை வாங்கிக்கொண்டான். அவனுக்கு கப்பலில் தூங்கும் இடம் ஒன்றும் காலியாய் இருந்தது. அவன் நினிவேக்கு போகாமல் இருப்பதற்கு ஏற்றவாறு, சரியான சமயத்தில் கர்த்தர் அவனுக்கு இன்னொரு கதவைத் திறந்தார் எனலாம். திறந்த கதவுகள் எல்லா சமயங்களிலும் கர்த்தருடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறதில்லை என்பது உண்மை. நாம் மூன்றாம் வசனத்தை வேறு விதத்திலும் விளங்கிக்கொள்ளக் கூடாது. யோனா கர்த்தருடைய நோக்கத்திற்கு இணங்காமல் வேண்டுமென்று அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை என்றுதான் மூன்றாம் வசனத்தை விளங்கிக் கொள்ளவேண்டுமேயொழிய வேறு எந்த விதத்திலும் விளங்கக்கூடாது.
யோனா கர்த்தருடைய திட்டங்களை நிறைவேற்ற சிறிதளவு விருப்பமில்லாதவனாயிருந்தபோதிலும் கர்த்தர் அவனை விட்டுவிடவில்லை என்பது கருத்துடன் கவனிக்கத்தக்கது. அவர் விடாமல் அவனைப் பின்தொடர்ந்தார். அதற்கு பின் நடந்தவை நாம் தேவனைவிட்டு ஓடிப்போய் விடமுடியாது என்பதை அறியத் தருகிறது. கர்த்தருடைய ஜனங்கள் அவருடைய வழிகளை நிராகரிக்கும்போது, முடிவிலே அவர்கள் கர்த்தரை நோக்கி விடுதலைக்காக கூக்குரலிடும்வரைக்கும் அவர்களுக்கு கஷ்டங்களை அனுப்புகிறார் என்று யோனாவின் புஸ்தகத்திலே பார்க்கிறோம்.
ஸ்காட்லாண்டு (Scotland) நாட்டின் மலைகளில், ஆடுகள் சாதாரணமாக 10 அல்லது 12 அடி உயரத்தில் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பாறைகளிலிருந்து கீழே குதித்து அங்கிருக்கும் சுவையான புல்லைத் தின்பது வழக்கம். ஆனால், அந்நாட்டு மேய்ப்பர்கள், இவ்விதம் கீழ்ப்படியாமல் வழிவிலகி திரும்ப ஏறி வரமுடியாத நிலையிலிருந்த ஆடுகளை, உடனேயே தூக்கி தப்பிவித்துவிட மாட்டார்கள். மாறாக, குறித்த இடத்தில் இருந்த புல் எல்லாவற்றையும் நன்றாக சாப்பிட விட்டுவிட்டு அதன்பின் கொஞ்சநாட்கள் பசியால் கஷ்டப்பட வைத்து விடுவார்கள். அதற்குப் பிறகே அந்த ஆடுகளைத் தப்புவித்து மந்தையுடன் சேர்ப்பார்கள். இந்த வழியை அனுசரித்ததால் அந்த ஆடுகள் ஒரு விசேஷித்த பாடத்தைக் கற்றுக்கொள்ளும். அது என்ன? மேய்ப்பனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே!
அந்நாட்களில் இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளில் யோனா ஒருவன்தான் நினிவேக்குப் போக முடிந்தவனாயிருந்தான் என்று சொல்வதற்கில்லை. யோனா கர்த்தருடைய சொற் கேளாமல் அவரை எதிர்த்ததினால் கர்த்தர் இன்னொரு மனிதனை தீர்க்கதரிசியாக எழுப்பி அவனுக்கும் இதே கட்டளையைக் கொடுத்திருக்கக்கூடும். நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி (1:2). அந்த ஜனங்களின் வாழ்க்கை முறை எனக்குப் பிரியமற்றதாயிருக்கிறது என்று சொல் என்று கட்டளையிட்டிருக்கக்கூடும். ஆனால் கர்த்தர் யோனாவையே பின்தொடர்ந்தார். அதன் காரணம், கர்த்தருக்கு யோனா தேவையாயிருந்ததால் அல்ல, கடவுளை சேவிப்பதன் மூலம் யோனா அடையக்கூடிய மகிழ்ச்சி அவனுக்குக் கிடைக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்பினார்.
கர்த்தர் வரைந்த சுவிசேஷ அறிவிப்பின் பெரிய நிகழ்ச்சித் திட்டத்தில் அவனுக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று விரும்பினார். காரணத்துடன்தான் கர்த்தர் யோனாவை அந்தப் பெரிய மீனின் வயிற்றில் தங்கியிருக்க வேண்டிய ஒரு பயங்கரமான அனுபவத்திற்கு ஊடாகச் செல்லச் செய்தார். சில வேத நிபுணர்கள் யோனா அந்த மீனின் வயிற்றுக்குள் மரித்துப்போயிருந்திருப்பான் என்றும், கர்த்தர் அவனைத் திரும்ப உயிரோடு எழுப்பினார் என்றும் நம்புகிறார்கள். நம்மில் ஒருவரும் இவ்விதமான அனுபவத்திற்குள் கடந்துசெல்ல விரும்பமாட்டோம். மூன்று நாளைக்கு பின், கர்த்தருக்குக் கீழ்ப்படிவதற்கு யோனா சம்மதித்தபோது, அந்த மீன் கடலின் ஆழத்திலிருந்து கரைக்கு வந்த யோனாவை ஈரமில்லாத நிலத்தில் கக்கும்படி அவர் ஏவினார்.
(தொடரும்….)
மொழியாக்கம்: Bro.Johndurai