• பவானி மகேந்திரன் •
(ஜூலை – ஆகஸ்ட் 2026)

நமது வாழ்வில் மலைபோல தோன்றி. நிலைகுலைய செய்யும் அநேக காரியங்கள் நம்மை அச்சுறுத்தி சோர்வடையச் செய்கின்றன. இப்படியாக தோன்றுகின்ற இந்த சுமைகளை கமந்தவாறே தினந்தோறும் படுக்கைக்கு செல்லும் நாம் மறுபடியும் சுமைகளை சுமந்தவாறே காலையில் எழுகிறோம்.

அநேகருக்கு இந்த சுமைகளை இறக்கி வைப்பதற்கு விருப்பவில்லை. இறக்கிவைக்கும் வழிகளை காட்டிக்கொடுத்தபோதிலும் சிலர் அதை தலையில் சுமந்தவாறு எனக்கு பிரச்சனை, எனக்கு பிரச்சனை என்று பிரச்சனைகளை சுமக்க முடியாது விரக்தி அடைந்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். சிறு பிள்ளைகளும் சிறிய சிறிய விஷயங்களை தாங்கமுடியாது கோபம் அடைகின்றார்கள். சிறியவர் முதல் பெரியவர் வரையில் எவரோடு பேசினாலும் தங்களுக்கு மனஅழுத்தம் (Stress) இருப்பதாக கூறுகின்றார்கள்.

இப்படியான மனச்சோர்வுகள் அல்லது மனம் தளர்ந்துபோகும் சூழ்நிலை நமது தன்னம்பிக்கை, உற்சாகம், மகிழ்ச்சி, விசுவாசம் போன்றவற்றை இழக்கச்செய்கிறது. மனச்சோர்வு காரணமாக பலர் உடல் மனநல பாதிப்படைகிறார்கள். பல இலட்சம் மக்கள் விரக்திக்குள்ளாகிறார்கள், இந்த சந்தர்ப்பத்தை சத்துருவானவன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி இவர்களை மனச்சோர்வடையச் செய்து ஜெபிக்க முடியாமல். வேதத்தை தியானிக்க முடியாமல் கர்த்தரை விட்டு விலகி வாழ வழிநடத்துகின்றான். இவர்கள் சபையை விட்டு விலகவும் கிறிஸ்தவ நணபர்களை விட்டு விலகவும் ஊக்குவிக்கின்றான்.

வேதாகமம் நமக்குத் தெளிவாக சொல்லுகிறது: விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசாயா 28:16). கர்த்தர் நம்மோடு இருப்பதை விசுவாசித்தோமானால் பதறவேண்டிய அவசியமில்லை. தீமோத்தேயுவுக்கு பவுல் கூறுவதுபோல் “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்” (2தீமோ 1:12) என்பதை அறிந்திருக்கவேண்டும். அவர் எல்லாவற்றையும் விட பெரியவர் என்பதை விசுவாசிக்கவேண்டும். கர்த்தரின் பாதத்தில் அமர்வதை விட்டுவிட்டு சொந்த பலத்தினால் போராட தொடங்குவோமானால் தோற்று போய் விடுவோம்.

சகரியா 4:6ல் உன்னுடைய பலத்தினாலோ, பராக்கிரமத்தினாலோ அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இதினூடாக நமக்கு என்ன கற்றுக்கொடுக்கின்றார் என்றால் நம்முடைய சுய பலத்தினாலோ, கல்வியாலோ, பதவியாலோ, பணத்தினாலோ, பெயர் புகழ் பெருமையினாலோ நமக்கு முன்பாக வரும் தடைகளை, போராட்டங்களை, சவால்களை, நோய்களை. துன்பங்களை, கடன்களை எவற்றையும் வெல்ல முடியாது. அதை வெல்லுவதற்கு ஒரே வழி கர்த்தருடைய ஆவிமாத்திரமே. ஆவியானவர் கொடியேற்றுவார்.

சகரியா 4:7 பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தாவீது சிறு வாலிபனாக இருந்தபோதிலும் தனக்கு முன்பாக கோலியாத் மலைபோல நின்றதைக் கண்டு பயப்படவில்லை. ஏனெனில் தாவீதோடு இருந்தவர் – “இராணுவங்களின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர்” என்ற விசுவாசம் அவருக்குள்ளிருந்தது. ஆகவே அவருக்கு கோலியாத் மலைபோல் தெரியவில்லை. ஒரு சாதாரண குன்று போலவே தெரிந்ததால் அவர் வெற்றி கண்டார்.

நமது வாழ்விலும் அநேக காரியங்கள் நமக்கு மலை போல தோன்றலாம். விசேஷமாக நடை பெற்றுவரும் யுத்தம், வேலையில்லா திண்டாட்டம். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுகள் நமக்கு மலைபோல தோன்றுகின்றன. பல்வேறு வகையான கொள்ளை நோய்கள் நமக்கு மலைபோல தோன்றுகின்றன. இந்த மலைகளை நமக்கு முன்பாக நிறுத்துவோமானால் தோற்றுபோய் விடுவோம். இம்மலைபோன்ற பிரச்சனை நம்மை அழித்துவிடும். ஆனால் அவற்றுக்கும் மேலாக, கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்கு பாதபடி. நாம் கர்த்தரை நோக்கி பார்க்கும்போது மலை குன்றாக தோன்றும். அதை எளிதாக நாம் ஜெயித்துவிடலாம்.

எண்ணாகமம் 13-14 அதிகாரத்தில் மோசே மற்றும் ஆரோன் கர்த்தரால் வாக்குப் பண்ணப்பட்ட கானான் தேசத்தை சுற்றிபார்த்து வரும்படி யோசுவா காலேப் மற்றும் சிலரை அனுப்பினார்கள். யோசுவா, காலேப் இருவரும் அந்த நகரத்தை எளிதாய் ஜெயித்துகொள்ளலாம் எனவும் அது மகா நல்ல தேசம் எனவும், அது பாலும் தேனும் ஓடுகிற தேசமாக இருக்கிறது என கண்டார்கள், அவர்களோடு சென்ற மற்றவர்களோ தம்மை நடத்திவந்த கர்த்தரை மறந்து அந்த தேசத்திலுள்ள இராட்சதர் போன்ற ஜனங்களை கண்டு பயந்தார்கள். அங்கு எல்லோரும் தங்களைவிட பெரிய ஆட்களாய் இருந்ததைக் கண்டார்கள். இவர்கள் பயந்ததைக் கண்ட இஸ்ரவேல் ஐனங்கள் அனைவரும் புலம்பி அழுது மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் முறுமுறுத்தார்கள்.

அன்பானவர்களே, இன்று நாமும் இதேபோல்தான் நமக்கு முன்தோன்றும் பிரச்சனைகளைத் கண்டு கலங்கி, புலம்பி அழுது முறுமுறுக்கின்றோம். ஆதலால் கர்த்தர் நமக்கு லைத்திருக்கும் ஆசீர்வாதங்களை இழந்து போகின்றோம். அன்று யோசுவாவோடும் காலேபோடும் ஊரை சுற்றிப்பார்க்க சென்றவர்கள் இராட்சதர்களை கண்டார்களே அன்றி அந்த பாலும் தேனும் ஓடுகின்ற பரம கானானின் ஆசீர்வாதங்களை காணவில்லை.

இஸ்ரவேல் ஐனங்களுக்கு முன் நின்ற செங்கடல் மலைபோல் தோன்றியிருக்கலாம், பின்னால் வந்த எகிப்தியர் மலைபோல் தோன்றியிருக்கலாம். எரிகோ மதில் மலைபோல் தோன்றியிருக்கலாம். தாவீது ராஜாவுக்கு சவுலின் பயமுறுத்தல் மலைபோல் தோன்றியிருக்கலாம். யோசேப்பைக் குழியில் போட்ட பொழுது இனி என்னை விடுவிப்பார் யாரும் இல்லை என அந்த குழி மலைபோல தோன்றியிருக்கலாம். சிறைச்சாலை மலைபோல தோன்றியிருக்கலாம். தானியேலுக்கு சிங்கக்குகை. யாக்கோபுக்கு எதிர் கொண்டுவந்த ஏசா மலைபோல தோன்றியிருக்கலாம். எப்பேர்பட்ட தடைகள் வந்தாலும் இவர்கள் யாவரும் கர்த்தரை மாத்திரமே விசுவாசித்து மலைபோல தோன்றிய காரியங்களில் வெற்றி பெற்றனர். நாம் ஆராதிக்கும் தேவன் நிச்சயமாக நம்மை விடுவிப்பார் என்ற விசுவாசம் அவர்களுக்குள் இருந்தது. பவுல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பொழுது மலைபோல தோன்றிய சிறைச் சாலையின் அஸ்திபாரங்கள் அசைக்கப்பட்டன. எப்படி? அவர்கள் பயப்படவில்லை, விரக்தியடையவில்லை. முறுமுறுக்கவில்லை. கண்ணீர் சிந்தவில்லை. தேவனைத் துதித்து பாடினார்கள். அந்த துதி அஸ்திபாரத்தை அசைத்தது. அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

பேதுரு சிறையிலடைக்கப்பட்ட போது சபையார் கூடி ஜெபித்தார்கள். மலைபோல தோன்றிய சங்கிலிகள் தானாக கழன்று விழுந்தன. இயேசுவின் கல்லறைக்குச்சென்ற பெண்களுக்கு கல்லறையை அடைத்திருந்த கல் மலைபோல தோன்றியதால் இந்த கல்லை நமக்காக யார் புரட்டுவார் என்று பயந்தார்கள், “கல்லறையின் வாசலில் இருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது” (மாற்கு 16:3-4). ஆனால் அவர்கள் அருகே சென்றபோது அவர்களுக்காக அந்தக்கல் தள்ளப்பட்டிருந்தது.

அன்பான கர்த்தருடைய பிள்ளைகளே, பார்த்தீர்களா? நமது வாழ்வில் வரும் பெரிய கல் போன்ற தடைகளை கண்டு நாம் அஞ்சுகிறோமா? ˜கன்மலையாம் இயேசுவை நோக்கி பார்க்கின்ற பொழுது அவர் நமக்காக அந்த தடைகளை நீக்குவார். கல் போன்று தடையாயிருக்கும் கடன் பிரச்சனைகள், வீட்டு பிரச்சனைகள், திருமண காரியங்கள், தொழில் பிரச்சனைகள், வியாதிகள், இந்நாட்களில் அதிகமாய் காணப்படும் கர்ப்பப்பை கட்டிகள், முழங்கால் வீங்குதல், முதுகெலும்பு பிரச்சனைகள், புற்றுநோய்கள், கீழ்ப்படியாத பிள்ளைகள் நமது வாழ்க்கையில் பெரிய மலைபோல தோன்றுகின்றனவா? இந்த மலைகளை யார் அகற்றுவார் என்ற பயத்தோடு வாழ்கிறோமா?சர்வத்தையும் படைத்த கர்த்தர் பிரச்சனைகள் எல்லாவற்றையும் பார்க்கிலும் பெரியவராயிருக்கிறார். அவரை நோக்கி கூப்பிடும் வேளையில் மலைகளை அசையச்செய்வார். அசாத்தியங்களை சாத்தியமாக மாற்றுவார். ஆக சுயபலத்தால் போராடி தவறான முடிவுகளை எடுக்காதிருப்போம். நம்முடைய செயல்களை ஆண்டவரின் கரத்தில் விட்டுவிடுவோம்.

 மொழியாக்கம்: Bro.Johndurai