• லியோனர்ட் ரேவன்ஹில் •
(ஜூலை – ஆகஸ்ட் 2026)
எந்த மனிதனும் அவனுடைய ஜெப வாழ்வினைக் காட்டிலும் மேலானவன் அல்ல. ஜெபிக்காத போதகர் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஜெபிக்காத ஜனங்கள் திசைமாறி அலைகின்றனர். பிரசங்கபீடம் ஒருவனுடைய தாலந்துகளை காட்சிப்படுத்தும் கடையாக மாறக்கூடும். ஜெபஅறை தற்பெருமை காட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இன்றைய திருச்சபை ஜெபத்திற்குப் பதிலாக பல்வேறு காரியங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. நமக்கு அநேக ஒருங்கிணைப்பாளர்கள் உண்டு. ஆனால் ஒரு சில கடின உழைப்பாளர்களே இருப்பார்கள். அநேக விளையாட்டு வீரர்களும், கொடுப்பவர்களும் உண்டு. ஆனால் ஒருசிலரே ஜெபிக்கின்றனர். அநேக பாடகர்கள் உண்டு. ஆனால் ஒருசிலரே உண்மையாய்ப் பற்றி இருக்கின்றார்கள். அநேக மேய்ப்பர்கள் உண்டு. ஆனால் ஒருசிலரே யுத்த வீரர்களாக இருக்கின்றனர். அநேக பயங்கள் உண்டு. ஆனால் ஒரு சிலரே கண்ணீர் வடிக்கின்றனர். நவீனம் அதிகம் உண்டு; உருக்கம் குறைவாகவே உள்ளது. அநேக குறுக்கீட்டாளர்கள் உண்டு. ஆனால் பரிந்து பேசுபவர்கள் ஒரு சிலரே உள்ளனர். எழுத்தாளர்கள் அநேகம் உண்டு. ஆனால் ஒருசிலரே போரிடுகிறார்கள். இங்கே நாம் தோற்கும்போது எல்லாவற்றிலேயும் தோல்வி அடைகிறோம்.
வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இரண்டு முக்கியத் தேவைகள் உண்டு. ஒன்று தரிசனம்; மற்றொன்று தீவிரமான ஆர்வம். இவை இரண்டுமே ஜெபத்தால் உருவாகி பராமரிக்கப்படுவதாகும். பிரசங்க ஊழியம் ஒரு சிலருக்கு அருளப்பட்டிருக்கிறது. ஆனால் அனைத்திலும் சிறந்த ஜெபஊழியம் நம் அனைவருக்கும் அருளப்பட்டுள்ளது. “இன்றிரவு வெறும் ஜெபக்கூட்டம் மாத்திரமே உள்ளது. எனவே நான் இரவு ஜெபத்திற்கு செல்லமாட்டேன்” என சில ஆவிக்குரிய இளைஞர்கள் கூறுகின்றனர். அநேக பிரசங்கங்களைக் கண்டு பயப்பட சாத்தானுக்கு சிறிதளவு காரணமே இருக்கலாம். ஆனால் ஜெபிக்கிற தேவனுடைய மக்களுக்கு எதிராக அவனது பேய்த்தனமான இராணுவம் போரிட ஒன்று திரட்டப்படுகிறது என்பது கடந்த கால அவனது அனுபவங்கள் மூலம் நிரூபிக்கப்படுகிறது.
தற்கால நவீன கிறிஸ்தவர்கள், கட்டுதல் மற்றும் விடுவித்தல் பற்றிய பொறுப்பு இருந்தாலும், அதைப் பற்றி மிக குறைவாகவே அறிந்துள்ளனர். ஆனால், நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ… என்ற பொறுப்பு நம்மிடமே உள்ளது. சமீபத்தில் நீங்கள் இதில் எதையாவது செய்துள்ளீர்களா? தேவன் தமது வல்லமையை வீணாகச் செலவிடுவதில்லை. தேவனுக்காக பெரிய காரியங்களைச் செய்யவேண்டுமானால் தேவனோடு அதிகநேரம் செலவிட வேண்டும்.
மிக அதிவேகமான ஆகாய விமானம்கூட ஒரு ஆமைபோல் தோன்றுமளவுக்கு, உலகமானது நரகத்திற்கு நேராய் மிக வேகமாக செல்கிறது. ஆனால், அந்தோ! உலகத்தை உலுக்கும் எழுப்புதலுக்காக, இரவு முழுவதும் தேவனுக்காகக் காத்திருந்ததை நம்மில் சிலர் மாத்திரம் நினைவுகூர முடியும். நமது மனதுருக்கம் இன்னும் நகரவில்லை. சாரம் கட்டுதலை நாம் கட்டிடம் எனத் தவறாக எண்ணி விடுகிறோம். தேவனுடைய சத்தியங்களை நாம் தவறாக அர்த்தம் கொள்வதால், இன்றைய பிரசங்கங்களினால் ஆர்வத்தினை செயல் எனவும், குழப்பத்தினை சிருஷ்டிப்பு எனவும், இரைச்சல்களை எழுப்புதல் எனவும் எண்ணுகிறோம்.
ஜெபத்தின் இரகசியம் என்னவெனில், இரகசியமாக ஜெபித்தலாகும். பாவம் செய்கிற மனிதன் ஜெபத்தை நிறுத்தலாம். ஆனால் ஜெபிக்கிற மனிதன் பாவம் செய்வதை நிறுத்துவான். நாம் வறியவர்களாகவோ, திவாலானவர்களாவோ இருக்கலாம். ஆனால் ஒரு போதும் முறிந்து உடைக்கப்படுவதோ, வளைந்து போகவோ இல்லை.
ஜெபம் என்பது ஆழமான எளிமையைக் கொண்டது: அதேசமயம் எளிமையானதாக இருந் தாலும் ஆழமான பொருளைக் கொண்டது. ஜெபம் என்பது குழந்தைகளின் உதடுகள் பேச முயற்சிக்கும் படியான எளிமையானது. ஆயினும், அனைத்துப் பேச்சுகளையும் கடந்து பேசுகின்ற ஒரு பயபக்திக்குரிய மொழியாகும். அனல் பறக்கும், உணர்ச்சிமிக்க வார்த்தைகளின் திரட்சி தேவனிடத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அவரை அசைப்பதுமில்லை. பழைய ஏற்பாட்டில் பரிந்தபேசி ஜெபிப்பதில் மிகச் சிறந்த ஒருவருக்கு மொழி ஏதுமில்லாதிருந்தது. அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது. அவள் சத்தமோ கேட்கப்படவில்லை (1சாமு.1:13). இங்கு எந்த மொழியியலும் இல்லை. அங்கே விவரித்துக் கூறமுடியாத, வார்த்தைகளால் வெளிப்படுத்தமுடியாத பெருமூச்சுகளும் வருத்தங்களும் இருந்தன.
புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்தின் தரத்தை ஒப்பிடுகையில் நாம் இன்னும் தாழ்ந்த நிலையிலே இருக்கிறோமா? அதாவது நமது பிதாக்களின் வரலாற்று சிறப்பு மிக்க விசுவாசத்தினை (அதின் கருத்து மற்றும் செயல்பாடுகளை) அறியாதபடிக்கு, உணர்ச்சிவசப்பட்ட விசுவாசத்தை மட்டுமே கொண்டிருக்கிறோமா? ஒரு வணிகருக்கு மூலதனம் எப்படி முக்கியமோ அதுபோன்று விசுவாசிக்கு ஜெபம் முக்கியம்.
தற்கால சபை அமைப்பில் கவலைக்கு முக்கிய காரணம் பணம் என்பதை யாரேனும் மறுக்க முடியுமா? தற்கால நவீன சபைகளை அதிகமாக சோதிக்கிற இந்தப் பிரச்சனை புதிய ஏற்பாட்டு சபையை மிகக் குறைவாகவே பாதித்தது. நாம் பணத்தைச் செலுத்துவதில் கவனம் வைக்கிறோம். அவர்கள் ஜெபிப்பதில் கவனம் செலுத்தினார்கள். நாம் பணம் செலுத்தியபோது அந்த இடம் நிரம்பியது. அவர்கள் ஜெபித்தபோது அந்த இடமே அதிர்ந்தது.
புதிய ஏற்பாட்டை பொறுத்தமட்டில் ஆவியில் ஏவப்பட்டு, நரகத்தை அதிரவைத்து, உலகையே உடைக்கும் ஜெபத்தைப்பற்றி இவ்வளவு பெரிய பொறுப்பு ஒருசிலரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த வகையான ஜெபத்திற்கு மாற்று என்று ஏதுமில்லை. இதை நாம் செய்யவேண்டும். அல்லது அழிந்துபோக வேண்டும்.
மொழியாக்கம்: Bro.Johndurai