அறுவடையோ மிகுதி!
தியானம்: 2026 அக்டோபர் 9 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 4:35-36

அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு, எஜமான் … வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் (லூக்கா10:2).
கலாநிதி வூட்ரோ குரோல் என்பவர் 1991ல் வெளியிட்ட தனது புத்தகத்தில், 5.5 பில்லியன் உலக ஜனத்தொகையில், சுமார் 4 பில்லியன் மக்கள் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக அறியாதவர்கள் என்றும், சுமார் ஒரு நாளைக்கு 50 ஆயிரம்பேர் மரிக்கின்றார்கள் என்றும், அதில் அரைவாசிப்பேர் கிறிஸ்துவையே கேள்விப்படாமல் மரிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது 1991ம் ஆண்டின் அறிக்கை; அப்படியானால் இன்று இந்த எண்ணிக்கை என்னவாயிருக்கும் என்பதை சிந்திப்போம். ஆம், உலகின் பல பாகங்களில் மக்கள் கிறிஸ்துவை அறியாமலேயே அன்றாடம் மரித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இஸ்லாமிய நாடுகளை நோக்குவோமாயின், சவூதி அரேபியாவில் 93.4 வீதமும், ஏமனில் 99.9 வீதமும், துருக்கியில் 99.8 வீதமும் ஆப்கானிஸ்தானில் 99 வீதமும், பாகிஸ்தானில் 96.7 வீதமும் இஸ்லாமிய சகோதரர்களாக இருக்கின்றனர். இந்த நாடுகளில் ஏனைய மக்களில், வெளிநாடுகளிலிருந்து வேலை வாய்ப்புக்குச் சென்றவர்களும் உள்ளடக்கப்படுவர். எனவே, இந்த நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அண்மையிலுள்ள மாலத்தீவில் 99.4 வீதமான மக்கள் இஸ்லாமிய சகோதரர்கள். ஏனையோரில் வெளிநாட்டவர்களும் உள்ளடக்கப்படுகின்றார்கள். அங்கு சுவிசேஷ அறிவிப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. (இது 1993ம் ஆண்டின் புள்ளி விபரம்)
இயேசு தாம் வாழ்ந்த நாட்களிலேயே, பன்னிரு சீஷர்களை மாத்திரமல்லாமல், வேறே எழுபதுபேரை நியமித்து, தமக்கு முன்னே இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். எவரும் தேவராஜ்யத்திற்கு நீங்கலாகிவிடக் கூடாது என்பதில் இயேசு காட்டிய அவசரம் இன்று நம்மிடம் உண்டா?
வெளி நாடுகளில் சிறிய அளவில் ஊழியஞ்செய்யும் ஊழியர்களுக்காக நாம் ஜெபிக்கக் கடமைப்பட்டுள்ளோம். தேவன் இத் தேசங்களில் பெரிதான வாசல்களை திறக்கவேண்டுமென்றும், அநேக ஊழியர்கள் இந்த தேசங்களில் எழும்பவேண்டுமென்றும், மிஷனரிகள் பலர் இத்தேசங்களுக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் ஜெபிப்போம். அவர்களின் பாதுகாப்புக்காகவும் இரட்சிப்பின் செய்தியை மக்களோடு பகிர்ந்துகொள்ள தடைகள் நீக்கப்படவும் ஜெபிப்போம். இந் நாடுகளில் சாத்தானின் கோட்டை தகர்த்தெறியப்படவும், தேவன் வல்லமையாக கிரியை செய்து, அநேகரை இரட்சிக்கவேண்டுமென்றும் ஜெபிப்போம். கிறிஸ்து இல்லாமல் மரித்துக்கொண்டிருக்கும் இந்த மக்களுக்காக ஜெபிக்க நம்மில் யார் இன்று நம்மை ஒப்புக்கொடுக்கப் போகிறோம்?
ஜெபம்: நல்ல ஆண்டவரே, மிஷனரிபணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள இடங்களுக்காகவும், கடினமான இடங்களில் ஊழியம்செய்யும் ஊழியர்களது பாதுகாப்புக்காகவும், தைரியமாய் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென்.