உன்னை அனுப்புகிறேன்

தியானம்: 2026 அக்டோபர் 10 சனி | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 26:13-22

YouTube video

இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் (அப்போஸ்தலர் 26:18).

மேரி ஸ்லெசர் என்ற 16 வயதுடைய பெண் ஸ்காட்லாந்து நாட்டில் ஒரு வேலை ஸ்தலத்தில் ஒரு நாளைக்கு 10 மணி நேரங்கள் வேலை செய்து கொண்டு, ஓய்வு நேரங்களிலும், ஞாயிறு நாட்களிலும், தேவனுக்காக உண்மையுடன் ஊழியஞ்செய்து வந்தாள். ஆப்பிரிக்காவைக் குறித்த வாஞ்சை அவளுக்குள் ஏற்பட்டது. ஆப்பிரிக்காவிற்கு மிஷனரியாகச் சென்ற டேவிட் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டார் என்பதால், அவரது இடத்திற்கு யார் போவார் என்ற கேள்வி உருவானபோது, இவள் தன்னை ஒப்புக் கொடுத்தாள். 16 வயதில் இவள் மிஷனரியானாள்.

அந்நாட்களில் ஆப்பிரிக்காவில் அடிமை வியாபாரமும், கோத்திரங்களுக்கிடையிலான சண்டையும் களியாட்டும் கொடுமைகளும் நிறைந்திருந்தது. சிலர் நரமாமிசப் பட்சிகளாக இருந்தனர். தலைவன் ஒருவன் மரித்தால், அவனது மனைவி மக்களையும் கொலை செய்துவிடுவார்கள். அடுத்த உலகில் அவனுக்குத் துணையாக அவளே இருக்கவேண்டுமென்று இப்படிச் செய்வார்கள். இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிட்டால் அது பிசாசினால் உருவானது என்று சொல்லி, இரு குழந்தைகளையும் கொன்று தாயையும் காட்டுக்குள் விரட்டிவிடுவார்கள். இப்படிப்பட்ட இடத்திற்கு யார் போவார்?

இந்தக் கொடுமை நிறைந்த பிரதேசத்திலேயே 16 வயதான இளம் பெண்ணான மேரி ஸ்லெசர் ஊழியஞ்செய்தாள். ஆப்பிரிக்க பிள்ளைகளுடன் விளையாடி நட்புறவை ஏற்படுத்தினாள். அச்சுறுத்தல்கள், எதிர்ப்புக்கள் மத்தியிலும் ஓய்வுநாள் பாடசாலையை நடத்தினாள். எதிர்ப்பு காட்டியவர்களும் அவள் நடத்திய கூட்டங்களுக்குப் போகத் தொடங்கினார்கள். கொல்லப்படும் குழந்தைகளைக் காப்பாற்றி வளர்க்க ஆரம்பித்தாள். ஆப்பிரிக்கர்கள் அவளை “அம்மா” என்று அன்பாக அழைத்தனர். ஆப்பிரிக்காவில் அவள் இருக்கையில் தனது பெற்றோர் மரித்துவிட்டனர் என்ற செய்தியைக் கேள்விப்பட்டாள். சுகவீனம் காரணமாகத் தன் நாட்டிற்குச் சென்றவள், திரும்பவும் வந்து, தான் மரிக்கும்வரை ஆப்பிரிக்காவில் ஊழியஞ் செய்தாள்.

அன்று சவுல் என்ற வாலிபனும் தேவனின் அழைப்பைக் கேட்டான். மிக உயர்ந்த பதவியில் இருந்த அவன் எல்லாவற்றையும்விட்டு, பவுலாக, தன்னை அழைத்தவருக்கு தன்னைத் தந்தான். 16 வயது இளம் பெண்ணை மிஷனரியாக அழைத்தவர், தனது உலக பெருமைகளுக்குள் திளைத்திருந்த பவுலை அழைத்தவர், இன்றும் வாலிப சகோதர சகோதரிகளையும் மிஷனரி ஊழியத்துக்கு ஒப்புக்கொடுக்கும்படிக்கு அழைக்கிறார். நமக்கு அந்த அழைப்புண்டா? அந்த அழைப்பின் சத்தம் நமக்குள் தொனிக்குமானால் அதற்குக் கீழ்ப்படிய நாம் தயாராய் இருக்கிறோமா?

ஜெபம்: அன்பின் பிதாவே, இளம்பிராயத்திலே அநேக வாலிபர்கள் மிஷனரிகளாக எழும்ப தேவரீர் கிருபை செய்யவேண்டுமென்று தாழ்மையோடு ஜெபிக்கிறோம். ஆமென்.