சபையின் தவறுகள்
தியானம்: 2026 அக்டோபர் 13 செவ்வாய் | வேத வாசிப்பு: வெளி. 3:1-6

இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு, அவைகளையும் நான் கொண்டு வரவேண்டும் (யோவான் 10:16).
திருச்சபையிலே மிஷன் ஊழியமாவது, இயேசுவினால் ஆரம்பிக்கப்பட்டு சபையினூடாக நடத்தப்படுகின்ற ஒன்றாகும். புதிய ஏற்பாட்டுச் சபை ஒரு மிஷனரி சபை. ஆனால், இன்றுள்ள அநேக சபைகள் இயேசு கிறிஸ்துவின் பிரதான கட்டளைக்குக் கீழ்ப்படியாமைக்கான காரணம் என்ன? இன்றைய சபைகளில் பரவிவரும் ஒரு உபதேசமும் அதற்கொரு காரணமாகும். அதென்னவெனில், “எல்லா மதங்களும் மனிதனை இரட்சிப்புக்குள் வழிநடத்தும் வழிகளே; எல்லா மதங்களிலும் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கின்றார்” என்ற போலி உபதேசமே அது. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின்; கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்று வேதம் தெளிவாகப் போதிக்கின்றது (அப்.4:12). ஆனால், இன்று தேவ வார்த்தையை விசுவாசித்து, அதற்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, பகுத்தறிவையும், விஞ்ஞானத்தையும் கொண்டு வேதவசனத்தைத் திரிபுபடுத்திக் கேள்வி கேட்பவர்கள் பலர். திருச்சபை, தேவனது மிஷன் ஊழியத்தை நிறைவேற்ற பெரும் தடையாக இருப்பது நல்லதல்ல.
மிஷனைக் குறித்ததான சரியான போதனைகள் சபையில் இல்லாதது இன்னுமொரு காரணமாகும். கிறிஸ்து இல்லாதவர்கள் தொலைந்துபோனவர்கள்; கிறிஸ்துவை விசுவாசியாத பட்சத்தில் கொடிய நரக தண்டனைக்குள் ளாவார்கள் என்ற சத்தியத்தைக்குறித்த உணர்வு சபைகளில் குறைவாக இருக்கிறது. சபை விசுவாசிகள், பிரதான கட்டளை தங்களுக்குரியதல்ல, வேறு யாருக்கோ உரியதென்று எண்ணுகிற மனப்பான்மையும் ஒரு காரணமாகும். விசுவாசிகளின் கூட்டமே சபை. எனவே, ஒவ்வொரு விசுவாசியும் மிஷன் ஊழியத்தில் பங்குகொள்ளவேண்டும். மிஷனரி தரிசனமற்ற ஊழியரும், ஊழியத்திற்குப் போதகரை மாத்திரம் சார்ந்திருக்கும் விசுவாசிகளும் இன்னும் சில காரணங்களாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்தவர்களின் சுயநலமான போக்கே, மிஷனரி ஊழியத்தில் சபை ஈடுபடாமைக்கு முக்கிய காரணமாகும். ஆத்தும ஆதாயம், சபை ஸ்தாபித்தல், சீஷத்துவம் என்பதற்குச் செவிகொடுத்தால், தன் பணத்தையும் நேரத்தையும் சொகுசான வாழ்வையும் இழக்கவேண்டி வருமே என்று பலர் எண்ணுகிறார்கள். ஓடாமல் ஓரிடத்தில் தங்கியிருக்கும் தூய தண்ணீர் இலகுவில் மாசுபட்டு, கிருமிகளைத் தோற்றுவிக்கும். விருத்தியடையாத ஊழியமும் அவ்வாறே இருக்கும். இன்று நாம் பங்களிப்புச் செய்யும் நமது சபை எந்த நிலையில் இருக்கிறது? அது விருத்தியடையவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், அதற்காக நீங்கள் என்ன பங்களிப்பு கொடுக்கிறீர்கள்? மிஷனரிப் பணியைக்குறித்த பொறுப்பை நமதுசபையிலே உணர்த்த நம்மால் முன்வர முடியுமா?
ஜெபம்: பரமபிதாவே, சபை மிஷன் பணியில் பின்தங்கி இருப்பதற்கு எங்களது சுயநலங்கள் காரணமாகிவிடாதபடி காத்தருளும். ஆமென்.